Tuesday, December 14, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 2விநாயகர் வழிபாடு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர்தம் கை.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.


பிரதோச வரலாறு :

உலகாளும் நாயகியான அன்னை பராசக்தி தன்னுடைய பீடத்தில் அமர்ந்திருக்குங்கால், தேவலோகக் கன்னிகையை நடனம் ஆடப் பணித்தார். அன்னையின் ஆவலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அக்கன்னிகை, அற்புதமாக நடனம் ஆடி அன்னையை உளம் குளிரச் செய்தாள். அன்னையும் உளம் குளிர்ந்து, அவள் நாட்டியத்தை மெச்சி, தன் கழுத்தில் அணிந்திருந்த மலர் மாலையை எடுத்து அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அக்கனிகையையும் பேரானந்தம் கொண்டு அம்மாலையுடன் செல்லும் வழியில் துர்வாச முனிவரைச் சந்திக்கிறார். அம்மாலையின் மகத்துவம் குறித்து முனிவரிடம் அப்பெண் கூறக் கேட்ட துர்வாசரும் மனம் மகிழ்ந்து அப்பெண்ணை வாழ்த்தினார். அப்பெண்ணும் அம்மாலை தன்னிடம் இருப்பதைவிட இம்மாமுனிவசம் இருப்பதுதான் சிறப்பாகும் என்றெண்ணி, அம்மாலையை முனிவர் வசம் ஒப்படைத்தார்.

துர்வாச முனிவரும் அம்மாலையை நேராக தேவலோகம் எடுத்துச் சென்று, தேவேந்திரனிடம் அம்மாலையின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறி அதை அவருக்கே அளித்தார்.

தேவேந்திரனோ, அம்மாலையைத் தன் வஜ்ராயுதம் கொண்டு வாங்கி, அதனை அருகில் நின்று கொண்டிருந்த யானையிடம் கொடுக்கிறார். யானையோ அதன் மகத்துவம் உணராமல் கீழே போட்டு காலால் மிதித்து விடுகிறது. இதனைக் கண்ணுற்ற துர்வாச முனி கடுங்கோபம் கொண்டு, தேவேந்திரனையும், தேவலோகத்தை சேர்ந்த அனைவரையும் கடுமையாகச் சபித்து விட்டுச் சென்றார். அதன் காரணமாக தேவேந்திரனும் ஏனைய தேவலோகத்தாரும், சாப விமோசனம் பெற்று, நரை, மூப்பு, மரணம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழும் ஆவல் கொண்டு நாரத முனியின் துணையுடன், பிரம்ம தேவனிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்ம தேவனும் அவர்களை, பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனிடம் அழைத்துச் சென்று நடந்த விவரங்களைக் கூறி, பாபவிமோசனம் நாடினர்.

திருமால் தேவர்களிடம், அவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் எடுத்து உண்டால், அவர்களின் சாபம் நீங்கி, பாபவிமோசனம் பெற்று, அசுரர்களின் பிடியிலிருந்து விலகுவதோடு, மரணம் நீங்கி என்றும் இளமையான தோற்றம் பெறலாம் என்றுரைத்தார். நாரதரும், யார் யார் பாற்கடலைக் கடைதல் நலம்தரும் என்பதனையும் திருமாலிடமே கேட்க, அவரும், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தே கடைதல் வேண்டும் என்றும், தேவர்கள் வால் பகுதியையும், அசுரர்கள் தலைப் பகுதியையும் பிடித்துக் கடைதல் வேண்டும் என்றருளினார்.

இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடலை அடைந்து மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற அரவத்தை தாம்புக் கயிறாகவும் அமைத்து திருப்பாற்கடலைக் கடையும் சமயம், மந்திரகிரி மலை சாய்ந்து, கடலில் மூழ்கிப் போகும்போது தேவேந்திரன் திருமாலிடம் ஓடி முறையிடுகிறார். ஸ்ரீமந்நாராயணன் அவ்வேளையில், “கூர்ம அவதாரம் “ எடுத்து கடலுக்குள் சென்று, தன்னுடைய முதுகின்மேல் மந்திரகிரி மலையை தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். அந்த நாள் பத்தாவது திதியான தசமித் திதியாகும்.

பிறகு தொடர்ந்து தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்து வரும்போது, மறுநாள் 11 வது திதியான ஏகாதசித்திதியாகும். வாசுகி வலி யினால் ஏற்பட்ட துன்பம் தாளாமல் கடலில் நஞ்சை உமிழ்ந்தது. கடலிலும் நஞ்சு உண்டானது. கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி கக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து “ஆலாலம்” ஆனது. கடல் முழுவதும் நஞ்சாய் ஆனது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணு மூர்த்தியும் கடும் நஞ்சினால், நீலநிறமானார். இதைக் கண்ணுற்ற வானவர்கள் அஞ்சி, நடுங்கினர். திரும்பவும் திருமாலின் பதம் நாடினர். திருமாலும், நான்முகனும் சேர்ந்து, தேவர்களை திருக்கைலாயம் செல்லும்படிக் கூறினர். அனைவரும் ஒன்று சேர்ந்து கைலாயம் விரைந்தனர்.

திருக்கையிலையில் சிவபெருமான் சந்நிதியில் நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி, காவல் புரிந்து கொண்டிருந்தார். தேவர்கள் முதலில் நந்திதேவனை வணங்கி, திருப்பாற்கடலைக் கடையவேண்டிய காரணத்தையும், அதனால் நேர்ந்த இன்னல்கள் குறித்தும் விவரமாக நந்திதேவனிடம் கூறி, அந்த இன்னல் தீர்க்கும் பொருட்டேத் தாங்கள் அகிலாண்டகோடி நாயகனைக் காண வந்த சேதியும் கூறினர். நந்திதேவனும் இவர்களை வாயிலிலேயே நிறுத்திவிட்டு, சிவபெருமானிடம் சேதி சொல்லி, சர்வேஸ்வரனின் அழைப்பிற்குப் பிறகு தேவர்கள் , நவரத்தினமணி பீடத்தில் எழுந்தருளியுள்ள சிவ சக்தியைக் கண்டு, தங்கள் இன்னல்களைக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டி இறைஞ்சினர்.

சிவபெருமானும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் பொருட்டு, அருகில் நின்றிருந்த தன் தொண்டனான சுந்ததரை திருநோக்கம் செய்து, “ சுந்தரா, அந்நஞ்சை, அவ்விடம் அகற்றி, இவ்விடம் கொண்டுவருவாயாக”, என்று பணித்தார். சுந்தரரும், மாலைப்பொழுதான காரணத்தினால், வானவர்கள் அணுக இயலாத அக்கொடிய விடத்தை நாவற்கனி போன்ற வடிவத்தில் திரட்டி, உருட்டிக் கொண்டுவந்து சிவபெருமானிடம் கொடுத்தார்.திரிசடைப்பெருமானோ, அக்கொடிய விடத்தை, அமரர்களான தேவர்கள் வாழும் பொருட்டு அமுதம் போல அதனை உண்டருளினார். அவ்விடம் உள்ளே சென்றால், உள் முகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமே என்றும், உமிழ்ந்தாலோ வெளிமுகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமாதலாலும், உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார்.

இக்காரணத்தினாலேயே எம்பெருமானின் செம்பொன்மேனியானது, கன்னங்கரிய மேனியானது. இக்காரணத்தினாலேயே ஐயனுக்கு, “மணிகண்டன்” மற்றும் “திருநீலகண்டர் “ என்றும் பெயர் ஏற்பட்டது. இது நிகழ்ந்தது, ஏகாதசி திதியன்று மாலைப் பொழுதாகும். சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலைக் கடையும்படிப் பணித்தருளினார். அவ்வாறே, தேவர்களும், அசுரர்களும் சென்று திரும்பவும் திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.

தேவர்கள் கடையும் போது, அதிலிருந்து, இலட்சுமி ஐராவதம் என்ற வெண்யானை, காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைஸ்வரம் என்ற குதிரை முதலானவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இலக்குமியைத் திருமால் எற்றருளினார். மற்றவற்றை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தேவர்கள் தொடர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தனர். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றலாயிற்று ! தேவர்கள் அதனைப் பகிர்ந்து உண்டனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சியில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து , இவற்றுக்குக் காரணமான ஈசனையே வணங்க மறந்து விட்டனர். பிறகு பிரம்மதேவர், தேவர்களின் தவறை உணரச் செய்து, அவர்களை சிவபெருமானிடம் சென்று பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளும்படி வேண்டச் செய்தார்.

பரம்பொருளான எம்பெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு திருக்கயிலையில் அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையிலான, பிரதோச வேளையில் தம் திருமுன் இருந்த ரிசப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகையைக் காண திருநடனம் செய்தருளினார்கள். தேவர்கள் அதைகண்டு பேரானந்தம் கொண்டு, சிவபெருமானை வணங்கினர். அதுமுதல், திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோச காலம் என்று வழங்கலாயிற்று. இது கார்த்திகை மாதம் சனிக் கிழமையன்று நடந்ததால் சனிப்பிரதோசமாகும். பிரதோசம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியதாம். அனைத்து உலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என்று அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும்.

பிரதோச விரதம் இருக்கும் முறை குறித்து இனிக் காணலாம்.

தொடரும்.

4 comments:

  1. அழகாய் விளக்கியுள்ளீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  2. நன்றிங்க ராமலஷ்மி.

    ReplyDelete
  3. பிரதோஷ கால வழிபாட்டை பற்றிய விளக்கமும் புராணக்கதையும் சொன்னவிதம் அழகு. தெரிந்தது தான் என்றாலும் அலுப்பதில்லை அவனைப் பற்றி படிக்கும் போது

    ReplyDelete