சண்டீஸ்வரர் வழிபாடு
பொன்னக் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற்கு அமைக்கும் பொருள் அன்றி
மின்னும் கலன்ஆடைகள் பிறவும்
வேறுதமக்கு என்று அமையாமே
மன்னாந் தலைவன் பூசனையின்
மல்கும் பயனை அடியார்கள்
துன்னும்படி பூசனை கொள்ளும்
தூயோன் அடித்தா மரைதொழுவாம்.
நலம் தரும் நந்தி
கந்தனின் தந்தையைத்தான் கவணமாய் சுமந்துசெல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தை காக்க வந்தாய்
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்து எம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்:களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவை சூடிடும் நந்தி தேவா
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
தஞ்சையில் பெரியநந்தி தளிருடன் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சடனாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.
பஞ்ச புராணம்
இடரினுந் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்த நஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமா
றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவாஉன தின்னருளாவடுதுறை அரனே --- தேவாரம்
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உன்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
ஈசன்னடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்
கண்னுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்குமூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
வலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்து அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவானதத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தே ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியன்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கும் அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணிக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியெ
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் என் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.
ஆலய தரிசன விதி முறைகள் :
1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.
2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.
3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.
4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.
5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.
6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.
7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.
8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.
9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.
10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.
தீபம் ஏற்றும் முறை :
வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.
நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.
தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :
கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.
மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.
வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.
தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.
திரி ஏற்றும் முகப்பக்கம் :
ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.
இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.
மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.
நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்
ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.
திரி தரும் பலன்கள் :
பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.
தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.
வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.
வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்
புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.
புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
அம்மை துதி :
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.
முருகப் பெருமான் துதி:
கொன்றை வேணியார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகினார்.
அம்பலவாணன் துதி :
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக்
கருத்து இருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்ததியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே.
குறிப்பு :
வழிபாட்டின் தொடக்கத்திலும் நிறைவிலும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி மகுடம் சொல்வது நலமாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி !!
திருச்சிற்றம்பலம்.
நிறைவடைந்தது.
இதுவரை நான் அறிந்திராத பல புதுமைகள் இதில் உணர்ந்தேன் . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க....
ReplyDelete"ஆலகாலமும் அமுதாகும்" தலைப்பிலான நான்கு பதிவும்... நல்ல பதிவு...! அனைவரும் புரியும்படி எளிய நடையில் சொல்லியுள்ளீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆனால்.. இது எனக்கு புதிய விஷயமாய் தெரியவில்லை...
தாங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும்... எனது 8 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை கோடைக்கால விடுமுறை நாட்களில் ... சங்கராசாரியாரியரின் நேரடி பார்வையில்... இந்து சமய மன்றம் நடத்திய 30 நாட்கள் வகுப்பில் கற்றதுதான்... அவ்வகுப்பில் சிவபுராணம், ராமாயணம், மகாபாரதம், நாலடியார், திருகடுகம், திருவருட்பா, பெரியபுராணம், திவ்யப்ரபந்தம் போன்ற இந்து சமயத்தின் அனைத்து சம்ஸ்கிருத மற்றும் தமிழ் வழியில் கற்று, அதோடு வழிபாடு, வழிபடும் முறை போன்றவற்றை பலப்பல சான்றோர்கள் கற்பித்து அதில் பயின்றவன்... அதோடு சங்கராசாரியாரியரின் ஒப்பம் பெற்ற சான்றிதழும் அவரிடம் பெற்றிருக்கிறேன்...
அதோடு சிவபுராணம், மகிஷாசுரமர்தினி ஸ்லோகம், கந்தசஷ்டிகவசம் போன்ற பலபல ஸ்துதிகளை இப்போதும் மனப்பாடமாய் என் மனதில்...
இவையெல்லாம் என் அன்னையார் தினமும், அவருடன் அமர்ந்து படிக்கச்சொல்லி, எங்களையும் மனப்பாடம் செய்ய வைத்தார்...
எல்லாம் என் அம்மாவின் கைங்கர்யம்....