Sunday, December 12, 2010

ஆலகாலமும் அமுதாகும் !ஆலகாலமும் அமுதாகும் !

பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.

நால்வர் பெருமக்கள் துதி.

இப்பூவுலகின்கண் வாழும் உயிரினங்களில் ஆறறிவுப் படைத்த மனித இனம் சாலச் சிறந்ததொரு படைப்பாகும்.ஆதி காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள், ஞானிகள் ஏனையோர், ஆலயங்களில் உருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ள களங்கமற்ற பரம்பொருளாகிய சிவத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு, நித்திய ஆனந்தம் பெற்றனர் என்றால் அது மிகையாகாது.

ஆதிகாலந்தொட்டே நாயன்மார்கள், சந்தானாச்சாரியார்கள் போன்றவர்கள் சைவத்தை ஒளியூட்டி பிரகாசிக்கச் செய்வதில் பெரும் பணியாற்றியுள்ளனர்.சைவாலயங்களின் வழிபாட்டில் பிரதோச கால வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.

மகாப் பிரதோசத்தின் மகிமை :

* சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது.

* ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும்.

* பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும்.

* நூற்று இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

* சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

* பிரதோச விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது திண்ணம்.

துன்பங்கள் [ விக்கினங்கள் ] அனைத்தையும் நிவர்த்தி செய்யும் என்பெருமான் விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார்.இம்மையிலும், மறுமையிலும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது.

கிறித்துவ மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு.அம்முறையில், மத குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.

இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம்.

ப்ர - தோசம் - மிக்க தோசம், எனப் பொருள்.
அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான் பிரதோச வழிபாடு.

பிரதோச காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு நித்தியானந்தம் அளிக்கின்றார்.

பிரதோச காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும் தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம் இயம்புகின்றது.

பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும் மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அக்காலந்தொட்டு, வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மொழுகுவது இலட்சுமி கடாட்சம் அருள்வதாகவும் பெரியோர் கூறுவர்.

ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோச காலத்தில்.

தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக அருள்பாலித்து, அமிர்தத்தை அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச காலமாகும்.

இப்பிரதோச நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த மறுக்க இயலாத உண்மையாகும்.

தொடரும்.

பி.கு.: பிரதோச விரதம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியது. அனைத்துலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என அனைவரும் ஒன்று கூடி விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும். பிரதோச வரலாறும், விரதம் இருக்க வேண்டிய முறை குறித்தும் தொடர்ந்து காணலாம்.

11 comments:

 1. பல அறியாத தகவல் அறிந்தேன் மிக்க நன்றி..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

  ReplyDelete
 2. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. எங்கம்மாவப் படிக்கச் சொல்றேன்.

  ReplyDelete
 4. அருமையான தொகுப்பு

  ReplyDelete
 5. \\வித்யா said...
  எங்கம்மாவப் படிக்கச் சொல்றேன்.\\

  நீங்களும் படிக்கலாம் வித்யா:)

  \\பிரதோச விரதம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியது.\\

  இது பற்றி ஒரு சுவையான விஷயம் உண்டு. தீவிர வைணவர்கள் சிவன் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் பிரதோஷ வழிபாடு சமயதின்போது அவர்களுக்கும் ஏதாவது வழிபாடு செய்யவேண்டும் என்று தோன்றும். பிரதோஷ காலத்தில் அவர்கள் நரசிம்மனை வழிபடுவார்கள். காஞ்சிப் பெரியவர் சொன்னது இது. இன்றும் கூட அஹோபில மட ஜீயர் பிரதோஷ நாளன்று நரசிம்மனை வழிபடுவார் என்று கேள்வி

  ReplyDelete
 6. நல்ல ஆன்மீக பகிர்வு. நானும் பிரதோஷத்துக்கு செல்வேன்.

  ReplyDelete
 7. ப்ரதோஷங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. நன்றி சகோதரர் ம .தி சுதா அவர்களே.

  ReplyDelete
 9. நன்றி மீனு, ராமலஷ்மி.

  ReplyDelete
 10. நன்றி, பவள சங்கரி, உங்க வலைப்பதிவின் சுட்டி தெரியும்னாலும் அடிக்கடி வர முடியறதில்லை! :(

  ReplyDelete