Thursday, December 16, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 3.





பிரதோச விரதம்

பிரதோச விரதம், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதி அன்று நீராடி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.சுவாமிக்கும், அம்பிகைக்கும் அபிசேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது சிவன் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிசேக ஆராதனைகள் பிரதோச காலத்தில் நடக்கும். அதில் கலந்து கொண்டு அருள் பெறலாம். பிரதோச பூசையன்று முதலில் நந்தி தேவருக்கு பூசை நடைபெறும். சிவபெருமான் பிரதோச காலத்தில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருநடனம் புரிந்தார்.

இப்பிரதோச வேளையில் பூலோகம் மட்டுமல்லாமல், ஈரேழுலகத்தில் வசிப்பவர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரதோசத்தின் வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும். குறிப்பாக தேவர்கள் தாங்கள் பிரதோச வழிபாடு செய்வதோடு அவ்வழிபாடு செய்பவர்களுக்கும் தாங்களே முன்வந்து உதவுவதாக புராணங்கள் கூறுகின்றன.

திருவாரூரில் உள்ள சிவாலயத்தில்தான் முதன் முதலில் பிரதோச பூசை ஆரம்பித்துள்ளது. தேவலோகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தான் முதன் முதலில் இப்பூசையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். பிரதோச தினத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்து பிரதோச தரிசனம் முடிப்பது அதிக நற்பலனை அளிக்கவல்லது என்பது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ‘பிர’ என்பதன் பொருள் பாவம், அந்த பாவத்தைப் போக்கும் தோசம் என்பது நேரம் என்பர் ஆன்றோர்.

பிரதோச காலத்தில் சிவபெருமான் அனைத்துப் பொருட்கள், அதாவது உயிருள்ள மற்றும் ஜடமான அனைத்துப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கின்றார். அதனால் பிரதோச காலம் என்பது அகிலாண்ட நாயகனான பரமேச்வரனை தியானம் செய்வதற்கும் அந்த ஈச்வரனையே தம் வசப்படுத்திக் கொள்வதற்கும் உகந்த காலமாகும். பிரதோச வேளையில் ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் போது உடல், மனம் இரண்டும் தூய்மை பெறுகிறது. அதனால் பல நன்மைகளும் விளைகின்றது. பிரதோச காலத்தில் சிவபுராணப் பாடலைப் பாடி வழிபடுதல் நலம்.

பிரதோச காலங்களில் ஐந்து வகையுண்டு.

1. நித்ய பிரதோசம் : தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையுள்ள காலகட்டமே நித்ய பிரதோசம் எனப்படும்.

2. பஷ பிரதோசம் : வளர்பிறையில் [ சுக்லபட்சம்] சதுர்த்தி திதியில் மாலைக் காலமே பஷ பிரதோசம் எனப்படும்.

3. மாத பிரதோசம் : தேய்பிறையில்
[ கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் வரும் பிரதோசமே மாத பிரதோசம் எனப்படும்.

4. மஹா பிரதோசம் : தேய்பிறையில் [கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் சனிக்கிழமையில் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹாபிரதோசம் எனப்படும்.

5. பிரளய பிரதோசம் : பிரளய காலத்தில் இவ்வுலகின் அனைத்து சீவராசிகளும் சிவனிடம் ஒடுங்கும். அதுவே பிரளய பிரதோசமாகும்.

பிரதோச பூசை செய்தால் ஒருவருக்குக் கிட்டும் பலன்கள்.

1. துன்பம் நீங்கி இன்பம் எய்துவர்.

2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.

3. கடன் நீங்கி தனம் பெறுவர்.

4. வறுமை ஒழிந்து செல்வம் சேரும்.

5. நோய் நீங்கி நலம் பெறுவர்.

6. அறியாமை நீங்கி ஞானம் பெறுவர்.

7. பாவம் தொலைந்து புண்ணியம் எய்துவர்.

8. பிறவி ஒழிந்து முக்தி எய்துவர்.


ஒரு வருட பலன் : சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோச தினத்தன்று பிரதோச வேளையாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் அன்று, முழுவதும் விரதம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் கோவில்சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

மஹா பிதோசம் :

ஐந்து வருட பலன் : சனிக்கிழமை வரும் பிரதோச வேளையில் நாள் முழுவதும் விரதமிருந்து சிவாலயம் சென்று வழிபாடு செய்தால் ஐந்து வருடம் தினமும் தவறாது கோவிலுக்குச் சென்று வழிபடும் புண்ணியம் கிட்டும். பஞ்சமாபாபமும் விலகும் என்பர்.

பிரதோச காலத்தில் நந்தீஸ்வரர் பூசை.

1. ஒவ்வொரு பிரதோச வேளையிலும் சிவபெருமானை பூசிப்பதற்கு முன் நந்தியெம்பெருமானை பூசிப்பது நலமாகும்

2. பிரதோச வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் இறைவனை தரிசித்து வணங்கினால் கடன், வறுமை, நோய், பயம், மனகிலேசம், மரணவேதனைகள் நீங்குதல், புத்திர பாக்கியம் பெறுதல், காரியசித்தி பெறுதல் ஊக்கத்தை உண்டாக்குதல், சகல சௌபாக்கியங்களையும் பெறுதல் இவைகளுடன் கைலாயமும் அடைந்து இம்மை, மறுமையில் அனைத்து நன்மைகளையும் பெற்று பயனடைவர்.

3 . எனவே பிரதோச காலத்தில் நந்தியெம் பெருமானின் தரிசனமும் பூசையும் பெறும் பலனளிக்கக் கூடியதாகும்.

பிரதோச பூசையன்று முக்கிய அபிசேகப் பொருள்களும் அதன் பலனும்:

1. அபிசேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்.

3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்.

4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்.

5. பஞ்சாமிர்தம் கொடுத்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்.

6. நெய் கொடுத்தால் முக்திப் பேறு கிடைக்கும்.

7. இளநீர் கொடுத்தால் - நன்மக்கட்பேறு கிட்டும்.

8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்.

9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுக வாழ்வு கிட்டும்.

10 சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்.

11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்.

பிரதோச நாளன்று கூடியவரை விரதம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோசப் பலன் முழுமையாகக் கிட்டும்.

நந்தியெம் பெருமான் வழிபாடு.

ஐயிரு புராணநூல் அமலற்கு ஓதியும்
செய்யபன் மறைகளும் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல் வியாதன் ஈட்டிய
கையறு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.

நந்தீஸ்வரர் பெருமை

நந்தியெம் பெருமான் தன்னை
நாள்தோறும் வணங்குவோர்க்குப்
பக்தியால் ஞானம் சேரும்
பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கிக்
குன்றுபோல் செல்வம் சேரும்
சிந்தையில் அமைதி தோன்றும்
சிறப்புறு மக்கள் சேர்வர்
இந்திர போகம் கிட்டும்
இணையிலா வாழ்வு தானே
உளம்நிறை எண்ணம் கூடி
உயர்ந்திடும் வாழ்வு தானே.

தொடரும்.

3 comments:

  1. எங்க இருந்து பிடிக்கிறீங்க. நன்றிங்க.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...