Monday, January 31, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி - 1`.


”தெற்கின் கங்கை” , என்று அழைக்கப்படுகிற புனிதமான காவிரி இந்துக்களின் புனிதமான நதிகளின் முக்கியப் பங்கு வகிக்கக் கூடிய ஒன்றாகும். இந்துக்களின் புராணக் கதையின்படி பிரம்மகிரி மலையில் வாழ்ந்து வந்த கவேரா முனி, குழந்தை வரம் வேண்டி பிரம்மதேவனை வழிபட கவேரா முனியின் குழந்தையாக காவேரி என்ற பெயரில் பூமியில் அவதரிக்கிறாள். பிற்காலத்தில், அகத்திய மாமுனிவரை மணந்து அவரால் தன் கமண்டலத்தில் அடைக்கப் பட்டபோது, நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், கணேசப் பெருமான் காக்கை உருவில் வந்து அந்த கமண்டலத்தைத் தட்டிவிட்டு காவிரியைப் பாயச் செய்து நாட்டைக் காப்பாற்றியதாக புராணக் கதைகளும் உண்டு.

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பல பிரம்மாண்டமானக் கோவில்கள், விஜய நகர மற்றும் மராத்திய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த பெரும்பாலான கோவில்கள் காவிரி நதிக் கரையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆழ்வார்களாலும், பாடப் பெற்ற பெரும்பாலான வைணவ திவ்ய தேசத் தலங்களும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற தலங்களும் காவிரிக் கரையினிலேயே அமைந்திருப்பதும் தனிச் சிறப்பு.

மிகப் புனிதமாகக் கருதப்படும் காவிரி அன்னை நம் கர்மங்களையும், துன்பங்களையும் வேதனைகளையும் களைந்து மன நிம்மதியை அருளச் செய்கிறாள் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வரும் பேருண்மையாகும்.


இக்காவிரி நதி, தமிழ்நாட்டில், கிருட்டிணகிரி வழியாக, ஒகேனக்கல் போன்ற அழகான நீர் வீழ்ச்சிகளையும் சுமந்து கொண்டு ஈரோடை வழியாக, பவானி ஆறு சங்கமத்துடன், திருச்சிராப்பள்ளியை சென்றடையும் முன் நொய்யல் மற்றும் அமராவதி ஆகிய இரு கிளைகளையும் இணைத்துக் கொள்கிறது. இங்கிருந்துதான், மணல் படுகையுடன் கூடிய அகண்ட நதியாக கிழக்கு நோக்கி பாய்கிறது. வடக்குப் பகுதி கொள்ளிடம் என்றும், தெற்குப் பகுதி காவிரி என்றும் அழைக்கப் பெற்று , கிழக்கு வழியாக நேராகத் தஞ்சை மாவட்டம் சென்று அடைகிறது. இந்த இரு நதிகளும் இணைந்து திருச்சிராப்பள்ளி அருகே, ஸ்ரீரங்கம் என்ற தீவாக அமைகிறது.

இதைக் குறிப்பிடும் போது, “ கங்கையிற் புனிதமாகிய காவிரி”, என்று திருவரங்கம் பற்றி சிறப்பித்துக் கூறும் போது கம்பர் கூறுவார்.இத்தகைய புனிதம் வாய்ந்த நதிக்கரையில் அமைந்திருக்கும் கொங்கு நாடு பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விரைவாக வளர்ந்து வரும் இந்தியப் பெருநகரங்களின் பட்டியலில் ஈரோடை மாநகரத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரின் தென் மேற்கு திசையில் 400 கி.மீ. தொலைவில் காவேரி மற்றும் பவானி நதிக்கரையில் அமைந்துள்ளது, ஈரோடை மாநகரம் கைத்தறி, விசைத்தறி துணிகள் தயாரிப்பு மற்றும் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு மட்டுமன்றி, சிறந்த வியாபாரக் கேந்திரமாகவும் விளங்கும் காரணத்தினால் இந்தியாவின் மிகச் சிறந்த ஜவுளி நகரமாகக் கருதப்படுகிறது. பருத்திச் சேலைகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் இவையனைத்தும் அதிக அளவில் வியாபாரம் செய்யப் படுகிறது.அனைத்திற்கும் மேலாக உலகிலேயே மிகப் பெரிய மஞ்சள் சந்தையாக இருப்பதன் காரணமாக ‘மஞ்சள் மாநகரம்’, என்றும் அழைக்கப்படுகிறது.


மகேந்திரப் பல்லவனால் கட்டப்பட்ட மிகப் பழமையான கோவில் மகிமாலீசுவரர் திருக்கோவிலாகும். மாலி, சுமாலி என்ற இரு அசுரர்கள் வழிபட்ட தலமாதலால் இத்தலம் மகிமாலீசுரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலிருந்துதான் எங்கள் ராமேசுவரப் பயணம் இனிதாகத் துவங்கியது. விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில், ஆண்டவனின் ஆராதனைகளை முடித்துக் கொண்டு, அவனருளாலே, அவன் தாள் வணங்கி இரு பேருந்துகளில்பயணம் தொடங்கினோம். கோவில் யாத்திரைகள், சத்சங்கங்கள் இவையனைத்தும் மனித மனங்களைப் பல்வகையிலும் பக்குவப் படுத்தக் கூடிய ஒன்றாகும்.


அன்பு ஒன்றே பேரானந்தத்தை அடைவதற்குரிய ஒரே வழியாகும். நிலையில்லாததொரு உலகில் நிலையான தன்மை பெற்ற ஒரே பொருள் அன்பு மட்டுமே. காரைக்கால் அம்மையார் இறைவன் மீது கொண்ட மாறாத அன்பு போன்று. அன்பில்லாமல் இன்பம் வராது. அன்பில்லாமல் வந்த இன்பமும் நிலையாது. மானுட ஆக்கை என்பது இறைவன் கொடுத்த வரம். மனித மனம் பல சென்மங்களாக, அறியாமையாகிய, ஆணவக், கண்ம, மலங்களை சுமந்து கொண்டு இறைவன் தன்னைப் போல ஒளி வடிவாக, பேரருள் வடிவாக மாற ஒரே மார்க்கம், அன்புதான். மனித வாழ்வே, கிடைத்ததைப் பாதுகாப்பதும், கிடைக்காததற்கு ஏங்குவதுமே தான், என்றாகிப் போகிறது. இந்த அஞ்ஞானத் திரை விலகும் போது தான், ஞான ஒளி சீறி வெளி வருகிறது. இந்த ஞான ஒளி பெற வேண்டிதான் நாயன்மார்கள் முதல், சாமான்ய மக்கள் வரை ஆண்டவனின் திருப்பாதம் தேடி யாத்திரைகள் மேற்கொள்கின்றனர்.

தொடரும்.

7 comments:

  1. அட யாத்திரை விவரமா ? தொடருங்கள்.

    ReplyDelete
  2. பல தகவல்களுடன் பகிர்வு அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  3. நிலையில்லாததொரு உலகில் நிலையான தன்மை பெற்ற ஒரே பொருள் அன்பு மட்டுமே.


    .....rightly said...

    ReplyDelete
  4. ஐ யாத்திரை பதிவு.........
    தொடருங்க தொடருங்க...............

    ReplyDelete