Monday, July 11, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (17)

பவள சங்கரி
கொட்டும் பனியின் வெட வெடக்கும் குளிரும், ஆளையே அசத்தும் பனிப் புயற் காற்றும் எல்லாம் ஓய்ந்து சுகமான வசந்த காலம் ஆரம்பமாகி விட்டதை உணர்த்தும் பசுமையான புல் வெளிகளில் அழகிய புள்ளினங்களின் சுகமான ராகங்கள்! புதிய மலர்கள் புத்துணர்வுடன் துளிர்க்கும் அழகு! வ்சந்தம் மலர்ந்ததை பறைசாற்றும் டேஃபோடில் மற்றும் அரோரா மலர்களின் அணி வகுப்பு. வசந்த காலப் பறவைகளின் இன்ப நாதம். இயற்கையின் இந்த இன்பத்தை அனுபவிக்கத் தயாராகும் மக்கள், உலகிலேயே தாங்கள்தான் மிக மகிழ்ச்சியான மனிதர்கள், சொர்க்க லோகத்தில் வாழ்பவர்கள் என்ற பெருமிதம் பொங்க வளைய வருவதைக் காண ஆசரியம்தான் அவந்திகாவிற்கு. இத்தனை அழகையும் எப்படியும் தன் தூரிகையில் கட்டி வைத்து விட வேண்டுமென்ற துடிப்பு. அதிகாலையிலேயே எழுந்து விட்டாள். அருகில் ரம்யா, அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள உறக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். அங்குதான் வசந்த விழாவைக் கண் குளிரக் கண்டாள்.





தினமும் காலையில் பிரட்டும், ஜெல்லியும் சாப்பிட்டு அலுத்துப் போன வாய்க்கு, ஏதேனும் சுவையாக சாப்பிடலாம் என்று தோன்றியது. சனிக்கிழமை, விடுமுறை நாளானதால் இன்று ஏன் தானே சமைக்கக் கூடாது என்ற யோசனை வந்தது. சமையலில் பெரிய திறமைசாலி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே சமைப்பாள். ரம்யா எழுந்திருப்பதற்குள் ஏதாவது சமைத்து அவளை அசத்த வேண்டும் என்ற முடிவுடன் பூனை போல மெதுவாக உள்ளே நுழைந்தாள். மளமளவென இருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு பாலக் பன்னீரும், சப்பாத்தியும், செய்து முடித்தும், ரம்யா எழுந்த பாடில்லை. அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் அம்மாவிற்கு போன் செய்யலாம் என்று முடிவு செய்த அதே நேரம் ரம்யாவின் அலைபேசி சிணுங்கியது.

ரம்யா, நெளிந்து கொண்டே, “அவந்திகா, அந்த போனை எடுத்து யாராயிருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து பேசச் சொல்லேன்…. ப்ளீஸ் “ , என்றாள்.
”ஹலோ”
“ ஹலோ, ரம்யா எழுந்திருக்கலையாம்மா…” ரம்யாவின் அம்மா பேசினார்கள்.
“ஹலோ ….இன்னும் இல்லை அம்மா. நல்லா தூங்கிட்டு இருக்காங்க. ஏதாவது முக்கியமா இருந்தா எழுப்பட்டுமா..”
“இல்லம்மா. அவசரமில்ல. எழுந்தப்புறம் பேசச் சொல்லும்மா.நீ நலமாக இருக்கிறாயா..”
“ஆம் அம்மா. நலமாக இருக்கிறேன். அப்பா, தம்பி அனைவரும் நலம்தானே…”?
“எல்லோரும் நலம் தான் அம்மா. சரி பிறகு பேசலாம். வச்சுடவா”

ரம்யாவை எழுப்பலாம் என்று அவந்திகாவிற்கு தோன்றினாலும் அவள் அசந்து தூங்குவதைப் பார்த்து எழுப்ப மனமில்லாமல் விட்டு விட்டாள். அது மட்டுமல்லாமல் இரவு வேகு நேரம் பாட்டு கேட்டுக் கொண்டு நேரம் கழித்து தான் உறங்கச் சென்றிருப்பாள். அன்று அருகிலிருக்கும் பிரிட்ஜ் வாட்டர் கோவிலுக்குச் செல்லலாம் என்று கூறியிருந்தாள். எழுந்தவுடன் தான் கிளம்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

தன் ஓவியக் கண்காட்சி தொடர்பாக ஒரு சிலரைச் சென்று சந்திக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதற்கும் ரம்யாவைத் தொந்திரவு செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


வீட்டின் பின் வாசலில் அடர்ந்த மரங்களும் கீச்சிடும் புள்ளினக் கூட்டங்களும், குட்டிப் பூனை அளவிலான கொழு கொழுவென்ற அணில்களும் துள்ளி விளையாடுவதை சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அடுத்த வீட்டில் ஒரு பாட்டி, ஈழத்து தமிழர் போல இருந்தவர், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அழகான சிறிய தொட்டிகளில் செடிகள் அப்போது தான் துளிர் விட்டிருந்தன. இந்த பாட்டி தள்ளாத வயதில் இத்தனை சிரமப்பட்டு இந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டுமா என்று எண்ணிய போதுதான், தன்னுடைய அம்மா தனக்குச் சொன்ன ஒரு ஜென் கதை அவளுக்கு நினைவிற்கு வந்தது.

ஒரு துறவி, முதுமையின் எல்லையில் இருப்பவர் தன் மடத்தின் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு வெகு சிரமப்பட்டு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்த சிறுவன் ஒருவன்,

“ ஏன் ஐயா இவ்வளவு தள்ளாத பருவத்திலும், இத்தனை சிரமப்பட்டு இப்படி நீர் பாய்ச்ச வேண்டுமா. இந்த மரம் பலன் தரும் வரை தாங்கள் இருக்கப் போகிறீர்களா. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பராமரிப்பு அவசியமா” என்று கேட்க,

அதற்கு அந்தத் துறவி, “ மகனே, என் மூதாதையர் இது போல எண்ணியிருந்தால் இன்று நான் அந்த மரங்களின் பலனை அனுபவிக்க முடியுமா? அதுதான் நிதர்சனம். இன்று நான் பராமரிக்கும் மரங்களின் பலனை நாளை நீங்கள் அனுபவிக்கலாமே. இதுதான் நம் ஒவ்வொருவரின் கடமை. நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து போன்றது” என்றார்.
அந்தப் பாட்டியைப் பார்த்தவுடன் அவளுக்கு அந்த ஜென் துறவி நினைவுதான் வந்தது. காரணம் ரம்யா ஏற்கனவே அவரைப் பற்றிக் கூறியிருந்த விசயம் தான். ஆம் அந்தப் பாட்டியின் கணவர் நோய்வாய்ப்பட்டு பல மாதங்களாகப் படுக்கையுடன் இருப்பவர். அவருக்கு அத்துனை பணிவிடைகளும் பார்த்துப் பார்த்து தானே செய்ததோடு,சில வாரங்கள் முன்பு அவர் இறந்த போது சற்றும் கலங்காமல், பிலடெல்பியாவில் இருக்கும் தன் மகளுக்குத் தெரியப்படுத்தி விட்டு அவர் வந்து சேருவதற்குள் ஆம்புலன்ஸ் மற்றும் சவ அடக்கத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடித்து வைத்ததோடு துளியும் கண்கள் கூடக் கலங்காமல் தைரியமாக எதிர் கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ரம்யா அவரிடம் துக்கம் விசாரிக்கச் சென்ற போது கூட அவர், தன் கணவர் பயன்படுத்திய புத்தக அறையிலிருந்து பேனா முதல் துணிமணிகள் வரை அத்துனையும் அப்படியே துளியும் இடம் கூட மாறாமல் பராமரித்து வைத்துக் கொண்டிருந்தாராம்.
மகள் தன்னுடன் வந்து தங்கும்படி வற்புறுத்திக் கூறியும், தன் இறுதிக் காலம் வரை தன் கணவர் வாழ்ந்த இடத்திலேயே தானும் இருக்க விரும்புவதாகக் கூறி மறுத்தும் விட்டிருக்கிறார். தனக்கு வேண்டிய காய்கறிகள், மற்ற பொருட்கள் என்று அனைத்தும் வாரத்தில் ஒரு நாள் தானே சிற்றுந்தை எடுத்துக் கொண்டுச் சென்று வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஒருவருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் தனியாக சமாளித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது அவந்திகாவிற்கு. நம்மூரில் முதுமை என்ற ஒன்றை வெகு சீக்கிரமே ஏற்றுக் கொள்வதோடு மனதளவில் அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு உட்படுத்திக் கொள்வதையும் நினைத்து வருத்தமாகவும் இருந்தது.

வீட்டினுள் ஏதோ சலசலப்பு கேட்டவுடன் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டவள், ரம்யா எழுந்து விட்டது அறிந்து, அவளிடம் சென்று ரம்யாவின் தாய் அலை பேசியில் அழைத்த விவரம் கூற வேண்டும் என்று காத்திருந்தாள். அதற்குள் அவள் சமயலறையிலிருந்து வந்த நறுமணத்தை மோப்பம் பிடித்து,
“ ஆகா, அருமையாக இருக்கிறது அவந்திகா கிரேவி “ என்று நாக்கைச் சப்பு கொட்டிக் கொண்டே வந்தாள்.

அவந்திகாவும் சப்பாத்தி போடலாமா என்று கேட்டுக் கொண்டே வந்தாள். அதற்குள் ரம்யாவின் தாய் அழைத்திருந்த நினைவு வர,அவளைக் கூப்பிட்டுச் சொன்னாள்.

ரம்யாவும் சரி நான் அம்மாவிடம் பேசி விட்டு வருகிறேன். அதற்குள் நீ வேண்டுமானால் சப்பாத்தி முடிந்தால் செய்யலாம் என்றாள்.வெகு நேரம் ஆகியும் ரம்யா பேசி முடித்து வராததால் அவந்திகா சாப்பிட்டு முடித்து ரம்யாவிற்காக ஹாட் பேக்கில் சப்பாத்தி போட்டு மூடி வைத்து விட்டு வந்தாள்.

அவள் பேசி முடித்து அறையை விட்டு வெளியில் வந்த போது முகம் மிக வாட்டமாக இருந்தது. வழக்கமாக முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தெளிவாக இருப்பவள் இன்று இப்படி இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது. உடனே அவளிடம் காரணம் கேட்கவும் சங்கடமாக இருந்தது.

ஆனாலும் அவந்திகா அதைக் கண்டு கொள்ளாதவள் போல, அவளை சாப்பிட வரும்படி அழைத்துக் கொண்டிருந்தாள். ரம்யாவும் ஏதும் பேசாமல் அவளுடன் சமையலரைக்குச் சென்று ஒரு பீங்கான் தட்டில் இரண்டு சப்பாத்தியும் பன்னீர் கிரேவியும் வைத்துக் கொண்டு அதை வெளியில் எடுத்து வந்து தொலைக்காட்சி பெட்டியருகே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவள் முகம் மேலும் வாட்டமாகவே இருப்பதைக் கவனித்த அவந்திகா ஏதும் கேட்பதா வேண்டாமா என்று யோசனையுடனே அவளைக் கவனிக்க, அதைப் புரிந்து கொண்ட ரம்யாவும், தன் தம்பியின் நிலை குறித்தும், அவனை ’சங்கல்ப் ’பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்காகவே பெங்களூருவிலிருந்து அவள் பெற்றோர் சென்னையில் வீடு எடுத்து தங்கியிருப்பதையும், தந்தை வியாபாரம் காரண்மாக சென்னைக்கும், பெங்களூருக்கும் அலைந்து கொண்டிருப்பது பற்றியும் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டாள். அவந்திகாவிற்கு என்னச் சொல்லி ரம்யாவைத் தேற்றுவது என்று தெரியவில்லை.
பாசம், பந்தம் இவையெல்லாம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்தாலும் அதுதானே வாழ்க்கையாக இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவது சாமான்ய காரியமல்லவே. தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது தன்னையறியாமலே தன் மனம் துடிப்பதைக் கட்டுப்படுத்த முடிவதில்லையே. அப்படி முடியும் என்றால் அவர் தான் ஞானி அல்லவா. சிரிப்பும், கலாட்டாவுமாக பழகும் ரம்யாவிற்குள் இத்தனை சோகங்கள் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவந்திகாவால்…
தொடரும்.

No comments:

Post a Comment