Friday, March 29, 2013

வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (7)பவள சங்கரி

தங்களுக்குத் தேவையானது எது என்பதைத் தெளிவாக அறிந்துணர்ந்து கொண்டவர்கள் எவரோ அவர்களுக்கு அதை அடையக்கூடிய மனவலிமையை இவ்வுலகம் மிக மகிழ்வுடன் வழங்கிக் கொண்டிருக்கிறது!
வால்ட்டர் ஸ்டேபிள்ஸ்


சிந்தித்து செயல்படுவோமா?எந்த ஒரு காரியமும் மேலோட்டமாக செயல்படுவதற்கும், நல்ல முறையில் சிந்தித்து செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். பல நேரங்களில் நாம் சிந்தித்து செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மேலோட்டமான நினைவலைகள் எந்த பாதிப்பையும், எங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. பின் எப்படி சிந்திப்பது?


சிந்தனை என்பது ஆழ்மனதிலிருந்து பிறக்க வேண்டும். ஆம் உண்மையான ஈடுபாட்டுடன் கூடிய தெளிவான ஆழ்மனச் சிந்தனையாக அது அமைதல் வேண்டும். அப்படி நம் ஆன்மாவைத் தீண்டக்கூடிய ஒரு சிந்தனை வாய்க்கப்பெறும் போது அதன் படைப்பாளி நாம் அல்ல என்பதை நம்மால் உணர முடியும். நாம் நினைத்துப் பார்த்திராத, நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்தியையும், வழிகாட்டுதலையும் அது வழங்குவதையும் ஒரு மூன்றாம் மனிதரைப் போல தள்ளி நின்று நாமும் உணர முடியும். என்பதுதான் சத்தியம்! ஆம் அப்படி ஒரு சிந்தனையின் வழி நடப்போர் வெற்றியை இழந்ததாக சரித்திரமே இருக்காது என்பதும் உண்மை. அமைதியாக அமர்ந்து, எந்த இடையூறும் இல்லாத சூழலில் தெளிவாகச் சிந்திக்க வழிவகுக்க ஆரம்பித்தாலே வெற்றியின் எல்லையை தொட ஆரம்பிக்கிறோம் என்றுதானே அர்த்தமாகிறது!

பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் தேவையில்லை
நம் சக்திக்கு உட்பட்ட, நம்மால் நிறைவேற்றக்கூடிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஒரு போதும் தயக்கம் கொள்ள வேண்டியதில்லை. நம் பங்களிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நம் உரிமைகளைப்  பெறவும் எளிதாகிறது. அந்த வகையில் ஏற்றுக் கொள்ளும் எண்ணற்ற பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையை அனுசரித்துச் செல்லும் இந்தப் போக்கு நம் வெற்றிப்பாதையை விரிவடையச் செய்கிறது.

உண்மையை அன்போடும், கருணையோடும் எதிர்கொள்வோம்
ஆம், மாற்ற இயலாத சில உண்மைகளை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அது நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக நம்மோடு பணிபுரிபவரோ அல்லது அண்டை அயலாரோ நம்மிடம் இயல்பாக இல்லாமல் எதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்துபவராக இருக்கலாம். நாம் அடிக்கடி சந்திக்கக்கூடியவர்களின் இந்த மனநிலை நம்மையும் நிச்சயம் பாதிக்கக்கூடும். அது நம் அன்றாடப் பணிகளை முடக்கிப் போட்டுவிடும். இது போன்ற சூழலில் நாமும் அவருடைய எண்ணங்களைப் பிரதிபலிக்காமல், உண்மையான நேசத்தை அங்கு வெளியிட்டால் நாளடைவில் அவரும் நம்மிடம் அதே அன்பை வெளிப்படுத்தும் இயல்பிற்கு வந்துவிட வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களால் வர முடியாவிட்டாலும் அந்த அவர்களுடைய எண்ணம் நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நம் நேசம் அதற்கொரு கவசமாகிவிடும்.  இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை நேராகச் சந்திக்க வேண்டிய தருணம் ஏற்படும் பொழுதெல்லாம், அவருடைய கண்களை நேரிடையாகச் சந்தித்து, ஒரு “ஹாய்” அல்லது புன்னகையுடன் ஒரு அன்பான பார்வையுடன் ஒரு ‘வணக்கம்’ சொல்ல வேண்டியது. இந்த சின்ன செயல் அவரையும் மனம் மாறச் செய்வதோடு, நம்மையும் உற்சாகமாக நம் பணிகளைத் தொடர சக்தியைக் கொடுத்துவிடும். முயன்றுதான் பார்ப்போமே! மீண்டும் நினைவு கூர்வோம். நாம் அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு கொள்ளக்கூடிய உண்மைகளை அன்போடும், கருணையோடும், பொறுமையோடும் எதிர்கொள்வது மிக சக்தி வாய்ந்ததொரு மந்திரம். அன்றாடம் அந்த மந்திரத்தை உச்சரித்து நம் வெற்றிப் பாதையை விரிவாக்குவோம்!

இலட்சியம் ஏற்படுத்துவது மாற்றம் என்றால்
அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம்தானே?


தொடருவோம்

நன்றி : வல்லமை

1 comment: