பவள சங்கரி
ஏண்ணா.. உங்களுக்கே இது நியாயமா இருக்காண்ணா.. இந்த 55 வயசுல என்னை தையல் கிளாசுக்குப் போகச்சொன்னேள். முடியாட்டியும் உங்க தொல்லை தாங்காம போய் என்னோட இரவிக்கைக்கு பேப்பர் கட்டிங்காவது போட்டு தைச்சுப் பழகிண்டு வந்தேன்.. ஆனா பென்ஷன் தர்றவாகிட்ட, அசோசியேஷன் மீட்டிங்குல போய் சட்டம் பேசிண்டு, அழிச்சாட்டியம் பண்ணிண்டு இருக்கேளே.. இதுக்கு என்னண்ணா பன்றது? நீங்க கொடுத்த பெட்டிஷன் பெரிய புயலையேக் கிளப்பிடித்துன்னு எல்லோரும் புலம்பறாளே.. அந்த கலாட்டுவுல இப்ப பென்சனை நிறுத்தி வச்சிருக்காளே அவாளைப்போயி இப்ப கேக்க முடியாம தேமேன்னு உக்கார்ந்திண்டிருக்கேளே? இந்த மாசம் சாப்பாட்டிற்கு என்னண்ணா பன்றது?
”பின்ன என்னடி செய்யிறது? ஆத்துல நடக்குறதெல்லாம் பார்த்துண்டுதானே இருக்கே.... போன் மாசம் உன் இரவிக்கையை எடுத்துண்டு டெய்லர் கடைக்குப்போனா அங்க பெரிசா போர்ட் வச்சிருக்கான். ஒரு சாதா இரவிக்கைக்கு 170 ரூவா கேக்கறான். இத்தனைக்கும் அதுல ஒரு சன்னலோ அல்லது கவுரோ எதுவுமே இல்லாத பிளெயின் இரவிக்கை. இதுல வேடிக்கை என்னன்னா ஜாக்கிட் துணியே 80 ரூபாய்தான்.
நேத்து என்ன நடந்தது, நீயே சொல்லு. துணியை சலவை பண்ண வந்த வண்ணார் பையன் என்ன சொன்னான்..
‘சாமீ.. இனிமே எங்க சங்கத்துல எடுத்த முடிவுபடி காட்டன் புடவைக்கு 25 ரூபா, சட்டைக்கு 10 ரூபா, பேண்ட்டுக்கு 15 ரூபா, ஜாக்கெட்டுக்கு 5 ரூபாய்னு கூலியை ஏத்திப்பிட்டோம்னு சொன்னானே, அவனைப்போயி கேளுடி... ஏண்டா இப்படி அழிச்சாட்டியம் பண்றேன்னுட்டு”
“அதெப்ப்டிண்ணா முடியும், நம்ம ஒருத்தருக்காகவா ஏத்தறான், ஊருக்கே உண்டானது நமக்கும்”
“அதுசரி. நேத்து முடி வெட்டிக்க நாசுவன் கடைக்குப் போனப்ப, எங்க சங்கத்துல முடிவெட்ட ரூ 150, சவரம் பண்ண ரூ 50, தலைக்கு கண்டீசனரோட ஷாம்பு பாத் எடுக்கறதுக்கு ரூ 150, இப்படி இஷ்டத்துக்கு ஏத்திப்பிட்டானுங்களே..அவனைப் போயி நீ கேக்க முடியுமா... ஏண்டாப்பா இப்படி அழிச்சாட்டியம் பண்றேன்னு”?
“அதெல்லாம் சரிதாண்ணா, பென்சன் வர்றதையே நிறுத்திப்பிட்டேளே? இப்ப என்ணன்ணா செய்யிறது.. இதுக்கு யாரைப்போயி கேக்கப் போறேள்?”
அதுதாண்டி நேக்கும் புரியல? அசோசியேஷன்ல பெட்டிசன் குடுத்திருக்கேன். சீக்கிரமா பதில் வரும்னு செக்ரட்டரி சொல்றார். அது வரைக்கும் சமாளிக்கணும். வேறவழி இல்ல..
“ஏண்ணா, பையன் அமெரிக்காவுல நன்னாத்தானே சம்பாதிக்கிறான். அவனாண்டையும் வாங்கக் கூடாதுன்னா அப்பறம் சோத்துக்கு என்னதான் பண்றதுண்ணா.. சொல்லுங்கோ..”
“எல்லாம் நான் பாத்துப்பேண்டி.. இத்தனை நாள் என்ன பண்ணினேன்.. உனக்கு ஒழுங்கா சாப்பாட்டுக்கு, அதுக்கு இதுக்குன்னு பணம் கொடுத்துண்டுதானே இருக்கேன்.. “
“ஆமாண்ணா,அதான் நீங்க கொடுக்கற இலட்சணம் தெரியறதே.. அன்னைக்கு பால்காரன் கூட எவ்ளோ கேவலமா பேசிட்டுப் போனான், ஒரு பால் காசு கூட மாமா உங்கள நம்பி தர மாட்டாரா மாமின்னு நாக்கைப் புடுங்கிக்கறா மாதிரி கேட்டுட்டுத்தானே போனான்.. “
“அதுக்காகத்தாண்டி அந்தப் பால்காரனையே நிறுத்தினேன்.. வேற என்ன பண்ண முடியும் அதுக்கு”
“ஏண்ணா இப்படி இருக்கேள் ஒன்னுமே புரியாத மாதிரியே நடிக்கிறேளே.. எப்படிண்ணா அது? தூங்கறவாள எழுப்பலாம், ஆனா தூங்கறாப்போல நடிக்கறவாளை எழுப்ப முடியாதுங்கறதுக்கு நீங்கதாண்ணா சரியான உதாகரணம்... போதுண்ணா.. சலிச்சுப்போச்சு, வாழ்க்கையே....”
வக்கீல் குமாஸ்தா சாதாசிவ ஐயர்னா, அந்த ஏரியாவுல தெரியாதவரே இருக்க முடியாது. அவ்வளவு கறார் பேர்வழி. எதுக்கெடுத்தாலும் சட்டம் பேசிக்கொண்டு, ஆனா,ஊன்னா, பெட்டிசன் எழுதிப் போட்டுடுவார்னு எல்லோரும் அவர்கிட்ட ஒரு அடி தள்ளி நின்னே பழகுவார்கள். அதையும் பெருமையாகவே எடுத்துக்கொள்வார் மனிதர். எல்லோருக்கும் பெரிய ஆச்சரியமே இந்த கமலா மாமி எப்படித்தான் இத்தனை வருசமா இந்த மாமாகிட்ட குப்பை கொட்டிக்கிட்டு இருக்கா என்பதுதான். அதுக்கும் இப்படி ஒரு முடிவு வரும்னு யாரும் நினைச்சுக்கூடப் பார்க்கவில்லைதான்.
அன்று காலை குளித்து பூஜை, புனஸ்காரமெல்லாம் முடித்து சாப்பிடத் தயாராக மேசைக்கு அருகில் வந்தவர் அப்போதுதான் கவனித்தார், வழக்கமாக இந்த நேரத்தில் சாப்பாட்டு மேசை கமகமவென மணந்து கொண்டிருக்கும். இன்று காலியாக இருந்ததுடன் சகதர்மினி கமலாதேவி இருக்கும் இடமே தெரியாமல் வீடே அமைதியாக இருந்தது. ’கமலா’ என்று உரக்க குரல் கொடுக்க வாயைத் திறந்தபோது, அலைபேசியின் அழைப்பு அதைத் தடை செய்தது.
‘ஹலோ... வணக்கம். சொல்லுங்கோ”
“என்னத்த சொல்றது சதாசிவம், இதை நான் எதிர்பார்க்கலை, அதுவும் இந்த வயசுல.... நோக்கு சப்ஷடியப்த பூர்த்தி ஆயிடுத்தோ?”
‘என்னப்பா ஆச்சு உனக்கு. காலங்கார்த்தாலே இன்னைக்கு நான் தான் கிடைச்சேனோ உமக்கு.. பொழுது போகலையோ”
“அடப்போப்பா.. இங்க வந்து பாரு.. உடனே கிளம்பி வா என் ஆபீசுக்கு. இங்க உன் ஆம்படியாள் பன்ற கூத்தை வந்து பாருப்பா... என் வேலையெல்லாம் கெட்டுப் போகுது’
“என்னப்பா சொல்ற.. என் ஆம்படையாளா.. இங்கதானே இருந்தா.. அங்க எப்படி வந்தா..?”
“ஏன் வந்தாள்னு கேளுப்பா.. அதுதான் சரியா இருக்கும், அதெல்லாம் இருக்கட்டும் நீ உடனே கிளம்பி வாப்பா..”
“என்ன் மாமி, இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்குத் தேவையா... நாலு பேர் கேட்டா சிரிப்பாங்களே... உங்க மருமகப் பொண்ணே உங்களை மதிக்க மாட்டாளே.. “
“அதைப்பத்தியெல்லாம் நேக்கு கவலை இல்லே.. எனக்கு அந்த மனுசர்கிட்டயிருந்து டைவர்ஸ் வேணும்.. ஆமா.. உங்களால முடியாதுன்னா சொல்லுங்கோ. நான் வேற நல்ல அட்வொகேட்டா பார்த்துண்டுடுறேன்,ஆமா.. இந்த அட்வைஸெல்லாம் வேண்டாம் நேக்கு”
‘பாத்தியாப்பா, சதாசிவம் இப்படித்தான் வந்ததிலிருந்து என் ஜீனியர்கிட்ட மிரட்டி உருட்டிண்டிருக்கா உன் தர்மபத்தினி”
:”என்னவாம், இப்ப புதுசா பிரச்சனை?”
“இதோட நாலாவது தரமா வறேன் நான், டைவர்ஸ் கேட்டுண்டு. நீங்களும் ஒவ்வொரு தரமும் ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பிடுறேள். இந்த முறை எந்த சமாதானமும் நேக்கு வாண்டாம், நியாய்ம்தான் வேணும்.. உங்களால முடியாதுன்னா சொல்லிடுங்கோ..நான் வேற வக்கீல பாத்துக்கறேன்”
“சரி... சரி.. ஆன்னா.. ஊன்னா மிரட்டுறேளே.... உங்க பிரச்சனைதான் இப்ப என்னா, அதைச் சொல்லுங்கோ..”
“அதை ஏன் கேக்கறேள்.. வர வர இவரோட அழிச்சாட்டியம் தாங்கலை.. போகப்போக அதிகமாயிண்டேயிருக்கு. என்னோட, டிரைவிங் லைசென்ஸ், வோட்டர்ஸ் ஐடி கார்ட், ஆதார் கார்ட் எல்லாத்தையும் கூட பிடுங்கி வச்சுண்டு தான் மட்டும்தான் பத்திரமா வச்சிக்க முடியும்ங்கறாப்பல பேசிண்டிருந்துட்டு நேக்கு எல்லாந்தெரியும்னு வாய் ஓயாம சொல்லிண்டிருந்திட்டு, நேத்து 200 கி.மீ டிராவல் பண்ணி பாஸ்போர்ட் ரினியூவலுக்காகப் போனா, எல்லாத்தையும் ஆத்துலயே வச்சிப்புட்டு வறார்.. 4 மணி நேரம் வெய்யில்ல கியூல நின்னு உள்ளே போனா ரிஜெக்ட் ஆயிடுத்து .. என் பொண்ணு அடுத்த வாரம் கிளம்பற அவ ஃபிரண்டோட என்னையும் வரச்சொல்லியிருக்கா.. நிம்மதியா போய ஆறு மாசம் அமெரிக்காவுல இருந்துட்டு வரலாம்னா, அதையும் கெடுக்கறாரு.. இனிமே டைம் இல்ல.. கோபம் வருமா, வராதா சொல்லுங்கோ... அடக்கு முறைக்கு ஒரு அளவு வேணாமா.. இனிமே பொறுத்திண்டு போக முடியாது என்னால.. நான் ஃப்ரீயா இருக்கனும்னு முடிவு பண்ணியாச்சு ஆமா.. எனக்கு விடுதலை வேணும் அவ்ளோதான்”
வக்கீல் ரங்காச்சாரி சதாசிவத்தின் நண்பர்தான் என்றாலும் நியாய, அநியாயம் தெரிந்த நல்ல மனிதர். கமலாவை தன் உடன் பிறந்த சகோதரியாகவே நினைப்பவர். அதனாலேயே இவரை மீறி வேறு ஒரு வக்கீலிடம் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை அவளுக்கு. இதோடு நான்கு முறை சமாதானம் செய்து அனுப்பியாகிவிட்டது. இந்த முறை ஒரே பிடிவாதமாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் புரொசீட் செய்ய வேண்டியதாகிறது என்று வருத்தமாக சொல்லிவிட்டு கமலாவை கொஞ்ச நேரம் வெளியில் உட்காரச் சொல்லி, சதாசிவத்திடம் தனியாகப் பேச வேண்டும் என்றார் ரங்காச்சாரி. ரொம்ப நேரமாக அப்படி என்ன பேசுகிறார்களோ தெரியவில்லையே என்று யோசித்தவள், மெல்ல கதவினருகில் செல்ல நினைத்தபோது உள்ளேயிருந்த ஜீனியர் வக்கீல் படாரென கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவர், திரும்ப கதவைச் சரியாகச் சாத்தவில்லை. அந்த இடைவெளியில் கணவர் தன் நண்பரிடம் ஓவென்று கதறி அழுதுகொண்டு அப்படி என்ன சொல்கிறார் என்று உற்றுக் கேட்டவள் அப்படியே உறுகித்தான் போய்விட்டாள். ஆம், அவர் வேண்டுமென்றேதான் அவளுடைய ஐட்ண்டிட்டி கார்ட் எதையும் பாஸ்போர்ட் ஆபீசிற்கு எடுத்துச் செல்லவில்லையாம். ஆறு மாதம் மனைவியைப் பிரிந்து இருப்பது நினைக்கக்கூட முடியாத காரியமாம். அதை நேரிடையாகச் சொல்ல ஈகோ இடம் கொடுக்கவில்லையாம்.. இப்போது அவள் ஒரேயடியாக பிரிந்து போனால் செத்தே விடுவாராம்.. இதைக்கேட்டதும் அப்படியே இதயமே நின்றுவிடும் போலாகிவிட்டது கமலாவிற்கு. அது வக்கீல் ஆபீஸ் என்பதையும் மறந்து ஓடிச்சென்று, அப்படியே கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு,
“ஏண்ணா.. என்ன சொல்றேள்.. அப்டீல்லாம் சொல்லாதேள் ஏண்ணா இப்படி பெரிய வார்த்தையெல்லாம் சொல்றேள்.. உங்களை விட்டுட்டு நான் மட்டும் சந்தோசமாவா இருக்கப் போறேன். ஏதோ கோவத்துல சொல்லிட்டேண்ணா, அதுக்குப்போயி இப்படி சின்னக் குழந்தையாட்டமா அழறேளே.... உடம்பு கெட்டுடப்போகுது. வாங்கோண்ணா ஆத்துக்குப் போகலாம். இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டேளே.. பக்கத்துல இருக்கற பாலாஜி பவன் போயி சாப்பிட்டுட்டு ஆத்துக்குப் போலாம் வாங்கோ...”
“ஐய.. அங்கயா... பாலாஜி பவன் ஓட்டல்காரன் கொள்ளை லாபமில்ல அடிப்பான்.. நாம் வழக்கமா போற.... இல்லல்ல நீ எங்க சொல்றியோ அங்கேயே போலாம்..”
“இல்லண்ணா நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.. உங்க விருப்பம் போலயே செய்யுங்கோ ”
நன்றி : திண்ணை
No comments:
Post a Comment