Friday, March 22, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (6)


பவள சங்கரி


“உன் நாவுக்கு அஞ்சு. அது குறி தவறக்கூடிய அம்பாகும்.” – ஹஸரத் அலி.தேவையற்ற கவலையை விட்டொழியுங்கள்!


நம்மில் பலர் ஏதோ பெரிதாக பிரச்சனை வரப்போகிறது என்ற கவலையிலேயே அப்போதைய நிம்மதியைத் தொலைத்தவர்களாக இருக்கிறோம். பொருளாதார பிரச்சனை, இயற்கைச் சீற்றம், விபத்து, தீவிரவாதம், ஆரோக்கியக்கேடு, நெருங்கிய உறவின் பிரிவு, மரண பயம் போன்ற பல காரணங்கள் இதற்கு அடிப்படையாக இருக்கின்றன. இதில் சிலவற்றை நாம் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் நம் சக்தியின் எல்லைக்கப்பால் நிகழக்கூடிய சில விசயங்கள் பற்றி கவலைப்படுவதை விட்டு நடக்கக்கூடியவைகளில் கவனம் செலுத்துவதே அறிவார்ந்த செயல்.எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்பாடுகள் மூலம் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அதாவது வருமுன் காப்போம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கலாம். இந்த முன்னேற்பாடுகள் பற்றி பேசும்பொழுது, நான்கு விதமாக  நடந்து கொள்ளும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதாவது ஒரு சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நல்ல முன்னேற்பாடுடன் தயாராக இருந்தும் தேவையற்ற கவலையை விட்டொழிக்காமல், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். அடுத்த வகை முன்னேற்பாடு பற்றிய சிந்தையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அடுத்த மூன்றாவது வகை முன்னேற்பாடும் இல்லாமல் எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் இருப்பவர்கள். (இவர்களுக்குத்தான் கட்டாயம் உதவி தேவைப்படும்)  நான்காவதாக வருபவர் வெற்றியாளருக்குரிய குணத்தைக் கொண்டவர். அதாவது எந்த ஒரு காரியத்தையும் உணர்வுப்பூர்வமாக அணுகுவதைத் தவிர்த்து, அறிவுப்பூர்வமாக அணுகுவதோடு, அவசர காலத்திற்கான முன்னேற்பாடுகளைச் சரியாக வைத்துக்கொண்டு, அதற்குரிய சரியான தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு, தேவையற்ற கவலைகளால் சக்தியை இழக்காமல் தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொண்டு சமாளிப்பவர்.


நம் கட்டுப்பாட்டையும் மீறி நடக்கக் கூடிய இயற்கை சீற்றம், தீவிரவாதம் போன்ற அசம்பாவிதங்கள் குறித்த அச்சத்தினால் சக்தி விரயம் செய்யத் தேவையில்லை. முன்னேற்பாடுகளை சரியாகக் கவனித்துக் கொண்டு நம் போக்கில் பணிகளைத் தொடருதலே விவேகமான செயல். இல்லாவிட்டால் நம் உடல் மற்றும் மனதின் பெரும் சக்தியை அது தின்றுவிடும். எந்த இழப்பாக இருப்பினும் கூடியவரை விரைவில் மீண்டுவர முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். திரும்பப் பெற முடியாத இழப்புகளை நினைத்து வேதனையில் உழன்று, கடமையில் தவறுதல் சரியானதன்று. அத்தகையப் போக்கு நம் வாழ்க்கைத் தரத்தையே குறைக்கக் கூடியது. அதைவிட வாழ்க்கையின் அழகான பகுதிகளை நினைவில் கொண்டு கடமைகளைச் சரிவர செய்யத் திட்டமிடல் வெற்றிக்கான வழியல்லவா?


மன உறுதியைக் குலைக்கும் முக்கிய எதிரி!


ஒருவர் வாழ்க்கையில் பெறுகிற நீங்காத செல்வம், மன உறுதிதான். இதனைக் குலைக்கும் முக்கிய எதிரி அனுதாபம்தான். ஆம் ஒருவரின் அனுதாபத்தை வேண்டி நிற்கும் நிலை ஏற்படும்போது சுய மரியாதையுடன், மன உறுதியும் சுத்தமாக விலகிவிடும். மன உறுதி இல்லாதபோது வெற்றியின் எல்லையை நெருங்குவது எளிதல்ல.


ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர், மாதவி லதா, இன்று சென்னைவாசி. இவருடைய விசேசம என்னவென்றால் எவருடைய அனுதாபத்தையும் சற்றும் எதிர்பாராதவர். மாற்றுத் திறனாளிகளால் சுலபமாக செய்துவிட முடியாத நீச்சல் பயிற்சியில் தனித்திறன் பெற்றுள்ள இவர் இந்த ஆண்டு சென்னையில் நடந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘ஒலிம்பியாட்’ போட்டியில், ப்ரீ ஸ்டைல் 100 மீட்டர் நீச்சல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு ‘சிறந்த ஊக்கமளிக்கும் விளையாட்டு வீராங்கனை’ என்கிற விருதையும் பெற்றுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராகவும் பணிபுரிகிறார். ஒரு வேளை இவர் அடுத்தவரின் அனுதாபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்த அளவிற்கு சாதனை புரிந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
இவரைப் போலவே குருடு, செவிடு, ஊமை இவற்றுடன் ஏழ்மையும் சேர்ந்து முடக்கிப் போட்டிருந்த ஹெலென் கெல்லர், அடுத்தவரின் அனுதாபம் வேண்டி முடங்கிப் போகவில்லை. தம்முடைய பலகீனங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நாம் வெற்றியை நாடுபவராக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது அடுத்தவரின் பரிதாபத்தை எதிர்பார்த்து மன உறுதியை இழந்து நிற்பதை தவிர்க்க வேண்டியதுதான்.
ஹெலென் கெல்லர், மாதவி லதா போன்று இல்லாமல் ஆண்டவன் அருளால் எந்த குறைபாடும் இல்லாமல் இருப்பவர்கள் இன்னும் பன்மடங்கு மன உறுதி கொண்டவராக அல்லவா இருக்க வேண்டும்? எடுத்த காரியத்தை தொய்வில்லாமல் முடிக்கும் முயற்சியை இன்றே துவங்குவோம். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்!


தொடரும்

படத்திற்கு நன்றி:

நன்றி: வல்லமை  இணைய இதழ்

2 comments:

 1. இந்த பதிவை (மொத்தமும்) என் நண்பர்கள் சிலருக்கு அனுப்பியிருக்கிறேன். வாழ்வில் எது முக்கியம் என்பதை அறியாமலே எத்தனை பேர் வாழ்ந்து மடிகிறோம்!

  புத்தக வெளியீட்டு விழாப் படங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பின் திரு அப்பாதுரை சார்,

   வணக்கம். தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. வாழ்த்திற்கு நன்றி.

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete