Monday, January 13, 2014

திரை கடலோடி.....





பவள சங்கரி


”இதுக்கு மேல தாக்குப் புடிக்க முடியாது சாமீ.. உடம்பெல்லாம் ரணமா போச்சி..  ஒரு வா சோறுகூட ஒழுங்கா திங்க முடியலப்பா. வாயு, வவுரெல்லாம் புண்ணா நொந்து போச்சு சாமீ.  டாக்டரு கண்டமேனிக்கு வையுறாரு. இனிமேல்பட்டு மேசன் வேலைக்கு போவக்கூடாதாம். அப்புடி ஒரு வியாதியாம் எனக்கு. அதுக்கும் மீறி போனா அப்புடியே போய் சாவு, என்னாண்ட திரும்பி வராதேங்கறாரு. எனக்கு மட்டும் என்ன அந்த கல்லு, மண்ணுல ஓயாம வேல செஞ்சி  எப்பப் பார்த்தாலும்  இருமலோட  திரியணும்னு ஆசையா? பாக்கறவனெல்லாம், பரிதாபமா ஏண்டா இன்னும் வேலைக்கு வறேன்னு கேக்கறானுவ..  இருமல் நிக்காம வருது. அப்பப்ப சளியோட ரத்தமும் வருதுல்ல, அதான் பய புள்ளைக பயந்து போவுதுக. நாளமின்னிக்கி இங்க வந்து உழுந்து கிடந்தா உன்னய எவன் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டுப் போறதுன்னு மேஸ்திரி கண்டபடிக்கு திட்டறான். இனிமே வேலைக்குப் போவ முடியாது. வேணுமின்னா வெளிய காய்கறி கடை போட்டு ஒக்காந்துக்கறன். அதுக்கு எதாச்சும் ஏற்பாடு பண்ணுனா தேவலப்பா. மனசில இருக்குற தெம்பு உடம்புக்கு இல்லியே, நான் என்னத்ததான் செய்யட்டும். 10 வயசுல காரச்சட்டி தூக்குனவன், இந்த 40 வருசமா காரையில கிடந்து குடலெல்லாம் வெந்து கெடக்குது”

“இந்தா..  ஏன் இப்புடி புலம்பற. செத்த நிறுத்து. பையன் பாவம் இப்பத்தான் அலுத்துப்போய் ஊட்டுக்கு வந்திருக்கு. வந்ததும் உன் ராமாயணத்தை ஆரம்பிக்கிற. என்னா மனுசன்யா நீ? அது பாவம் காலைல 7 மணிக்கே தின்னும், திங்காம ஓடுச்சி. இப்ப மணி 8 ஆவுது. இன்னும் வவுத்துக்கு ஒன்னியும் திங்கக்கூட இல்ல..  எம்பட ராசா  அதும் மூஞ்சியைப் பாரு பாவம், செவனேன்னு எப்புடி கெடக்குன்னு, போ.. சாமி. போய் கைகால் கழுவிட்டு வா ராசா.. சோறு திங்கலாம்.. “


“அப்பா, நீங்க வேலைக்கு இனிமேலைக்கு போவாணாம்ப்பா. எப்புடியும் இன்னும் 1 மாசந்தான் ஆவும். இன்னைக்குக்கூட அந்த ஏஜண்ட் போன் பண்ணினார்.  நாமதான் அந்த மொத்தப் பணம் ரூ80,000 த்தையும் கட்டிட்டோம்ல. இனிமேல விசா வந்தவுடன் அவரு கூப்பிடுவாரு, நான் உடனே கிளம்ப வேண்டியதுதானப்பா. அப்பறம் நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காதே..’

“அது சேரிப்பா, நம்ம கந்தனோட மவன் கொஞ்ச நாள் முன்னாடி இப்புடித்தானே இதே ஏஜண்ட் மூலியமா மலேசியாவுக்கு கூலி வேலைக்குப் போனான். அவன் கடுதாசி போட்டிருக்கான்னு கந்தன் சொல்லிட்டிருந்தான். ரொம்ப சிரமப்படுவான் போல இருக்கேப்பா. அதான் வெசனமா இருக்குய்யா. கஞ்சியோ, கூழோ நம்ம ஊரில இருக்குறத தின்னுப்புட்டு நிம்மதியா இருக்கலாமேன்னு நினைச்சா, உன் தம்பி படிப்பு, உன் தங்கச்சி கல்யாணம், பத்தாததுக்கு உங்க அம்மா கர்பப்பை ஆபரேசனுக்காகவும், என்னோட வைத்தியத்துக்காகவும் வாங்குன கடன் 50,000 அப்படியே முழுசா நிக்குது. 10 வட்டி தலையைத் திங்குது. என்னா பன்றதுன்னே தெரீல்லையா” கண்ணீர் தாரையாக வழிந்த முகத்தை யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டே உள்ளே சென்ற அப்பனின் வேதனையைக் கண்டும் காணாமல் தான் இருக்க முடிந்தது அந்த பொறுப்பான பிள்ளைக்கு!

அடுத்த நாள் பொழுது நல்லதாக விடியும் என்று ஒவ்வொரு நாளும் நம்பி தூங்கப் போகும் சந்தானத்திற்கு மனதில் அழுத்தும் பாரம் நிம்மதியாக படுக்க விடவில்லை. ஓட்டு வீட்டின் உடைந்த மர சன்னல் வழியாக பௌர்ணமி நிலவின் ஒளிக்கீற்று மெல்ல எட்டிப்பார்த்தது.  அருகில் தங்கையும், தம்பியும்,  அண்ணன் எப்படியும் வெளிநாடு போய் நிறைய சம்பாதித்துக்கொண்டு வந்து தங்களைக் கரையேற்றிவிடுவான் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பது தனக்குள்ளும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தான். அடித்துப் போட்டது போல அனத்திக்கொண்டு தூங்கும் தந்தை ஒரு புறமும், தன்னைப் போலவே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் அம்மாவின் நிலை ஒரு புறமும்  பாரத்தைக் கூட்டத்தான் செய்தது.  இந்த 22 வயதில் மற்ற இளைஞர்களைப் போல கூத்து, கும்மாளம் என்ற நினைப்பெல்லாம் என்றுமே இருந்ததில்லை.  அரசுப் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடிப்பதற்குள், நோட்டுப் புத்தகம் வாங்கவும், பரீட்சைக்கு பணம் கட்டவும் பட்ட பாடு மேற்கொண்டு படிப்பைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாமல் போனது. இத்தனைக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தனக்கு 75 மார்க் கையில் இருந்தும் அன்றாட பிழைப்பை ஓட்டவே குடும்பம் திணறும்போது கல்லூரி என்ற நினைப்பே இருக்கவில்லை. அஞ்சல் வழிக் கல்வி என்றாலும் பணப் பற்றாக்குறை வந்து முன் நின்றது. வேறு வழியே இல்லாமல் ஜவுளிக் கடை வேலைக்கு ராசாப்பாளையத்திலிருந்து ஈரோட்டிற்கு அன்றாடம் 7 கி.,மீ சைக்கிளில் மிதித்துக்கொண்டு வந்து காலை முதல் இரவு வரை வேலை பார்த்துவிட்டு இரவு  8 மணிக்கு வீடு போய் சேருவான்.

வாரம் 3000 சம்பளம் அந்தக் கடை வரலாற்றிலேயே சந்தானத்தைப் போல கடைப் பையன்களுக்கு முதல் முறையாகக் கொடுப்பதாக முதலாளி அடிக்கடி சொல்வதும் உண்மைதான் என்று ஒரு சந்தர்ப்பத்தில் தெரிந்து கொள்ளமுடிந்தது. 1000 ரூபாய் மட்டும் வாங்கி வீட்டில் செலவிற்குக் கொடுத்துவிட்டு மீதி 2000 ரூபாய் முதலாளியிடமே தஞ்சம் புகுந்தது.  50 வாரம் ஆனவுடன்,  சேர்ந்த மொத்த பணம் 1 லட்சத்திலிருந்து, 80,000 ரூபாயை முழுதாகக் கண்ணில் முதல் முறையாகப் பார்த்த கொஞ்ச நேரத்தில், தம்பி, தங்கை, அப்பா, அம்மாவின் பிரகாச முகங்கள் கண்ணைக் கூசச் செய்ததோடு ஏஜெண்ட் கையில் அடைக்கலமுமானது. இன்னும் 30 நாட்களுக்குள் விசா வந்துவிடும், வந்த இரண்டொரு நாளில் கிளம்பத் தயாராக இருக்க வேண்டும் என்றபோது முதலாளியிடமிருந்த மீதமுள்ள 20,000  ரூபாய் போதுமென்று கணக்கு போட்டது மனது. 

சில நாட்கள் முன்பு ராசுப் பெரியவர் அந்தக் காலத்தில் மலேசியாவிற்கு கூலித் தொழிலாளிகளாக ஆட்டு மந்தை கணக்காக  சஞ்சிக் கூலிகளாக, ஓட்டிக்கொண்டு சென்ற கதை பற்றி சொல்லியது கேட்டு மனம் பதறியது நினைவுக்கு வந்தது. 

கூலி வேலைக்காக, மலாயாவில் இருந்து ஆள்களைத் தேடிப் போன கங்காணிகள், பினாங்குத் தீவு அல்லது கோலா கிள்ளான் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஏறினார்கள்.   போர் நடந்த காலத்தில் வெள்ளைக்காரர்களின் தோட்டப் புறங்கள் மற்றும் காடுகளில் கூலி  வேலை செய்வதற்காக  அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், மலேசியக் காடுகள் மற்றும் தோட்டங்களிலேயே குடிசைகள் அமைத்து தங்கிக் கொண்டிருந்தனர். சலுகைகள் என்றால் கோவில், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.   நாடு விட்டு நாடு கடந்து வந்ததால், சஞ்சிக்கூலிகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. அவர்களின் அடிப்படையானத் தேவைகளும் மறுக்கப்பட்டன. அப்படி வந்தவர்களில் பலர், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கேட்டனர். தன்னிச்சையாக வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் சஞ்சிக் கூலிகள்  சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றனர். இரக்கமற்ற கொடுமைகளுக்கு ஆளான இவர்களின் வரலாறு, ஒரு துயரவெளியின் மோசமான அவலக் குரல்களாகவே கரைந்து போயிருக்கிறது. அந்தச் சஞ்சிக் கூலிகளின் வாரிசுகள் இன்றும் மலேசியாவில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர், என்பதையும் அறிந்து வைத்திருந்ததால் சந்தானத்தின் உள்ளம் நடுக்கத்தில் இருக்கத்தான் செய்தது.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது என்று முகவர் சொன்ன விசயங்களால் கொஞ்சம் பயம் குறைந்தாலும், ஏனோ சந்தானத்திற்கு வெளிநாடு போகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தது. ஒரு வேளை சொந்த, பந்தங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கவலையாகக் கூட இருக்கலாம்.  நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.  முகவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. திடீரென்று  தான் பணம் எங்கேயோ கொடுத்து ஏமாந்து விட்டோமோ என்ற  அச்சம் வந்து  அடி வயிற்றைப் பிசைந்தது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேர்த்த பணம் மொத்தமாகப் போய்விட்டதோ என்று வியர்க்க விறுவிறுக்க பாதி தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து கொண்டு முருகா.. முருகா.. என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.  பகலெல்லாம், அந்த முகவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த தன் பணத்தைத் தூக்கிக்கொண்டு எங்கேயும் ஓடிவிட மாட்டார் என்று அறிவு சொன்னாலும்,  உணர்வு அதை ஏற்க மறுத்து இருட்டு கட்டும் சமயத்தில் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டேதான் இருந்தது.   

ஒரு வழியாக முகவரிடமிருந்து அழைப்பு வந்தது வயிற்றில் பால் வார்த்தது.  அடித்துப் பிடித்து நான்கு பேண்ட், சட்டையும், தோளில் மாட்டும் பையும், ஒரு பெட்டியும் வாங்கி அத்தியாவசியமான பொருட்களை மட்டும் அடுக்கிக்கொண்டு கிளம்பியாகிவிட்டது. அம்மா, அப்பா, தம்பி, தங்கை அனைவரிடமும் பிரியாவிடையும் பெற்றாகிவிட்டது. உடன் வந்து வழியனுப்ப எல்லோருக்கும் ஆசை இருந்தாலும், நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை.  கணினி வன்பொருள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் வேலை என்று முகவர் சொன்னது தனக்கு மட்டுமல்லாமல், தன் குடும்பத்தையே தலை நிமிர்ந்து பெருமையாக நிற்கச் செய்தது தெரிந்தது. அதே மகிழ்ச்சியுடன் தாயகத்தை விட்டுக் கிளம்பிவிட்டான் சந்தானம்.

முதன் முதலில் விமானப் பயணம். கனவிலும் கண்டறியாத அனுபவம்.  இனி எல்லாம் சுகமே என்று உள்ளம் குதூகலித்திருந்ததில், கடந்து வந்த பயணம் நினைவில் இல்லை.  கோலாலம்பூர் விமான நிலையத்தைப் பார்த்தவுடன் பிரமாண்டமானதாகத் தெரிந்தது.  கணினி வன்பொருள் தயாரிக்கும்  நிறுவனம் எப்படியிருக்குமோ என்ற கற்பனையில் மனம் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது.  முகவர் சொன்ன ஆள் வந்து தங்குமிடம் கூட்டிச் சென்றார். மிக வித்தியாசமான சூழல். மிகச் சிறிய அறையாக இருந்தாலும், அதில் 5 பேர் தங்க வேண்டியதாக இருந்தாலும், இது காற்று வசதியும், சரியான தடுப்புச் சுவரும் கூட இல்லாத ஓட்டு வீடு அல்லவே. அடுத்த நாள் காலை வேலைக்குச் செல்லப் போகும் மகிழ்ச்சியில் உற்சாகமாக இருந்தான்.  இரவு நேரம் என்பதால், எல்லோரும் தூங்க ஆரம்பித்திருந்தனர். சந்தானத்திற்கு மட்டும் உறக்கம் வரவில்லை.  காலை எப்போது விடியும் என்று நொடிக்கொரு முறை மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான் .

பொழுதும் விடிந்தது.  வேலைக்குக் கூட்டிச் செல்ல வண்டியும் வந்துவிட்டது.  அந்நிய நாட்டில் வந்திறங்கிய அடுத்தநாள் வேலைக்குக் கிளம்பியாகிவிட்டது. ஒரு பெரிய கட்டிடத்தின் முன் வந்து நின்ற வண்டியை விட்டு இறங்கியவன், பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் கட்டிடத்தை அண்ணாந்துப்  பார்த்து, பிரமித்துப்போய் நின்றிருந்தான். அந்த முகவர் சந்தானத்தை வரவேற்பு அறையில் போடப்பட்டிருந்த பஞ்சுப்பொதி இருக்கையில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றிருந்தார். அந்த அறையின் அலங்காரமும், பல நாட்டுக் கொடிகள் வண்ண, வண்ணமாக வரிசை கட்டி நின்ற அழகும்  குளுகுளுவென்ற ஏ.சி. யின் சில்லிப்பும் ஒரு மாய உலகில் இருப்பது போன்ற தோற்றமளித்தது அவனுக்கு.  கோட், சூட் போட்ட  ஆபீசர்கள் வலம் வந்து கொண்டிருந்த  அறையில் தான் மட்டும் அன்னியப்பட்டுப் போனதுபோல இருக்கையின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் அவன்.  அங்கிருந்து வெளியே வந்த முகவர் அவனை கூட்டிச் செல்லப்போவது ஒரு கணினி வன்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை என்ற அவனுடைய பேராவலுக்கு  விழுந்தது முதல் அடி. காரணம் அது  ஒரு கட்டுமான குத்தகை நிறுவனம். அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவனின் எண்ண ஓட்டங்களைக் கண்டுகொள்வார் எவரும் இல்லை அங்கு. இறக்கை கட்டிக்கொண்டு பறந்து  கொண்டிருந்த முகவர் கூட எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.  ஆனால் அடுத்தநாள் காலையில் ஓர் பாதுகாப்புக் காலணியும், பாதுகாப்புத் தலைக்கவசமும் மற்றுமொரு மண்வெட்டியும் கையில் கொடுத்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நெடுஞ்சாலையில் பிரிமிக்ஸ் அள்ளிப்போடும் வேலைக்கு அனுப்பியபோதுதான் தன்னுடைய உண்மையான நிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன் கனவுகள் அனைத்தும் நொடியில் பொடிப்பொடியாகிப் போனது. ஆனாலும் அந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூட அங்கு எவரும் இல்லை. 

பகலெல்லாம் இடைவிடாத வேலை.  மாடு போல உழைத்துவிட்டு வந்து படுத்தவனுக்கு உடலெல்லாம் ஒரே வலி.  லேசாக காய்ச்சலும் இருந்தது. அனத்தல் சத்தம் கேட்டால் அருகில் அசந்து உறங்கும் நண்பர்களுக்கு சிரமமாக இருக்குமே என்று மூச்சை இழுத்துப் பிடித்துப் பார்த்தான். ஒன்றும் வேலைக்காகவில்லை. அருகில் படுத்துக் கொண்டிருந்த அன்வர் காதில் விழுந்திருக்கும் போல என்பது அவன் புரண்டு படுத்ததில் தெரிந்தது. ஒரு இந்திய முஸ்லீம் உணவகத்தில் வேலை அவனுக்கு. எட்டு மணி நேர வேலைக்கு 20 மலேசிய வெள்ளி சம்பளமாகக் கிடைத்தாலும், அவனுடைய குடும்பத் தேவைக்காகவும், சில நேரங்களில் உணவகத்தில் கூட்டம் அதிகம் வந்துவிடுவதாலோ, அவன் அன்றாடம்  பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காலை ஏழு மணிக்கு இறங்கினால் மாலை ஏழுமணிக்கு தான் பணி முடிவு பெறும்.  வார விடுமுறைகளோ, மாத விடுமுறைகளோ என எதுவும் கிடையாது . வருடத்தில் ஒரு நாள் வரும் ரமலான் பெருநாள் பண்டிகைக்காக, அந்த ஒரு நாள் விடுமுறைக்காக மட்டுமே ஏங்கியிருக்க முடிந்தது அவனால்.  எட்டு மணி நேர வேலையின் பின்னர் கிடைக்கும் மேலதிக ஒவ்வொரு மணிக்கும் அதிக வேலை நேரக் கூலி கிடைத்தாலும்,  உடம்பின் அத்துனை சக்தியும் உறிஞ்சப்பட்டு, வெறும் நாராகக் கிடந்தான். ஊருக்குப் போய் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் மனைவி, குழந்தையைக் காண முடியாமல், பிரிவுத் துயரில் வேறு நொந்து போய்க்கிடந்தான்.  இதிலும் சந்தானத்தின் முனகல் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தவன், அவன் தலையைப் பிடித்துப் பார்த்து காய்ச்சல் இருப்பதை தெரிந்து கொண்டு, மாத்திரை வேண்டுமா என்று கேட்டான்.  அப்போதுதான் தானும் காய்ச்சல் மாத்திரை வைத்திருப்பது நினைவிற்கு வந்தது. மெல்ல எழுந்துகொள்ள முயன்றவனால் தலை பாரம் அழுத்த எழுந்து கொள்ள முடியாமல் போனது. அன்வர் அதைப் புரிந்து கொண்டு அவன் காட்டிய திசையில் இருந்த அவனுடைய பெட்டியில் இருந்த மாத்திரைப் பையை எடுத்துக் கொடுத்தான். கொடுத்தவனுக்கும் பேச சத்து இல்லை, அதை வாங்கியவனும் பேசும் நிலையில் இல்லை. அமைதியாக  ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்து வாயில் போட்டு, அன்வர் கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு அவரவர்கள் உலகில் ஆழ்ந்தபடி, அமைதியாகப் படுத்தனர் இருவரும். 

வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாதம் முடிந்த நிலையில், வீட்டிற்கு ஒரு அளவிற்கு கனிசமாகப் பணம் அனுப்ப முடிந்ததில் கிடைத்த மகிழ்ச்சி மட்டுமே அவனைத் தொடர்ந்து பணி செய்ய வைத்தது. எட்டு மணி நேர வேலைக்கு  நாற்பது வெள்ளி வாங்கினாலும் வேலையின்  கடுமை மிக அதிகம்தான். சில நேரங்களில் அதைத் தாங்க முடியாமல் போவதும் உண்டு.  ஆனால் அதற்கும் மேலும் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று அவன் முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை.  ஆம், திடீரென்று ஒருநாள் மேலதிகாரி கூப்பிட்டு, தங்கள் குத்தகைக் காலம் முடிவடைந்துவிட்டது. இனி அடுத்த டெண்டருக்கு குத்தகை கிடைக்கும்வரை வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை என்று சொன்னபோது தலையில் இடி விழுந்ததுபோல இருந்தது அவனுக்கு. இன்னும் எவ்வளவு நாட்கள் இப்படி சம்பளமும், வேலையும் இல்லாமல் சும்மா குந்திக்கொண்டிருக்க முடியும் என்று நினைத்த போது பகீரென்றது. முன்கூட்டியே தெரிந்திருந்தால் கையில் நாலு காசு சேமித்து வைத்திருக்கலாமே என்று தோன்றியது. தாய்நாடு விட்டு அயலகம் வந்து சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலை வந்துவிடுமோ என்று அச்சம் வந்துவிட்டது.  வெளியில் சொல்லவும் வேதனையும், வெட்கமும் பிடுங்கித் தின்றது சந்தானத்திற்கு. 

கையில் இருக்கும் மிக சொற்பமான வெள்ளியை சிக்கனமாகச் செலவு செய்தாலும் 15 நாட்களுக்கு மேல் வராது. அதன் பிறகும் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. வேறு எங்காவது வேலைக்குப் போகலாம் என்றால் கடவுச்சீட்டு முதலாளியிடம் இருந்ததால் வேறு எதுவும் செய்ய முடியாமல் சிக்கிக் கொண்டது புரிந்தது.  இப்போது பணிபுரியும் நிறுவனத்திற்கு மீண்டும் குத்தகை விரைவில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு. இல்லையென்றால், இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக்கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்பது புரிய மிகவும் தாமதமானது. அன்வர் சொல்லித்தான் அதுவும் தெரிந்தது.  நண்பர்களோ, உறவினர்களோ, வேறு யாராவது  தம் நலம் விரும்பிகளோ தங்களது செலவில் பயணச்சீட்டு வாங்கித் தந்தால்தான் நாடு திரும்ப முடியும், இல்லையெனில் மலேசிய அரசாங்கமோ, இந்திய தூதரகமோ ஏற்பாடு செய்யும் வரைக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியதுதான் என்று அன்வர் மேலும் சொன்னபோது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது சந்தானத்திற்கு.  அன்வர் அதை ஓரளவிற்குப் புரிந்து கொண்டாலும் சந்தானத்திற்கு உதவி செய்யும் நிலையில் அவன் இல்லை என்பது தெரிந்ததுதான்.  இப்படிப்பட்ட ஒரு குழப்பமான நேரத்தில்  ஏதும் முடிவெடுத்தால் அது தப்பாகிவிடும் என்று கொஞ்சம் தள்ளிப் போட நினைத்து அமைதி காத்தான்.

 காலார  கொஞ்ச நேரம் நடந்து வந்தால் மனதில் தெளிவு ஏற்படலாம்  என்று நினைத்து கிளம்பி வெளியே வந்தவன்  கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். கோலாலம்பூரின் பிரதான சாலைகள் அனைத்தும் பளபளவென ஒரு தூசி, தும்பும் இல்லாமல் சுத்தமாக இருந்ததோடு, எத்தனை அழகான போக்குவரத்துக் கட்டுப்பாடு என்று யோசித்துக் கொண்டே நடந்தான்.  சாலையின் இரு புறமும் வானளவு உயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான கட்டிடங்கள்.  வண்ண விளக்குகளும், வகை வையான  அலங்காரங்களும் இரசிக்க ஆரம்பித்த கணம் மன பாரமெல்லாம் வெகுவாகக் குறைந்திருந்தது.  ஒரு ஓரமாக நின்று கொண்டு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தவனின் அருகில், ஒரு மெல்லிய குரல் ஒலித்தது.

“அண்ணை.. அண்ணை” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான் சந்தானம்.   கசங்கிய உடையும், கலைந்த தலை முடியும், கண்ணில் இருந்த சோகமும் அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்பதைக் காட்டியது.  23 அல்லது 24 வயது இருக்கலாம். கருத்த மெலிந்த தேகம். குள்ளமான உருவம்.  முழங்காலுக்கு கீழே ஒரு  பழைய துணியால் கட்டு போட்டிருந்தான்.  அவன் உடுத்தியிருந்த பழைய வெளிறிப்போன  பர்முடாஸின் ஓரங்களில் இரத்தம் காய்ந்து கிடந்தது. தயங்கியபடியே  அவன் அருகில் நெருங்கி வந்தவன், கம்மிய குரலில், 

 “அண்ணை தமிழோ” என்றான் வந்தவன்.  

ஆமா, ஏன் கேட்கிறாய். என்ன பிரச்சனை உனக்கு” என்று கேட்டான்.

” ஓம்,  அண்ணை, நான் ஒரு தமிழனின் கார் கழுவும் நிலையம் ஒன்றில் பணி செய்தனன்.  நேற்று இரவு கூடுதலாக நீண்ட நேரம் பணி செய்ததால் காலையில் அசதியில் தூங்கிப் போனவன், வழமையாக  எழுந்து கிளம்பும் நேரத்திற்குப் போக முடியவில்லை. அதனால் எனக்கும், முதலாளி இடையேயும் வாக்குவாதம் முதிர்ந்ததால், அவர் மற்ற வேலையாட்களை சேர்த்துக் கொண்டு என்னை இரும்புக் கம்பியால் தாக்கியதில் காலில் சதை கிழிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது.” 

உள்ளம் பதறியபடி, “ ஐயோ, டாக்டரிடம் கூட போகவில்லையா.  துரு பிடித்த இரும்பாக இருந்தால் செப்டிக் ஆகிப்போயிடுமே?”  என்றான்.

“ஓம், அண்ணை. அது பழைய இரும்புக் கம்பிதான். காயத்துக்கு மருந்து கட்டக்கூட காசில்லை. பாஸ்போர்ட் கூட முதலாளியிடம்தான் இருக்கிறது” என்றான் கண்ணீர் மல்க. 

சோதனை என்று வந்தால் மனிதனுக்கு மேலும், மேலும் தொடர்ந்து  வந்து கொண்டுதான் இருக்கிறது. தன் நிலையே அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவது போல இருக்க, தன்னைவிட மோசமாக ஒருவன் வந்து நிற்கும்போது வேறு எதுவும் பேசத் தோன்றாமல், சாந்தன் என்று பெயர் கொண்ட அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காயத்திற்கு மருந்து போட்டு கட்டு கட்டிவிட்டு, ஒரு உணவு விடுதிக்கு கூட்டிச் சென்று ஒரு வேளை உணவு வாங்கிக் கொடுத்தான். அந்த நேரத்தில் அது மட்டுமே அவனால் முடிந்தது. ஏனோ திடீரென தன் தம்பியின் நினைவு வந்தது. 

“அண்ணை எனக்கு எங்கேயும் ஒரு பணி வாங்கித்தர இயலுமா?” என்று சாந்தன் கேட்டபோது அந்த சூழ்நிலையிலும், சந்தானத்திற்கு சிரிப்புதான் வந்தது. 

”நான் இப்போது இருக்கும்  நிலையில் வேறு எந்த உதவியும் செய்ய முடியாது.  எப்படியாவது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முயற்சி செய் முதல் வேலையாக. ஏதேனும் மக்கள் நல அமைப்பின் உதவியையோ  அல்லது மலேசிய இந்தியர் அரசியல் அமைப்புகளிடமோ  உதவி கேட்டால் கிடைக்கக்கூடும்.  அதை முதலில் செய்யும் வழியைப் பாருப்பா” என்று கூறி நகர ஆரம்பித்தான் சந்தானம். 

தன் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாகி நிற்பதை  சாந்தனிடம் சொல்லிப் புலம்ப ஏனோ மனசு வரவில்லை அவனுக்கு.  தன் அறைக்குள் சென்று தன் மூலையில் சுருண்டு முடங்கியபோது, அடுத்த நாள் என்ன ஆகுமோ என்ற வேதனை இதயத்தைப் பிழிந்தெடுக்கத்தான் செய்தது. முகவர் வழங்கிய திருட்டு விசாவில் வந்து சிக்கிக் கொண்டு வாழ்வைத் தொலைத்துவிட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டப்பூர்வமாக நேர்மையான முறையில் வந்தும்,   முதலாளி வர்க்கத்தின், கொடுமையான நடவடிக்கைகளால் சட்டவிரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும்,  இருக்கத்தான் செய்கிறார்கள்.   நேர்மையான முறையில் பல சிரமங்களுக்கிடையே, போராடி வந்திருக்கும்  தன்னைப் போன்ற ஒரு தொழிலாளியை இது போன்ற சம்பவங்கள்தான்  சட்டவிரோத தொழிலாளராக மாற்றி விடுகின்றன என்று நினைத்தான்.  பேசாமல் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு வேறு ஏதும் வேலை தேடலாம் என்றாலும், தன்னை நம்பி யாரும் வேலை கொடுக்க வேண்டுமே, ஒரு வேளைவேலை கிடைக்காவிட்டால் திரும்ப இந்த முதலாளியிடமே வந்தால் உள்ளே விடுவாரோ மாட்டாரோ தெரியவில்லையே என்றும் குழப்பமாக இருந்தது. கோழிப்பண்ணையில் வேலை செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள், தங்கள் கூலியை உயர்த்திக் கொடுக்குமாறு கேட்டதற்கு முதலாளி ஆட்களை வைத்து அவர்களை அடித்து, உதைத்ததோடு, அவர்களை அடைத்து வைத்து சாப்பாடு கூட தராமல் சித்திரவதை செய்தததையும் அன்வர் மூலமாக அறிந்திருந்தான். இதையெல்லாம் பார்க்கும்போது, தன் முதலாளி எவ்வளவோ தேவலை என்று தோன்றியது. எப்படியும் வேறு குத்தகை வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கையும் துளிர் விட்டவுடன், மெல்ல தூக்கம் எட்டிப் பார்த்தது.  அடுத்த நாள் பொழுது நல்ல செய்தியைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் சத்தமில்லாமல் திரும்பிப் படுத்தான்.

மலிவான கூலியில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து ,மலேசிய முதலாளிகளைக் காப்பாற்றும்  தமிழ்நாட்டு முகவர்கள்,  எதையும் கண்டுகொள்ளாமல், இந்தியத் தொழிலாளிகளின் நலனைப்பற்றிய கவலை சற்றும் இல்லாத இந்தியத் தூதரகம் போன்றவைகள் குறித்த விழிப்புணர்வே இல்லாமல்,  வெளிநாட்டுக் கனவில் விட்டில் பூச்சிகளாய் வந்து விழுந்து வதைபடும் தொழிலாளர்களின் நிலைதான் என்ன? இப்படி விடை தெரியாத பல கேள்விகளோடு  விழி மூடிக்கிடந்தான் சந்தானம்.


10 comments:

  1. வணக்கம் சகோதரர்
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க திரு பாண்டியன். தங்களுக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்.

      Delete
  2. பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் .....
    இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி, அம்பாளடியான் அம்மா அவர்களே.

      Delete
  3. மனதை பிசைய வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் எல்.கே. தங்கள் வருகைக்கும், கதையை வாசித்ததற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. அவலங்கள் சூழ்ந்த வறுமையிலும் அவ்வப்போது செம்மை காண முயலும் சந்தானம் போன்றவர்கள் ஒரு விதத்தில் முட்டாள்கள். ஒரு விதத்தில் மனிதத்தின் மைல்கற்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு மனதைப் பிசையும் இந்தக் கதை.

    வழக்குச் சொற்கள் பிரமாதம். உங்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு அப்பாதுரை சார்,

      வருக. வருக. தங்கள் வருகைக்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றி. தங்களுடைய ஊக்கமான சொற்கள் என்னையும் இன்னுமொரு மைல்கல் முன்னேறச் செய்யும்.

      Delete
  5. பின்னூட்டம் பதிவானதா தெரியவில்லையே?!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் பதிவாகியிருக்கிறதுங்க. நான் தான் வலைப்பூவிற்கு வராமல் விட்டிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி சார்.

      அன்புடன்
      பவளா

      Delete