Friday, January 17, 2014

வள்ளி தனக்கே குறவர் மலையாட்சி!


பவள சங்கரி
2009 – 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு. விஜயா அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்
மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது அன்பில் உறைந்திருந்த போழ்தில் பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ள பாடல்:
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக்
குறவனெங்கள் வீட்டிற் கொண்ட
வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி
சீதனமா வழங்கி னாராற்
பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு
துணியிலையென் பிறகே வந்த
கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு
மெனக்குமிலை கங்சி தானே.
20
800px-PettaiNarikoravas


நாகரீகம் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்திலும், சில இன மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளையும், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் இருப்பதைக் காண முடிகிறது. இதற்கு, அவர்களின் பின் தங்கிய பொருளாதார நிலையும், போதிய கல்வியறிவும் இல்லாததே முக்கிய காரணமாகிறது. ‘நரிக்குறவர்கள்’ என்று அழைக்கப் பெறும், குறிப்பிட்ட ஒரு நிலையான தங்குமிடம் இல்லாத நாடோடிகளைப் போல வாழ்பவர்களான இவர்கள் அதனால் இழக்கக்கூடிய பல நன்மைகளில் மிக முக்கியமானது அவர்தம் குழந்தைகளின் கல்வி. பெற்றோர்களின் பின்னால் ஊர் ஊராக அலைந்துகொண்டு, அந்த வயதில் கிடைக்கக்கூடிய அத்துனை இன்பங்களையும் இழக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையின் உச்சம். ஆனால் இவர்களிடமும் ஆச்சரியப்படும் வகையில் பல திறமைகள் உள்ளது. குறிப்பாக குறவர்கள் காலம் காலமாகத் தாங்களே தயாரித்து உட்கொள்ளும் நாட்டு மருந்துகள், அதனால் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற்றிருப்பது. குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைக் கொடுக்கும் இவர்களுடைய மருத்துவக் கலையை, இடாய்ச்சு நாட்டு அறிஞர் ஒருவர் ஆய்வு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நரிக்குறவப் பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கை தேர்ந்தவர்கள். இந்த இனத்து ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ’கவண்வில்’ என்று சொல்கிற, சிறு பறவைகள், விலங்குகள், மரத்தில் இருக்கும் பழங்கள் போன்றவற்றை குறி பார்த்து அடிக்க உதவும் உண்டிவில்லை நன்கு கையாளும் திறமை மிக்கவர்கள். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி மணிகள் போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்து பிழைப்பவர்கள். இந்த நரிக்குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் , நாடி பார்த்து நோய்க்குறி சொல்வது ஆகியவற்றில் தனித்திறமை வாய்ந்தவர்கள். குறத்தி குறி சோசியம் சொல்லும் வாக்கு சுத்தமானது என்று இலக்கிய காலத்திலிருந்து போற்றப்பட்டு வருவது நாம் அறிந்ததே. குறவர்கள் மராட்டிய வழி வந்தவர்கள் என்றும், மராட்டிய வீரர் சிவாஜியின் படைவீரர்களாக இருந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். சிவாஜியின் ஆட்சிக்காலம் நிறைவுற்றபோது அவருடைய படை வீரர்களான இவர்கள் காட்டில் சென்று மறைந்து வாழ வேண்டி வந்ததாம். அப்பொழுது அங்கிருந்த இலை, தளைகளை உடுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கிருக்கும் துப்பாக்கி சுடும் திறமை மற்றும் வேட்டையாடும் திறமையைக் கண்டறிந்து துப்பாக்கி வழங்கி பிழைக்க வழி செய்திருக்கிறார்கள். அதன்பின் மெல்ல, ஊருக்குள் வந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு ‘வாகிரி’ என்ற பேச்சு மொழி மட்டும் உண்டு. ஆனால் இதற்கு எழுத்து வடிவம் இல்லை. குருவிக்காரர் என்றும் அழைக்கப்படுகிற இவர்கள் தமிழ்நாடு அரசால் மலைவாழ் மக்கள் (S.T) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
வறுமையின் பிடியில் சிக்கி, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச அடிப்படைக் கல்வியாவது கிடைத்து, அவர்களுடைய வாழ்விலும் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவரான சேலம் மாவட்ட ஆட்சியாளர் உயர்திரு ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்தம் துணைவியார் திருமதி. கிருத்திகா ஆகியோர் இந்த நரிக்குறவ இனக் குழந்தைகளின் மீது கொண்ட பரிவு மற்றும் அதீத அக்கறையின் காரணமாக அவர்களின் வாழ்விலும் ஒரு விடிவு பிறந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமன் அவர்களின் மகள் வயிற்றுப் பெயரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நம் தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக நரிக்குறவர் குழந்தைகளுக்காக பள்ளி ஆரம்பித்திருக்கிறார்.
vijaya
2009 – 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதான, நல்லாசிரியர் விருது பெற்ற செல்வி.விஜயா அவர்கள் இந்தச் சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்து இவர் ஆற்றிய அரும் பணிக்காக இவ்விருதைப் பெற்றிருக்கிறார் . ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக மகுடம் சூட்டிக்கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது ஆதீத ஈடுபாடும் மதிப்பும் கொண்ட விஜயா அவர்கள், கல்விப் பணிக்காகவே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். தனக்கென்று ஒரு குடும்பமும், குழந்தைகளும் தேவையில்லை என்று ஆசிரியப் பணிக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். அந்த அர்ப்பணிப்பிற்கு ஆதாரமாக 2009 – 2010ஆம் ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவருடைய சேவை பற்றியும், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக திருமிகு. விஜயாஅவர்களை சேலத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். உற்சாகத்துடன் அவர் உரையாடியபோது அவர் வார்தைகளில் இருந்த உண்மையை அது உணர்த்தியது!
செவ்வி : ஆசிரியத் தொழிலில் சவாலான இந்தப் பணியை எப்போது, எங்கு, ஏன் மேற்கொண்டீர்கள்?
விஜயா : 2003 ஆம் ஆண்டு, சேலம் அருகில் மின்னாம்பள்ளி என்னும் கிராமத்தில், ஒரு கூடாரம் அமைத்து அதில் 9 குழந்தைகளுடன், முதன் முதலில் நரிக்குறவர் குழந்தைகளுக்காக ஆரம்பித்தோம். மின்னாம்பள்ளியில் அப்போது 51 நரிக்குறவர் குடும்பங்கள் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சேலம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த உயர்திரு ராதாகிருஷ்ணன், மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா ஆகியோரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக இப்பள்ளி உருவானது என்றே சொல்ல வேண்டும். மதிப்பிற்குரிய ஆட்சியாளர் அவர்கள், சேலம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக வசித்து வந்த நரிக்குறவர் குழந்தைகளின், ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளைக் கண்டு மனம் வருந்தி இவர்களுடைய வாழ்க்கை முறை மேம்பட ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே இப்பள்ளி உருவானதன் வரலாறு. அவருடைய துணைவியார் திருமதி கிருத்திகா அவர்கள் இதற்கு பெரிதும் ஈடுபாடு காட்டி, முழுமையாகத் தன் சேவைக் கரங்களை நீட்டினார் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் அவர் பலரை இந்தத் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியும், அதை மறுத்துவிட்டனர். தாய்மை உணர்வுடன் கூடிய ஒரு பெண் ஆசிரியை மட்டுமே இப்பணியை முழுமையாகத் தொடர முடியும் என்று அவர் நம்பினார். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்த எனக்கு இப்பதவியைக் கொடுத்தார். நானும் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக என்னால் இயன்ற அளவிற்கு என் பணியை செவ்வனே செய்திருக்கிறேன் என்றே நினைக்க முடிகிறது.
செவ்வி : குறிப்பிட்ட இப்பணியை ஆசிரியத் தொழிலின் சவாலான பணி என்று நான் குறிப்பிட்டதை ஒப்புக்கொள்கிறீர்களா?
விஜயா: ஆம். உண்மைதான். சமுதாயத்தில் ஓரளவிற்கேனும் நல்ல நிலையில் இருக்கும் சிறார்களுக்கு பாடம் எடுப்பதைக் காட்டிலும், அடிப்படை ஆரோக்கியம், நாகரீகம் போன்றவற்றில் மிகவும் பின் தங்கியிருந்த அந்தக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை வழிக்குக் கொண்டு வருவதில் பெரும் முயற்சி எடுக்க வேண்டியதாக இருந்தது. ஆரம்பத்தில் பள்ளியின் உட்காரும் மர இருக்கைகளையெல்லாம் கூட வெளியே வீசிவிடுவார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தவும் முடியாது.
செவ்வி: அந்தச் சிறார்களை வழிக்குக் கொண்டுவர என்னென்ன முயற்சிகள் செய்தீர்கள் என்று சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?
vijaya 1விஜயா : முதல் நிலையில் அவர்கள் பெற்றோரிடம் சென்று பேசினோம். எனக்கு அப்போது குணராணி என்ற ஒரு உதவியாளர் இருந்தார். அவர் மிகுந்த சேவையுள்ளம் கொண்ட கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். அவருடைய ஒத்துழைப்பு குறிப்பிடும்படியாக இருந்ததும், என் பணியை என்னால் ஓரளவிற்கேனும் சரியாகச் செய்ய முடிந்ததற்கான காரணமாக இருந்தது. மற்ற குழந்தைகளின் சாதாரண பள்ளி போல இதனை நடத்த வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்டோம். முதலில் அவர்களுக்குப் பிடித்த காரியங்களைச் செய்து எங்களிடம் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். முதல் காரியமாக ஒரு ஒலிபெருக்கி ஏற்பாடு செய்து, தினமும் காலையில் குறிப்பிட்ட அந்த 9 மணிக்கு, ஒலிபெருக்கியில் அவர்களுக்கு மிகவும் விருப்பமான எம்.ஜி.ஆர். பாடல்களைப் போடுவோம். இந்தப் பாடல்கள் ஒலிபரப்பாக ஆரம்பித்தவுடனே குழந்தைகள் ஆடிக்கொண்டே, ஓடி வந்துவிடுவார்கள். சில தாய்மார்களும்கூட உடன் வருவார்கள். அவர்கள் ஆட ஆரம்பிக்கும் போது, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம். மெல்ல மெல்ல, அவர்களுடன் கலந்து பழக இதுவே எங்களுக்கு அடிப்படையாக இருந்தது. பின் மெல்ல எங்கள் பேச்சைக் கேட்கும் நிலைக்கு வந்தார்கள். நாங்கள் பள்ளிக்கு வரும் போதே, வெல்லம், பொறி கடலை போன்ற தின்பண்டங்களை அன்றாடம் வாங்கி வந்துக்கொடுப்போம். அடுத்து சோப்பு, பல்பொடி என வாங்கி வந்து அவர்களுக்கு அன்றாடம் பல் தேய்த்து குளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினோம். நல்ல துணிமணிகளை, வெளியில் பொது மக்களிடம் சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்தோம். பெரும்பாலானக் குழந்தைகள் வெறும் கோவணம் மட்டுமே கட்டியிருந்தார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளின் நடை, உடை, பாவனைகளின் மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடன், மற்ற குழந்தைகளுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அங்கு அப்போது 51 கூடாரங்களில் வசித்துக் கொண்டிருந்த மக்களின் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் வர ஆரம்பித்தனர். சின்னச் சின்ன வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம். ஜெ.ஜெ. பள்ளி என்ற அந்தப் பள்ளி பிரபலமாக ஆரம்பித்தது. அந்தப் பள்ளியைக் கடந்து செல்பவர்கள் கூட சிறிது நேரம் நின்று ஆச்சரியமாகப் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள்
செவ்வி : நரிக்குறவர்கள் பேசும் மொழி ‘வாகிரி’ என்ற ஒரு எழுத்து வடிவமற்ற மொழி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மொழி உங்களுக்குத் தெரியுமா? அவர்களிடம் பேச்சுத் தொடர்பு எப்படி ஏற்படுத்திக் கொண்டீர்கள்?
விஜயா : ஆம். வாகிரி என்பதுதான் அவர்கள் பேசும் மொழி. எனக்கு ஹிந்தி மொழி நன்கு தெரியும். வாகிரி மொழி Photo0210கிட்டத்தட்ட அதனை ஒத்து இருக்கும். நரிக்குறவர் சங்கத் தலைவர் சங்கர் என்பவர் அங்கு இருந்தார். அவரிடம் சில நாட்கள் சென்று நானும், குணராணியும், ஓரளவிற்கு முக்கியமான வார்த்தைகளைக் கற்றுக்கொண்டோம். ஹிந்தியும், ஆங்கிலமும் ஓரளவிற்கு படித்துக் கொள்ள முடிந்த அவர்களால், தமிழ் படிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. முதலில் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், நடை, உடையையும் மாற்றும் வேலையையே அதிகமாகச் செய்தோம். பின் மெல்ல, மெல்ல கல்வி கற்பிக்க ஆரம்பித்தோம். அப்போது பணியில் இருந்த முதன்மை கல்வி அலுவலர் திரு கார்மேகம் அவர்களின் முழு ஒத்துழைப்பும் எங்களுக்குக் கிடைத்தது.
செவ்வி: முன்பின் பள்ளி பற்றி அறியாத அவர்களுக்கென்று ஏதும் தனிப்பட்ட முறை பாடத்திட்டங்களை உருவாக்கினீர்களா? அது பற்றி சொல்லுங்களேன்.
விஜயா : ஆம். மற்ற குழந்தைகளுக்கு உள்ளது போல சாதாரண பாடத் திட்டம் இவர்களுக்கு சரிப்பட்டு வராது. விரைவிலேயே 52 குழந்தைகளை சேர்த்துவிட்டோம். வயது அடிப்படையில் அல்லாமல் அவர்களின் புரிந்து கொள்ளும் திறனின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டோம். பொதுவான ஆரோக்கியம் சார்ந்த கல்வி, அறிவியல், தமிழ், கணக்கு என்று சொல்லிக் கொடுத்தோம். ஆரோக்கியம் சார்ந்த கல்வி என்றால், அன்றாடம் குளிக்கும் வழக்கம், நல்ல உடை உடுத்துவது, சமுதாயத்தில் மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை என்று இப்படி பலவற்றையும், கற்றுக் கொடுத்தோம். அருகில் இருந்த திருமண மண்டபத்தில் மீந்த சாப்பாடு இருக்கிறது என்று கூப்பிட்டால் போய் வாங்கிச் சாப்பிடக் கூடாது. முன்னாலேயே அழைத்தால் மட்டுமே செல்ல வேண்டும். அதுவும் ஒழுங்காக உட்கார்ந்து இலையில் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். அவர்களும் யார் சாப்பாடு கொடுத்தாலும் வந்து எங்களிடம் கேட்பார்கள் வாங்கி சாப்பிடலாமா என்று. அடுத்து அறிவியல் வகுப்பு என்றால் அருகில் இருந்த தோட்டம், வயல்வெளி, வனம் என அழைத்துச் சென்று இயற்கை சார்ந்த அறிவியல் வகுப்புகள் எடுத்தோம். கணக்குப் பாடம் எடுப்பது மிக எளிதான காரியம். ஒரு 6 வயது சிறுவன் கூட மிகச் சரியாகக் கணக்குப் போடுவான். அதே போல் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் கூட எளிதாகப் பழகினார்கள். எழுத்துப் பயிற்சி கொடுப்பது சற்று சிரமமாக இருந்தது. ஒரு எழுத்து சரியாக எழுதினால், பரிசாக வெல்லம் கொடுப்போம். அது அவர்களுக்கு உற்சாகம் அளிக்க, மேற்கொண்டு படிக்க வைக்க முடிந்தது. சிறுவர்கள் எலியையோ அல்லது பூனையையோ கண்டுவிட்டால் போதும். அடுத்த நிமிடம் அதைப் பிடித்து அங்கு அருகில் இருந்த வெட்ட வெளியில் நெருப்பு மூட்டி அதைச் சுட்டுத் தின்றுவிடுவார்கள். பார்க்கவே அச்சப்படும் எங்களையும் உபசரிப்பார்கள். இவர்கள் பறவைகளை விசில் அடித்து வரவழக்கும் கலையை நன்கு கற்று வைத்திருந்தார்கள். அப்படி வரவழைக்கும் பறவைகளை ஒரு நாளும் சாப்பிட மாட்டார்கள். கொக்கு வேட்டைதான் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கும், பிடித்த உணவும் கூட.
மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அவர் மனைவியும் வாரம் ஒரு முறை தவறாமல் நேரில் வருவார்கள். வரும்பொழுது அந்தச் சிறார்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனா, சிலேட், பல்பம், என அனைத்தும் வாங்கி வருவார்கள். இப்படி 75 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்தது. பின் வகுப்புகள் அதிகமாக விரிவுபடுத்தப்பட்டதால் கட்டிடங்களும் கட்டப்பட்டது. இறுதியில் எட்டாம் வகுப்பு வரை கொண்டு வந்தார்கள்.
செவ்வி : அதற்கு மேற்கொண்டு மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்தார்களா?
விஜயா : ஆம், பலர் மற்ற பள்ளிகளில் சென்று தங்கள் கல்வியைத் தொடரும் அளவிற்கு தன்னம்பிக்கை கொண்டுவிட்டார்கள் என்பதே மகிழ்ச்சியான செய்தி. ஏழெட்டு மாணவர்கள் சேலம் வைஸ்யா கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பும் படித்தார்கள் என்று அறிந்தேன். இந்தப் பள்ளி மிக நல்ல முறையில் நடைபெறுவது அறிந்து, ஆந்திர மாநிலத்தின் மண்டீஸ் என்ற ஒரு வகை பழங்குடியினரின் குழந்தைகளுக்கு இது போன்ற பள்ளி ஆரம்பிக்க வேண்டுமென்று, எங்கள் பள்ளியையும், கற்பிக்கும் முறையையும் பற்றி அறிந்துகொள்ள வந்தனர். டிஸ்கவரி தொலைக்காட்சி நிலையத்திலிருந்தும் வந்து அனைத்தையும் பதிவேற்றிச் சென்றார்கள்.
செவ்வி : குழந்தைகளுக்குத் தவிர நரிக்குறவர் சமுதாயத்திற்கு என்று குறிப்பிடும்படியான பணிகள் ஏதாவது செய்திருக்கிறீர்களா?
விஜயா : திருமதி. கிருத்திகா அவர்களின் பேரார்வம் மூலமாக நரிக்குறவர் சமூக மகளிருக்காக, மகளிர் மகாநாடு நடத்தினோம். கருத்தடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பால்ய விவாகம் செய்வதைத் தவிர்க்க வேண்டியதன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். அதனால் பெருமளவில் பால்ய விவாகத்தைத் தவிர்க்கவும் வைத்தோம். எந்த ஊரில் அந்தக் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரையே அந்தக் குழந்தைக்கு அவர்கள் வைப்பது வழக்கம். அதை மாற்றி வேறு பெயர்களும் வைக்கப் பழக்கினோம். அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஆவண செய்தோம்.
செவ்வி : நரிக்குறவர் இனத்தில் திருமணம் எப்படி செய்கிறார்கள்? அவர்கள் குழுவிற்குள்ளேயே பெண் எடுப்பார்களா?
விஜயா : குறவர் இனத்தில் பலவகைப் பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் ஒரே குழுமத்தில் உள்ள பெண்ணை மணக்கமாட்டார்கள். வேறு ஒரு குழுமத்திலிருந்துதான் பெண் எடுப்பார்கள். நாங்கள் இருந்த அந்த காலகட்டத்தில், மின்னாம்பள்ளியில், லஷ்மணன் குரூப் மற்றும் சங்கர் குரூப் என இருவகைக் குழுக்கள் இருந்தார்கள். அவர்களிடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் வரும். லஷ்மணன் குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று நாகரீகமாக இருப்பார்கள். பெண்கள் புடவை உடுத்தியிருப்பார்கள். ஆனால் சங்கர் குழுவில் இருப்பவர்கள் நாகரீகம் குறைந்தவர்களாக இருப்பார்கள். பெண்கள் பாவாடை, தாவணி அணிந்திருப்பார்கள். அப்பொழுது இருவரும் தங்கள் குழந்தைகளை ஒன்றாகச் சேர்ந்து படிக்கவும் விரும்பாமல் தனித்தனி வகுப்புகள் வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார்கள். நாங்கள் அவர்களை உட்கார வைத்துப்பேசி சமரசம் செய்துதான் ஒன்றாகப் பள்ளியில் படிக்க வைத்தோம்.
பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்றுவரை கடைபிடித்து வரும் சமூகங்களில் நரிக்குறவர் சமூகம் முதன்மையானது. கடும் கட்டுப்பாடுகள், ஒழுக்கமான வாழ்க்கை முறைமையைக் கொண்ட இவர்களின் திருமண முறையும் சுவையானது. இவர்கள் சமூகத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை தர வேண்டும். அது மட்டுமல்லாமல் பெண் வீட்டுக்காரரின் உறவுமுறைகள் அனைவருக்கும் உடுத்த உடை வாங்கித்தர வேண்டும். திருமணச் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சாமிச்சொத்து என்று சொல்லக்கூடிய, மூதாதைகள் கொடுத்துவிட்டுப் போன வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள் போன்ற சாமிப்பொருட்கள். நிறைய வைத்திருப்பவர்களுக்கே மதிப்பு அதிகம். இவர்களில், எருமை வெட்டுகிறவர்கள், ஆடு வெட்டுகிறவர்கள் என்று இரண்டு பிரிவு உண்டு. எருமை வெட்டுகிறவர்கள் ஆடு வெட்டுகிறவர்கள் வீட்டில் மட்டும்தான் பெண் எடுக்க வேண்டும். அதற்கு மாறாக பெண் எடுத்தால் அண்ணன் தங்கை முறையாகிவிடும் என்பார்கள். பெண்களுக்கு 13 முதல் 14 வயதிலேயும், ஆணுக்கு அதிகபட்சம் 18 வயதிலும் திருமணம் செய்து விடுவார்கள். ஒரு சில காதல் திருமணங்களைத் தவிர, பெரும்பாலும் பெரியவர்கள் பாத்துதான் திருமணம் செய்கிறார்கள். இரவு நேரங்களில் திருமணம் செய்வார்கள். பெரும்பாலும் குழந்தைகள் பிறக்கும்போதே திருமணத்தை நிச்சயித்துவிடும் வழக்கம் நரிக்குறவர்களிடையே இருந்தது. உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக பெண் குழந்தைக்கு மூன்று வயதான உடனே, திருமணத்தை முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடும் வழக்கம் இருந்தது. தற்போது அது குறைந்து விட்டது.
தெளிவாக உருவான இவர்களின் குடும்ப அமைப்பு முறை, சகோதர, சகோதரி பாசம், புரிந்துணர்வு, பொருளாதாரப் பின்னடைவுகளைத் தாண்டியும் இவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் நிம்மதியான, நிறைவான வாழ்க்கை முறைகள் பாராட்டிற்குரியது. இவர்களின் கூடி வாழும் வழமையும் போற்றுதலுக்குரியது. நாற்பது, ஐம்பது கூடாரங்களில் வாழும் குழந்தைகள் அனைவரும், பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும், எந்த வீட்டில் வேண்டுமானாலும் சென்று உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். கல்வியறிவு இல்லாத போதும் அவர்களுடைய கணக்குத் திறமை அபாரமானது. இளமையிலேயே நன்கு கணக்குப்போடும் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதே போல இயற்கை மூலிகைகளில் சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு முறை எனக்கு தலை வலி வந்தபோது ஒரு சிறுவன் காட்டுப் பூண்டு என்று ஒரு வகை தாவர மூலிகையைக் கொடுத்து முகரச் செய்தான். மயக்கம் வரும் அளவிற்கு ஒரு காரம் இருந்தது. பின் தலை வலியும் உடனே குணம் ஆனது. பிரசவம் கூட மிக எளிமையாக அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் மருத்துவமனை செல்வதில்லை. இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தன்மைகள் பலவும் இருக்கின்றது.
உலகின் உன்னதமான பணிகளில் ஆசிரியப் பணியும் ஒன்று. ஏற்றி விடும் ஏணி என்பதைவிட, வாழ்க்கையில் பல பாடங்களையும் கற்றுத் தரும் பணி என்றே சொல்லலாம். அந்த வகையில், காரைக்கால் அம்மையார் மீண்டும் பிறவி இருந்தால் உன்னை மறாவாமல் இருக்கும் வரம் வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டியது போல, அடுத்தொரு பிறவியிலும் என்னை ஆசிரியப் பணியிலேயே இருக்கும் வரம் அருள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன். தாய் மட்டுமே ஒரு குழந்தையின் முதல் ஆசிரியையாக இருக்க முடியும். ஒரு குழந்தையை நல்ல குடிமகனாக உருவாக்குவது ஒரு அன்னையின் கைகளில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, தனியார் பள்ளியான செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வராக இருக்கும் திருமிகு. விஜயா அவர்கள் இன்றும் குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகளை பல பள்ளிகளிலும் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நம் வல்லமையின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.
நரிக்குறவர் படத்திற்கு நன்றி :
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

2 comments:

  1. படங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவினையும் பொறுமையாகப் படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  2. பாடல் அருமை... உரையாடலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete