Friday, July 25, 2014

கால காலேசுவரர் சன்னதி

பவள சங்கரி



நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியேன் காயத்தை
ஓர்நொடிக்குள் நீக்கிஎன்னை ஒண்போரூர் ஐயாஉன் 
சீர்அடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.
                                       - ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்


பூமாதேவி செய்த தவம்


 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டிடக்கலை  அமைப்பில் கட்டப்பட்டுள்ளதுதான், கால காலேசுவரர் சன்னதி.  இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் அற நிலையத்துறையின் பொறுப்பில் ரூ. 45 இலட்சம்  நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுகிறது. ஆளுயர நடராசர் திருவுருவம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர் அல்லாத, தேசிகர் வகுப்பைச் சேர்ந்த ஒரு 90 வயது மூதாட்டியே இக்கோவிலுக்குத் தன்னால் இயன்ற வகையில், அவ்வப்போது வரும் பக்தர்களின் சிறு காணிக்கைகள் மூலம் பூசைகள் செய்து வந்திருக்கிறார். மழையும் பொய்த்துப்போனதால் ஊரில் விவசாயமும் நலிந்து போய், மக்கள் தங்கள் பாடே திண்டாட்டம் என்கிற நிலையில், சுவாமியை கவனிக்க முடியாமல் விட்டிருக்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள,  அனந்தமங்கலம் ஆஞ்சேநேயர் சுவாமி கோவிலிலிருந்து ஒரு கி. மீ.  தொலைவில்  அமைந்துள்ளது கால காலேஸ்வரர் சன்னதி.




என்றும் பதினாறு என்று வரம் பெற்ற மார்கண்டேயனைக்  காக்கும் பொருட்டு, சிவபெருமான் எமனை வதம் செய்து காலசம்கார மூர்த்தியாக விளங்கும் திருத்தலமே,  திருக்கடவூர்.  அப்படி வதம் செய்தபோது எமனின் தலை தெரித்து விழுந்த இடம்தான் எருக்கட்டாஞ்சேரி என்கிறார்கள். ஐயனின் திருவருளால் அந்தத் தலை மீண்டும் உயிர் பெற்று எழுந்த இத்தலம் ‘எழுப்பி விட்டான் சேரி’ எனப் பெயர் பெற்று பின்னர்  மருவி ‘எருக்கட்டாஞ்சேரி’ என ஆகியுள்ளது.



சிவபெருமானார் எமனை வதம் செய்ததால், மக்களுக்கு எமபயம் முற்றிலும் நீங்கிவிட்டது. அதனால் இறைபக்தி குறைந்ததோடு அதர்மங்கள் பெருகியுள்ளன. நாட்டில் அக்கிரமங்களும் அதிகரித்துள்ளன. பூமித்தாய் பாரம் தாங்காமல் மனம் நொந்து,  சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற வரத்தின் மூலமாக  மீண்டும் எமனுக்கு உயிர் பெற்றுத் தருகிறாள். சினம் தணிந்த சிவபெருமான் எமனுடைய தலையை இத்தலத்தில் பொருந்தச் செய்து உயிர் கொடுத்தார்.எமனுக்கே உயிர் கொடுத்த இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு, மரணபயம் நீங்கி, நோய், நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம். திருக்கடவூர் சென்று வழிபடும் பக்தர்கள் எருக்கட்டாஞ்சேரி கால காலேசுவரரையும் அன்னை கருத்தடக்கன்னியையும் வழிபட்டு வருவது வழக்கம். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளுடனும் வாழலாம் என்ற நம்பிக்கையும் மக்களிடம் பரவலாக இருக்கிறது. விரைவில் இக்கோவிலின் திருப்பணி நிறைவேறி ஐயனின் அருளொலி பூரணமாக பிரகாசிக்க நம்மால் ஆனதையும் செய்யலாமே.. 






2 comments:

  1. எருக்கட்டாஞ்சேரி கால காலேசுவரர் சன்னதியின் சிறப்புகளுக்கு நன்றி...

    விரைவில் நல்லது நடக்கட்டும்...

    ReplyDelete
  2. அறியாத ஓர் அருமையான தலம்! படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...