Monday, July 21, 2014

டாப் டக்கர்

பவள சங்கரி


மச்சி,  எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா..  ஷாப்பிங் போகனும்னு சொன்னேனில்ல..  

எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம் உனக்கு.. வீக் எண்ட் போலாமே மச்சி...”

“இல்லடா, என்னோட போன் ரொம்ப மக்கர் பண்ணுது.. உடனடியா வாங்கியாகணும். முக்கியமான டேட்டாஸெல்லாம் அழிஞ்சி போச்சுன்னா என்ன பண்றதுன்னு பயமா இருக்குடா.. இன்னைக்கு சம்பளம் வாங்கினேன். அதான் உன்னோடது மாதிரி ஒரு நோக்கியா போன் வாங்கலாம்னு பாக்குறேன்”

நோக்கியா வேண்டாம்டா. மைக்ரோசாஃட்காரன் நோக்கியாவை வாங்குனதிலிருந்து இன்னும் சரியா செட்டாகலடா...  எல்லோரும் இப்ப அதைவிட்டு சேம்சங்க் போயிட்டிருக்காங்க. அதான் இப்ப மார்கெட்ல டாப் டக்கரா போகுது. நான் இப்ப சாம்சங்க் கம்பெனிக்கு அடுத்த ஸ்டாப்புலதான் பஸ்ஸீக்கு நிக்கறேன். நீ கிளம்பி வந்துடு. நான் அப்படியே பொடி நடையா அதுக்குள்ள வந்து சேந்துக்கறேன்.. சரியா”

“ம்ம்.. அப்படியா சொல்ற..  ஓகேடா மச்சி.       இதோ இப்ப உடனே கிளம்பறேன். வந்து நம்ம உடுப்பி கிருஷ்ணா பவன்ல சூப்பர் நெய் ரோஸ்ட் வாங்கித் தறேன்”

“ஓகே.. ஓகே.. அப்ப சீக்கிரம் வந்து சேரு. பசி வயித்தைக் கிள்ளுது”



எனக்கென்னமோ இந்த டச் ஸ்கிரீன் மாடலே பிடிக்கலைடா.. சில நேரத்துல பாக்கெட்ல வச்சா ஒபன் ஆகி, சார்ஜெல்லாம் போயிடுது..”

“இதுதான் லேட்டஸ்ட் மாடல் சார். மேலே கவர் இருக்கறனால அப்படி ஆக சான்சே இல்ல. இதுதான் இன்னைக்கு மார்க்கெட்ல வேகமா மூவ் ஆயிட்டிருக்கு..”

ஒரு வழியாக ஸ்மார்ட் போன் ஒன்றை வெற்றிகரமாக செலக்ட் செய்து பழைய போன்ல இருந்த எல்லா டேட்டாக்களையும் புது போனுக்கு மாத்திக்கிட்டதோடு, ஏர்டெல்லிலிருந்து டோக்கோமோவிற்கு மாறி புதிய சிம் கார்டும் மாற்றிக்கொண்டான். பெருமை பிடிபடவில்லை. இரவு வெகு நேரம் இருவரும் போனை வண்டாகக் குடைந்து, அதிலிருந்த வசதிகளையெல்லாம் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். சென்னையிலேயே அவ்வளவு லேட்டஸ்ட் மாடல் போன் தன்னிடம் மட்டுமே இருப்பது போல அப்படி ஒரு சந்தோசம் மதுக்கண்ணனுக்கு. சிறுவர்கள் ஒரு புதிய விளையாட்டு சாமானோ அல்லது சைக்கிளோ புதுசாக வாங்கிவிட்டால் சில நாட்களுக்குப் பாவம் சரியாகத் தூக்கம்கூட வராமல் அதை விட்டுப்பிரிய மனம் வராமல் ஒட்டிக்கொண்டே திரிவார்கள். வயதான பின்பும் நம்மில் பலருக்கு அந்த குணம் மாறுவதில்லை. நமக்குப்பிடித்த பொருள் கையில் கிடைத்துவிட்டால் ஏதோ தான் உலகிற்கே பேரரசன் ஆகிவிட்டதுபோல ஒரு மதர்ப்பில் மிதந்துகொண்டு இருப்போம். மீண்டும் உலகிற்கு இறங்கிவர சில காலம் பிடிக்கும். 



”ஏனுங்க்கா.. எனக்கு ஒரு ரோசனை சொல்லுக்கா. நானும் எம்புட்டு நாளா ஒரு நல்ல போன் வாங்கோணும்னு ஆசைமட்டும் வளர்ந்துக்கிட்டே கெடந்தேன். ஆனால் விக்கிற விலவாசில ஒரு  நல்ல போன் வாங்க முடியறதில்லை.  நீ குடுத்த அந்த பழைய போனத்தான் இன்னும் வச்சிருக்கேன். ஆனா என்ன மாயமோ, மந்திரமோ தெரியல.. நேத்து ராத்திரி வூட்டுக்குப் போற வழியில பாடியில் இருக்குற ஆத்தா கோயிலு வாசலுல இந்தப் போன் கிடச்சது. புதுசா பளபளன்னு போனைப் பாத்தவுடனே எனக்கு ஒன்னியும் புரியலே. சத்தமில்லாம தூக்கிக்கினு வந்துட்டேன். என்னமோ ஆத்தா அதை எனக்காகவே கொடுத்த மாதிரி இருந்திச்சு.. அக்கம்பக்கத்துல யாராச்சும் இருக்காங்களான்னு பாத்தேன். தேடிக்கிட்டு வந்தா குடுத்துடலாம்னு இருந்தேன். ஆனா யாருமே அங்க இல்லியா. நானே எடுத்துக்கிட்டு வந்துட்டேன்” வேலைக்காரப் பெண் சித்ரா ஏகப்பட்ட சந்தோசத்தில் இருந்தாள்.

“இங்க கொடு தனம்.. பார்க்கலாம் “ என்றாள் முதலாளியம்மா மாலதி. 

”அம்மா, என்னம்மா இது.. அட புது போன் யாரோடது?”  மகள் ரதி ஆவல் பொங்க வந்து நின்றாள். 

மாலதி நடந்ததை சுருங்கச் சொன்னபோது ரதி,  “அம்மா, இது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட் போன். சேம்சங்க் கம்பெனியோடது. குறைஞ்சது 15,000 ரூபாய் இருக்கும் இதோட விலை. இப்பதான் சமீபத்தில் என் பிரண்ட்  பிறந்த நாளுக்கு அவளோட அப்பா வாங்கிக்கொடுத்தாங்க. ஒர்க் ஆகுதா இல்லையான்னு பார்க்கலாம். சுத்தமா சார்ஜ் இல்ல. சார்ஜ் போட்டுப்பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே சார்ஜில் போட்டாள். தனம், என்ன ஆகுமோ ஏது நடக்கப்போகுதோ, ஒரு வேளை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று வருத்தமாக பார்த்துக்கொண்டிருந்தாள். சார்ஜ் ஆனவுடன்,  போனை ஆன் செய்து பார்த்தபோது அதில் ஏகப்பட்ட குறுஞ்செய்திகளும், மிஸ்ட் கால்களும் இருந்தன. 

“அம்மா, இங்க பாருங்களேன், இதில் எவ்ளோ மெசேஜ் வந்திருக்குதுன்னு. இருங்க அப்படி என்னதான் மெசேஜ் வந்திருக்குன்னு பார்க்கலாம்” என்றவாரு அதைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.  அத்தனை மெசேஜூம், ‘இந்த போன் யார் கைக்கு கிடைத்திருந்தாலும் தயவுசெய்து உடனே கீழ்கண்ட இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். போனிற்கு உரிய பணத்தைக் கொடுத்துவிடுகிறேன். ஒரு உயிர் காக்கும் விசயம் இது. தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள்’ என்ற செய்தியே தொடர்ந்து கடந்த 45 மணி நேரமாக வந்திருக்கிறது. நடு சாமத்திலும் கூட செய்திகள் அனுப்பியிருந்ததால் ரொம்ப முக்கியமான விசயமாகவும், உண்மையாகவும் இருக்கவேண்டும் என்று உரைத்தது. இதற்குள் போனை ரதியின் கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிக்கொண்ட தனம், 

“பாப்பா அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். என்கிட்ட கொடுத்துடுங்க. என்ர வீட்டுக்காரவிங்ககிட்ட சொல்லி இந்த நம்பரைக் கண்டுபிடிச்சிக் கொடுத்துவிடுறேன்.. என்ன அவசரமோ என்னமோ பாவம்”  என்றபடி அந்த இடத்தைவிட்டு நகரத் துடித்தாள் தனம். 

“அக்கா, இருங்க நானே அவங்க கொடுத்த நம்பரில் பேசி விசயத்தைச் சொல்லிடறேன். பாவம் அவங்க.. என்ன அவசரமோ என்னமோ.. “ என்றாள் ரதி.

தனத்திற்கு அதில் உடன்பாடு இல்லை என்பது அவள் முகம் போனபோக்கில் தெளிவாகவேத் தெரிந்தது.  சட்டென்று கிளம்ப எத்தனித்தவளை தடுத்து நிறுத்திய ரதி, “இதெல்லாம் தப்பு அக்கா. அடுத்தவங்க பொருளை எடுக்குறது தப்பு. அதுவும் ஏதோ முக்கியமான டேட்டாஸெல்லாம் இதுல சேமிச்சு வச்சிருப்பாங்க போல..  இதை அவங்ககிட்ட சேர்க்கிறதுதான் நியாயம். இங்க குடுங்க முதல்ல அந்த போனை” என்று அதை வலுக்கட்டாயமாகப் பிடுங்கினாள். அதை மீண்டும் பிரட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்தது  குழப்பமோ அல்லது அதிர்ச்சியோ என்று சொல்ல முடியவில்லை.  அவன் அந்த போனிற்காக அத்துனை செய்தி அனுப்பியதற்கான காரணமும் புரிந்தது. ஒன்றும் பேசாமல் தனத்திடம் அந்தப் போனை கொடுத்துவிட்டாள். அவள் நடவடிக்கை மிகவும் ஆச்சரியமளித்தது.  அவ்வளவு கட்டாயமாக வாங்கியவள் ஏன் பேசாமல் கொடுத்துவிட்டாள் என்று அவள் அம்மாவிற்கும் புரியவில்லை. 

“அக்கா, எனக்கு ஒரு ஐடியா தோணுது சொல்லவா..  இந்தப் போனை நீ வச்சிருந்தா என்னைக்கு இருந்தாலும் உனக்கு ஆபத்துதான்.  IMA நம்பரை வச்சு கண்டுபிடிக்க வாய்ப்பும் இருக்கு. நீ பயந்து, பயந்து கிடக்கணும்” அவள் பேசும்போதே குறுக்கிட்ட தனம், 

“பாப்பா நாங்க சிம்கார்டை எடுத்து மாத்திக்குவோம். அதனால அவிங்களால கண்டுபுடிக்க முடியாது” வெள்ளந்தியாகப் பேசியதாகத்தான் தெரிந்தது. 

“அதில்லைக்கா, இப்ப நான் சொன்னது போனில் இருக்கும் நம்பர். எப்படியும் அதை கண்டுபுடிக்கலாம். அதனால அவன் பணம் கொடுக்கிறேன்னு சொன்னதை பயன்படுத்திக்கிட்டு பிரச்சனை இல்லாம இருக்கலாமே..  “

“நல்ல யோசனைதான். ஆனால் இது சரி வருமா பாப்பா” என்றாள் யோசனையாக.

”அதெல்லாம் சரிவரும். முதல்ல உங்க வீட்டுக்காரரை வரச்சொல்லுங்க. நான் என்ன பண்றதுன்னு சொல்றேன்”

“என்னமோ கண்ணு நீ சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு. அதான் ......”

தனம் போல இல்லை அவள் கணவன். நல்ல விவரமான ஆளாக இருந்தான். சொல்ல வந்ததைத் தெளிவாகப் புரிந்து கொண்டான். ஆனாலும் ஒரு சந்தேகப் பார்வை வீசிக்கொண்டுதான் இருந்தான். ஒரு வழியாக அவனை ஒப்புக்கொள்ள வைத்தாள். அதாவது போனில் இருந்த அந்த குறிப்பிட்ட எண்ணிற்கு அழைப்பு விடுத்து, அவன் கேட்டபடி அந்த மொபைல் போனைக் கொண்டுவந்து கொடுத்தால் ரூ. 10,000 தனக்குக் கொடுக்க வேண்டும். என்பதுதான். திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தது. தனத்தின் கணவனுக்கு பணம் பிரச்சனை இல்லாமல் கிடைக்கவேண்டுமே என்ற அச்சம் முகத்தில் நன்றாகவேத் தெரிந்தது. எது எப்படியோ தைரியமாக போனும் செய்துவிட்டு, எதிர் முனையில் பேசுபவனின் ஆர்வமும், படபடப்பும் நல்ல முடிவையேக் தரும் என்ற நம்பிக்கைதர காத்திருக்கிறான் முகம் தெரியாத அந்த நபருக்காக....

நேரம் போய்க்கொண்டிருந்தது. என்ன காரணத்தினால் தாமதப்படுத்துகிறான் என்பது தெரியவில்லை. இந்நேரம் வந்திருக்க வேண்டுமே. ஒரு ஈ, காகம் கூட நுழையாத இடமாக இருப்பதால் ஒரு சிறு சலசலப்பும் இடியோசையாக எதிரொலித்தது. மெல்ல அடி எடுத்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு வந்து நின்றது ஒரு உருவம். ஒரு நொடி  திகைத்துப் பின்வாங்கியவன் அங்கு வந்து நின்றவனை ஊடுறுவினான். 

“ஏம்ப்பா நீயா போன் பண்ணினே... என்னோட போன் உங்கிட்டயா இருக்கு” என்றான். 

“ஆமாம் சார். நான் கேட்ட பணத்தைக் கொடுத்துப்போட்டு உங்க மொபைல் போனை வாங்கிட்டுப்போங்க சார்” என்றான் விவரமாக.

“நீ முதல்ல அந்த மொபைலக் காட்டு. அப்பதான் பணம் தருவேன்” 

“சார், இதோ இங்க பத்திரமா இருக்குப்பாருங்க.. நீங்க முதல்ல பணத்தை எடுங்க ” என்று பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுக்காட்டினான்.

வந்தவனும் போன் கிடைத்தால் போதும் என்ற அவசரத்தில் பணத்தைக் கையில் எடுக்கவும்,  இவன் பாக்கெட்டிலிருந்து போனை எடுக்கவும் சரியாக இருந்தது. இரண்டும் கைமாறுகிற நேரத்தில் இரும்புக்கரம் ஒன்று மொபைல் சொந்தக்காரன் என்று வந்தவனை கப்பென்று பிடித்தது. சில நிமிடங்களில் அனைத்தும் திட்டமிட்டபடி, சரியாக நடந்தது.

ரதி தனத்திடம் போனைப்பிடுங்கிப் பார்த்தபோது அதில் இரண்டு நாடகங்கள் அரங்கேறியிருந்ததைப் பார்த்தாள். சமீபத்தில் தன் குழந்தையைக் காணவில்லை என்ற ஒரு தாயின் விளம்பரமும், அக்குழந்தையின் படமும், ஒரு தனியறையில் அடைக்கப்பட்ட குழந்தையின் படமும் ஒருசேரக் கண்டவள் நடந்திருப்பதை விரைவாகக் கணித்துவிட்டதால், பணத்திற்காகப் பேராசைப்பிடித்த கும்பலொன்று அப்பாவி மனிதனின் போனைத் திருடி ஒரு குழந்தையைக் கடத்தும் நாச வேலைக்குப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. தெய்வாதீனமாக அக்குழந்தை  காப்பாற்றப்படுகிறாள்!!

1 comment:

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...