Tuesday, July 22, 2014

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன்


பவள சங்கரி




மூலவர்   : முத்து மாரியம்மன், துர்க்கை

தல விருட்சம்  : வேம்பு மரம்

தீர்த்தம்     : வெல்லகுளம்

பழமை   : 500 ஆண்டுகள்

புராணப் பெயர் : புன்னைவனம்

ஊர்                              : புன்னைநல்லூர்

மாவட்டம்                 : தஞ்சாவூர்

மாநிலம்                    : தமிழ்நாடு



தல சிறப்பு  : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக, புற்று வடிவில் அருள் மழை பொழிகிறார். 

தல வரலாறு  :  நம் இந்தியத் திருநாட்டில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதன் அதிசயத்தின் அடிப்படையில் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் இது புராணக்கதை என்ற குறுகிய வட்டத்தில் சென்றாலும், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள மன்னர்களால் எழுப்பப்பட்ட ஆலயங்கள் என்ற ஆதாரங்கள் ஓரளவிற்கேனும் அதன் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தலமும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்ற சிறப்பைப் பெறுகிறது.  




தண்ணளி வீசும் பசும் வயல்வெளிகளுக்கிடையே புன்னைநல்லூர் மாரியம்மன் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தை அடைந்தவுடன் முதலில் தென்படுவது, மராத்திய மன்னர்களின் தனிப்பட்ட பாணியில் அமைந்த  பரந்த மண்டபம். கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் இரண்டாம் பெரும் சுற்றுச்சுவர் போன்றவை சரபோஜி மன்னர் தஞ்சை மண்ணை ஆட்சி செய்த காலத்தில், கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவேறியுள்ளன. இந்த ஆலயத்தின் மூன்றாவது சுற்றுச்சுவர் மராட்டிய மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் அவர்களால் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 



                                                         சதாசிவ பிரமேந்திரர்

இத்தலம் அமைந்த வரலாறு சுவையானது. வெறும் புற்று வடிவமாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருந்த சமயம் அது. மகான் சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் கனவில் அம்மன் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்ப வேண்டி கட்டளை பிறப்பிக்கிறாள். இவரே அம்மனுக்கு மாரியன்னை வடிவமும் கொடுத்து ஸ்ரீசக்கரமும் உருவாக்கம் செய்தார். பின் ராஜஸ்ரீ சிவாஜி மகாராஜாவின் மூலம் ஆலயம் அற்புதமாக எழும்பியது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் முக்கியமான எண்பத்தி எட்டு திருக்கோவில்களில் புன்னை மாரியம்மன் கோவிலும் ஒன்று. கோவிலின் உட்பிரகாரத்தில்  விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் அழகே உருவாக அமைக்கப்பட்டுள்ளன. 



கீர்த்தி சோழன் என்னும் மன்னன் அம்மனின் அருளால் பெற்ற ஆண்மகவிற்கு தேவசோழன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். அவன் நன்முறையில் வளர்ந்து பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அப்போது தஞ்சையை ஆண்டுவந்த வெங்கோஜி மகாராஜா 1680 ம் ஆண்டில்  திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது  கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு  அம்மன்  அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் எழுந்தருளியுள்ள தன்னை தரிசிக்க வருமாறு கட்டளையிடவும், அரசனும் தம் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து அங்கிருந்து  புன்னைக் காட்டிற்குச் செல்ல  வழியமைத்து, அம்மனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு  சிறிய கூரையும் வேய்ந்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டதோடு அந்த கிராமத்தையே ஆலயத்திற்காக  வழங்கினார். மேலும் 1728 -1735 ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளஜா என்ற மன்னனின் புதல்வி வைசூரி நோயால் கண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாள். அச்சமயம்  அம்மனின் கீர்த்தியை அறிந்து  ஆழ்ந்து வழிபட்டதால் பூரண குணம் பெற்றாள். இதனால் அம்மனின் திருவருளை எண்ணி பெரிதும் வியந்த அம்மன்னன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார். காலப்போக்கில் அது  பெரும் கோவிலாக மாறியுள்ளது என்று வரலாறு கூறுகிறது. 


                                                                            சண்டி


ஆறடி உயரமுள்ள அம்மனின் முகத்திலும், சிரசிலும் கோடைக்காலத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தென்படுவதைக் காணலாம். இதன் காரணமாகவே ஆலயத்தின் அருகில் உள்ள, உள்தொட்டி என்று அழைக்கப்படும் தொட்டியிலும், வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படும்  பிரகாரத்தைச் சுற்றி உள்ள தொட்டிகளிலும் , அம்மை நோய்கண்டவர்கள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது. மனம் குளிர்ந்த அம்மன் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறாள். அதனால்  அம்மை நோய் முதல்,  தோல் வியாதி, கண்  நோய் , வயிற்று வலி,  உடம்பில் சொறி, சிரங்கு, கட்டிகள் ஏற்படுதல்,  போன்றவற்றால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இந்த அம்மனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் கட்டாயம் குணமடைவதாக  நம்பிக்கை வலுவாக இருக்கிறது. மேலும் வேலை வாய்ப்பு, பணியிடம் மாற்றம் ,  தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால்  அம்மன் அதனை நிறைவேற்றி கொடுக்கிறார் என்பதால் கோவிலில் எந்த நேரமும், குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அதிகமாக பக்தர்கள் வந்து வழிபடுவதைக் காண முடிகிறது. 



அம்மனுக்கு மாவிளக்குப் போடுதல் என்பதே இங்கு முக்கியமான பிரார்த்தனையாக உள்ளது. அம்மை நோய் கண்டு குணமடைந்தவர்கள்  அம்மனுக்கு மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். உடம்பில் கட்டிகளால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போட்டும், சொரி சிரங்கினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உப்பு வாங்கிப் போட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். கணவரின் நலனுக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலையும் நேர்த்திகடனாக செய்கின்றனர்.  அம்மனுக்கு நிலைமாலை சாத்துவதால் தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.  பால்குடம் எடுத்தல், பால்காவடி, அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும். 


 அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருவதால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிடேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது. விட்டிணு துர்க்கை  அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக்கும் அன்றாடம்  அபிசேகம் நடைபெறுகிறது.  5 ஆண்டிற்கு ஒரு முறை, ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறுகிறது. அந்த காலத்தில்  ஒரு மண்டலத்திற்கு அம்மனை  ஒரு வெண் திரையில் வரைந்து, அதில் ஆவாகனம் செய்து, அந்த அம்மனுக்கே அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெறுகிறது. அப்போது கருவறையில் உள்ள அம்மனுக்கு 48 நாட்களிலும் அன்றாடம் இரு வேளைகளிலும் சாம்பிராணி தைலம், புணுகு, போன்ற வாசனை பொருட்களால் அபிசேகம் நடைபெறுகிறது.

தைலாபிடேகம் செய்யும்  காலங்களில் அம்மன் அதிகமான உக்கிரத்துடன் இருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு  அம்மனுக்கு தயிர் பள்ளயம், இளநீர் போன்றவைகள் வைத்து நைவேத்தியம் நடைபெறுகிறது.  ஆகம விதிப்படி அம்மனுக்கு நான்கு காலங்களும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் ,  முத்துப்பல்லக்கு ஆவணி மாதம் , கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் , தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா போன்றவைகள்  வெகு சிறப்பாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மாசிமகத்தன்று 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று உற்சவ மூர்த்திக்கு அபிசேகம் செய்கிறார்கள். ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று மிகச் சிறப்பான பூச்சொரிதல்  நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அன்றாடம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.  

முகவரி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
புன்னைநல்லூர் - 613 501, 
தஞ்சாவூர் மாவட்டம்.  
   

நன்றி : வல்லமை

   

1 comment:

  1. புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பற்றிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...