Wednesday, August 24, 2016

ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!


பவள சங்கரி
.
சிறீவில்லிப்புத்தூர் – கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சிறீவில்லிப்புத்தூர் என்ற இப் புனிதத்தலத்தின் காரணப் பெயர், சிறீ என்ற இலக்குமி அவதாரமான ஆண்டாள், வில்லி என்ற மன்னன் ஆண்ட பாம்பு புற்றுகள் நிறைந்த புத்தூரில் வாழுகிறாள் என்பதாகும்.
aan5
ஆண்டாள், பெரியாழ்வாருடன் வடபத்ரசாயி சுயம்புவாக அவதரித்த தலம் என்பதால் இது முப்புரி ஊட்டிய தலம்.

இறைச்சிந்தையில் இயைந்து ஈடுபடுபவர் என்ற பொருளில் வைணவ அடியார்களுக்கு “ஆழ்வார்’ எனும் பதம் வழங்கி வருகிறது. சமணரின் ஆதிக்கத்தால் தமிழகத்தில் வடமொழி இலக்கியங்கள் வளர ஆரம்பித்த காலகட்டங்களில் தோன்றிய சமயப் புரட்சியின் வாயிலாக சைவ, வைணவப் பெரியார்கள் ஆலயங்கள் தோறும் சென்று பக்தி இலக்கியங்களைப் பரவச்செய்தனர். தமிழும் சமயமும் ஒருங்கே வளர்ந்த அத்தருணத்தில் ஆழ்வார்களின் இசைத்தமிழ் பாடல்கள் இசையோடு, ஆடல், பாடல், சிற்பம், ஓவியம் என பல்கலைகளையும் வளர்த்துவந்தன என்றால் அது மிகையல்ல. சங்க காலத்திற்குப் பின்னர் சமண, பௌத்த சமயங்களால் நலிவுற்றிருந்த திருமால் வழிபாடு மீண்டும் மறுமலர்ச்சி அடைந்தது.
தென்னகத்தில், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் என்று திருமால் பெருமை பாடிய பாவலர்களான ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களில் எட்டாவதாக அமைந்த கோதை நாச்சி என்ற ஆண்டாள், சிறீகிருட்டிணரைத் தம் பதியாக நினைந்து உள்ளுருகிப் பாடிய பாசுரங்கள் இன்றும் வைணவத் திருத்தலங்களில் பாடப்படுவதோடு மக்கள் மனதிலும் நீங்காதொரு இடம் பிடித்துள்ளன.
aandal.1நள வருடம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமையன்று அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். பெரியாழ்வார் இறையருளால் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், கண்டெடுத்து கோதை என்ற திருநாமத்துடன் வளர்த்து வந்தார். கோதை நாச்சியார் வாலைப்பருவம் எய்தியபோது திருமாலைத்தம் இதயத்தாமரையில் ஏந்தி, எண்ணமெல்லாம் அவன் வண்ணமேச்சூடி, அவனையே மணவாளனாகக் கொள்வேன் எனச்சூளுரைத்து, அவன் நினைவால் தீஞ்சுவைப் பாசுரங்கள் இயற்றினாள் . இப்பிரபஞ்சத்தையே ஆளும் ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளை திருவரங்கத்தில் ஆட்கொண்டார் திருமால். இந்த ஆண்டாள் அருளிய பாசுரங்களே “திருப்பாவை’ எனும் பேறு பெற்றுள்ளது. இதனை இயற்றிய ஆண்டாள் சூட்டிய பெயரோ “சங்கத் தமிழ் மாலை முப்பது’ என்பது. இதுமட்டுமன்றி “நாச்சியார் திருமொழி’ என்ற தெள்ளுத்தமிழ் திகட்டாதப் பாடல்களின் தொகுப்பையும் வழங்கியுள்ளாள். பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான பெண்ணான, வாலைக்குமரியாம் ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் ‘திருப்பாவை’ எனவும், ஏனைய 143 பாசுரங்கள் ‘நாச்சியார் திருமொழி’எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெண்மக்கள் எடுக்கும் பாவை நோன்பு என்பது காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்தல். திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டியும், நாட்டில் மழை வேண்டியும் முறையாக நோன்பு இருக்கும் முறைகளைப் பற்றிக் கூறுவன. ஆண்டாள் தன்னை ஆயர்பாடி கோபியர்களில் ஒருத்தியாகப் பாவித்து கண்ணனை வழிபடுகிறாள்.
“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத 
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்”
என ஆண்டாள் தம் திருமண வினைகள் முற்றும் முறையே கண்டதைப்போன்று பத்துப் பாடல்களில் அழகுற பாடியுள்ளார்.
ஆண்டாள் அரங்கனோடு தாம் மணம் முடிக்கும் நிகழ்வைத் தம் கனவில் கண்டதைப் பாடலாக்கி திகட்டாதத் தெள்ளமுதாக அள்ளித் தருகிறார்.

இத்தகைய பேறுபெற்ற குமரியவளுக்கு நெடிதுயர்ந்து நிற்கும் ஆலயமே சான்று! மதுரையிலிருந்து 74 கிலோமீட்டரும், விருதுநகர் மாவட்டத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இவ்வாலயம் சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலயம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இவ்வாலயம் திராவிட சிற்பக்கலையில் சிறந்து விளங்குவது நிதர்சனம். தமிழக அரசின் சின்னமாக விளங்கும் கோபுரம் அமைந்த பேறுபெற்ற ஆலயம் இது. இவ்வாலய கோபுரத்தின்மீது மற்ற ஆலயங்களைப் போன்று இல்லாமல் கட்டிடக்கலையை எடுத்துரைக்கும்வண்ணம் எந்த திருவுருவங்களும் செதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் சிறீவில்லிப்புத்தூர் 90வது தேசம். சுயம்பு மூர்த்தியான மூலவர் ரங்கமன்னார் , ஆண்டாள், கருடாழ்வர் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஒரே கருவறையில் திருக்காட்சியளிக்கும் ஒரே ஆலயமும் இதுதான். பள்ளிகொண்ட ரங்கநாதரின் அற்புதக் காட்சியை, கருவறையின் கீழ் அமைந்திருக்கும், மர வேலைப்பாடுகளால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அறையில் தரிசிக்க முடிகிறது. வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவதான சிறீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடு என்றும் இறுதித்தலமான சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தாய் வீடு என்பதாலும் ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாகச் சூடியவள்’ என்ற பெரும்பேறும் ஆண்டாளுக்கு உண்டு.
’சூடிக்கொடுத்தச் சுடர்கொடி’எனும் பெயர் பெற்ற கோதை நாச்சியார் வரலாறு சுவையானது. பெருமாள் வழிபாட்டிற்காக பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை அன்றாடம் கோதைத்தன் மேனியில் முதலில் சூடி மகிழ்வது வழமையாக இருந்தபோது, ஒரு முறை இக்காட்சியைக் கண்டு கடும் கோபம் கொண்டார் பெரியாழ்வார் . ஆனால் அன்று இரவில் அவர்தம் கனவில் தோன்றிய பெருமானார், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளிப்போந்தார். அன்று முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்ற திருநாமம் உண்டாயிற்று.
இத்தோடு விட்டாளில்லை கோதை நாச்சி. திருமண வயதடைந்த தருணத்தில் ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்று உறுதியுடன் நிற்கும் அன்பு மகளைக் கண்ட பெரியாழ்வார் மனம் நொந்தார். மீண்டும் அவர்தம் கனவில் தோன்றிய பெருமாள், ஆண்டாளை திருவரங்கத்திற்கு அழைத்து வரும்படி பணித்து மறைந்தார். அதன்படி தந்தையாருடன் சிறீரங்கம் வந்த கோதை, காவிரிக்கரையை அடைந்த கணம் மறைந்துபோனாள். உளம் கலங்கிய பெரியாழ்வாருக்கு, தமக்குத் திருவடிச் சேவை செய்யும் ஆண்டாளைக் காட்டியருளினார் பெருமாள். ஆனாலும், சிறீவில்லிப்புத்தூர் வந்துதான் தம் மகளை மணம் முடித்து அழைத்துச்செல்ல வேண்டுமென்று வேண்டினார் பெரியாழ்வார் . அதனையேற்று பெருமானார், ஒரு பங்குனி உத்திர நன்னாளில் சிறீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி கோதை நாச்சியை மணமுடித்துக் கொள்கிறார். ஆண்டவனையே ஆட்கொண்டதால் கோதைநாயகி ‘ஆண்டாள்’ எனச் சிறப்பிக்கப்பட்டாள்.
இதன் காரணமாகவே தற்போதும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.
வெள்ளி முளைக்கும் அதே நேரத்தில் வியாழன் உறங்குதலென்பது அபூர்வமானதோர் நிகழ்வு. 8ஆம் நூற்றாண்டில் இது போன்றதொரு நிகழ்வு நடந்துள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாளில் அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் மார்கழியில் ஒளிருமந்த பௌர்ணமி தினமே திருப்பாவை தோன்றிய காலமாக கணிக்கப்படுகிறது. ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுவது கி.பி.716 ஆம் ஆண்டு ஆடிப்பூர திருநாளில் . கி.பி.731இல் தம் பதினைந்தாம் வயதில் ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர். ஆண்டாளின் காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளை மு. ராகவையங்கார், சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பானதென்றும், வேண்டும் வரம் அருளுவதில் வள்ளல்கள் இவர்கள் என்பதும் ஐதீகம். அந்த வகையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆண்டாள் அன்னையும் பெண்களுக்கு மாங்கலய பாக்கியமும், குழந்தை வரமும், அருளும் ஈடற்ற அன்னையாகத் திகழ்பவளும் இவளே!
ஆண்டாள் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. வடபத்ரசாயி ஆலயத்தின் மேற்கில் பழமையான ஆண்டாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. துளசி மாடத்தின் கீழ்புறம் ஆண்டாளின் சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கில், ‘வென்று கிழியறுத்தான் வீதி’யில் பெரியாழ்வார் கோதை நாச்சியாருடன் வாழ்ந்த வீடு அமைந்துள்ளது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் இந்த வீடு திருக்கோயிலாக மாற்றப்பட்டது என்பதையும், ஆண்டாள் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகளையும் மாவலி பாணாதிராயர் கட்டியதாகவும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் இராச கோபுரம், 11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்டு, 196 அடி உயரத்தில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘திருக்கோபுரத்துக்கிணையம்பொன் மேருச்சிகரம்’ என மேருமலைக்கு இணையாக இக்கோபுரம் பற்றி கம்பர் போற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியாழ்வார் காலத்தில் ஒரு உரூபாயின் மதிப்பு 196 காசுகளாக இருந்ததால், அதை நினைவுகூரும் வகையில் அவர் 196 அடி உயரத்தில் கோபுரம் எழுப்பியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் அரிய கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. ஏகாதசி மண்டபம், கல்யாண மண்டபம் போன்ற இடங்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்புற அமைந்துள்ளன. ஒரே கல்லாலான பெரிய தூணின் இருபுறங்களிலும் வேணுகோபாலன், இராமர், விசுவகர்மா, நடன தாரகை, சூர்ப்பணகையைத் தாக்கும் இலக்குவன், சரசுவதி, அகோர வீரபத்திரர், சலந்தரர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளம் கவருவதாக அமைந்துள்ளன. இராச கோபுரத்தின் வடபுறம் அமைந்துள்ள, ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன.
இராச கோபுரத்தின் முன்புறம் உள்ள பந்தல் மண்டபத்தின் இடப் பக்கம் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்களும், அடுத்துள்ள அறையணி மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் காணப்படுகின்றன.
உட்பிரகாரத்தில் அமைந்துள்ள மாதவிப் பந்தல் தேக்குமர வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவருவதாக அமைந்துள்ளது. அடுத்துள்ள மணி மண்டபத்தின் தூண்களும் அழகிய சிற்பங்கள் தாங்கியுள்ளது. ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற தங்கமுலாம் பூசப்பெற்ற மண்டபம் ஒன்று மகா மண்டபத்தில் உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகளும் உள்ளன .
கொடிமரத்துக்கும் இராச கோபுரத்திற்கும் இடையில் பெரியாழ்வார் மற்றும் ராமானுசரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இத்திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் என்றுமே நீர் வற்றுவதும் இல்லை மற்றும் இதன் நதிமூலம் எங்குள்ளது என்பதையும் அறிய முடியவில்லை என்கின்றனர்.

ஆண்டாளும் சிறீரங்க மன்னாரும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ள அர்த்த மண்டபத்தில் , தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் ஆண்டாளின் இடக்கை கிளியை ஏந்தியவாறு நிற்கும் திருவுருவமும் அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். திருமணக் கோலத்தில் உள்ள திருவரங்கன், இராசகோபாலனாக செங்கோல் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால அரைக்கால் கால்சராய் மற்றும் சட்டை அணிவார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாளின் திருக்காட்சி.
13872774_1086108064811151_5891377523891863578_n
ஆண்டாள் சந்நதியின் நேர் எதிரில் வெண்கலத்தாலான தட்டொளி (முகம் பார்க்கும் கண்ணாடி) ஒன்றைக் காணமுடிகிறது. இதில்தான் ஆண்டாள் தம் அழகுமுகம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருப்பாவையில், ‘உக்கமும், தட்டொளியும்’ என்று குறிப்பிடுவதும் இதன் அடிப்படையிலேயே என்றும் கருத்தப்படுகிறது.
தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு தூணில் , தனது வாலை தலைக்குமேல் சுருட்டி வைத்துள்ள ஆஞ்சநேயர் சிற்பம் மிக வித்தியாசமான முறையில்,சிறப்பான சிற்பக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கியவாறு தமது வாலை உடல் முழுவதும் வட்டமாகச் சுற்றியவாறு அமைந்திருக்கும் சிற்பம் இது.
ஆண்டாள் சந்நதியின் கருவறையைச் சுற்றி 108 திவ்ய தேச மூர்த்திகளின் திருவுருவங்கள் அழகிய வண்ணங்களில் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இதன் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘இலக்குமி நாராயணர்’ திருவுருவச் சிலையும் அமைந்துள்ளது. சுதை சிற்பமாக அமைந்திருக்கும் இத்திருமேனியின் இடது மடியில் இலக்குமி தேவி அமர்ந்திருக்கிறாள். பல வர்ணங்களால் அழகு மிளிரும் இச்சிற்பம் ‘வர்ணகலாபேரர்’ என்றழைக்கப்படுகிறது.
கருவறையின் விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் சீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாகவும் தரிசிக்கலாம். பெருமாளின் தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க்கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது கைடபர் ஆகிய மூர்த்தங்களையும் காணமுடிகிறது. ஆண்டாளுக்குச் சாத்தப்படும் பூமாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச் சாத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பிரகாரத்தில் மகாலட்சுமியும், அனுமனும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள கலைமகள் சிற்பம் மிக நேர்த்தியாக சிற்பக் கலையின் சிறப்புக்கு உதாரணமாக அமைந்துள்ளது. வைகுந்த ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தரிசனம் அருளப்படுகிறது.
நந்தவனத்துக்கும் வடபெருங் கோயிலுக்கும் இடையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு சக்கரத்தாழ்வார் மூன்று கண்கள் மற்றும் 16 கைகளுடன் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார். இவரின் பின்புறம் யோகநரசிம்மர் காட்சியளிக்கிறார்.
பெரியாழ்வாரின் திருமேனி சிதிலம் அடைந்தபோது, திருமலை ஐயங்கார் தன் சகோதரர் வேங்கடம் ஐயங்காருடன் இணைந்து பெரியாழ்வாருக்குத் தனியே பெரிய சந்நிதி ஒன்றைக் கட்டியதோடு பெரியாழ்வாரின் திருமேனியில் தங்கக் கவசமும் சாற்றியுள்ளார் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. சிறீவராக அவதாரம் நிகழ்ந்த தலம் இது என்றே கருதப்படுகிறது. சிறீவில்லிப்புத்தூரின் பெருமைகள் அனைத்தையும் வராக புராணத்தின் ரகசிய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
ஆண்டாள் தோளில் உறவாடும் கிளி!

செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை மீனாட்சி அன்னைக்கு வலத்தோளில் கிளி இருப்பதுபோன்று காதலால் கனிந்துருகி அருளாட்சி புரியும் ஆண்டாள் அன்னைக்கு இடத் தோளில் கிளி. அன்றாடம் புதிதாகச் செய்யப்படும் கிளியிது. கிளியின் மூக்கு மாதுளம் பூவினாலும், கிளியின் உடல் மரவல்லி இலையினாலும், இறகுகள் நந்தியாவட்டை இலையும் பனை ஓலையினாலும், கிளியின் வால் பகுதி வெள்ளை அரளி செவ்வரளி மொட்டுகளாலும், கிளியின் கண்கள் காக்காய்ப் பொன் கொண்டும், இவையனைத்தையும் இணைத்துக் கட்டுவதற்கு வாழை நாருடனும் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறதாம்.
ஆண்டாளின் கிளி சொல்லும் கதை: கோதை நாச்சியார் சுகப்பிரம்மம் என்ற முனிவரை கிளி உருவத்தில் அரங்கநாதரிடம் தூது செல்ல அனுப்பி வந்தாராம். தன் காதல் மணவாளரிடம் தூது சென்ற கிளிக்கு வேண்டும் வரம் அருள எண்ணிய ஆண்டாள் அது குறித்து கேட்டபோது, தூது சென்ற கிளி உருவத்திலேயே ஆண்டாள் கையில் எந்நேரமும் இருக்கும் வரம் வேண்டிக்கேட்டுப் பெற்றார் என்றும், அதனாலேயே ஆண்டாளின் கையில் இக்கிளி எப்போதும் வீற்றிருப்பதாகவும் புராணம் கூறுகின்றது.
ஆண்டாள் கோயிலின் திருக்குளம், வாழைக்குளத் தெரு எனும் இடத்தில் சில தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது. இதன் மேற்குக் கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாசி மண்டபமும் அமைந்துள்ளன. ஆண்டாளின் மடியில் சிறீரங்க மன்னார் சயனித்திருக்கும் ‘சயன உற்சவம்’ திருக்காட்சி அருகில் உள்ள சிறீகிருட்டிணர் கோவிலிலும், சிறீகிருட்டிணரின் சயன உற்சவம் ஆண்டாள் ஆலயத்திலும் நடைபெறுகிறது.
ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர தினத்தன்று பிரம்மாண்டமான தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இத்தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரும் தேராகக் கருதப்படுகிறது. இத்தேரில், சுமார் 1000 தேவ, தேவியர், முனிவர்கள் ஆகியோரின் உருவங்களுடன் இராமாயண, மகாபாரதக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மீப்பெரும் தேரான இதை வடம் பிடித்து இழுக்க 3,000 க்கும் மேற்பட்ட ஆட்களாவது பங்கு பெறுகின்றனர். இந்த ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாள் சிறீஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி, மறு காலை மடக்கி அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் மடியில் தலை சாய்த்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தில் சிறீரங்கமன்னார் தரிசனம் காண கண்கோடி வேண்டும்.இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன.
சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் அரவணைப் பிரசாதம் புகழ் பெற்றது. பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் பெருமாள் ஆலயத்திற்கே உரித்தான சுவையான வடை, தேன்குழல் முறுக்கு, அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள் அருள் பெற்ற கவிச்சக்ரவர்த்தி கம்பர் பற்றிய ஒரு சுவையான வரலாறும் கூறப்படுகிறது. ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காணும்பொருட்டு சிறீவில்லிப்புத்தூருக்குக் கிளம்ப ஆயத்தமானார்.ஆனால் குறித்த நேரத்திற்குள் அவரால் திருமுக்குளத்திற்கு வந்து சேர முடியவில்லை. ‘நீராடல் வைபவத்தை ’ எப்படியும் தரிசிக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்திற்கு விரைந்து வந்து சேர்ந்த கம்பருக்குப் பேராச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகாத காரணத்தைக் கேட்டபோது, வழக்கமாக எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஆண்டாளுக்கு நடத்தப்படும் வைர மூக்குத்தி சேவைக்குரிய மூக்குத்தியைக் காணவில்லையென தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் கையிலிருந்து ஒரு மூக்குத்தியை எடுத்துக் காட்டி, அதுதான் அன்னையின் மூக்குத்தியாக இருக்குமோ என்று கேட்டிருக்கிறார். அனைவருக்கும் ஆச்சரியம். காரணம், ஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரின் கைகளில் எப்படிக் கிடைத்தது எனக் கேட்டபோது கம்பர், திருமுக்குளத்திலிருந்து கரை ஏறியபோது கண்ணில் மின்னியதைக் கண்டு எடுத்து வந்ததாகக் கூறினார். இந்த நீராடல் வைபவக் காட்சியை கம்பருக்கு அருள வேண்டியே ஆண்டாள் நடத்திய திருவிளையாடல் இது என்பது தெளிவானது.
தமிழர்தம் வரலாற்று முறைகளையும், இலக்கிய மரபுகளையும் புலப்படுத்தும் அகப்பொருள் கூறுகளைக்கொண்ட நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143ம் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
பக்தியும் காதலும் ஒரு சேரக் கொண்டிருந்த ஆண்டாளின் கனவு உரைக்கும் பாசுரங்கள் அவர்தம் தீஞ்சுவைத் தமிழுக்கும், பண்டையத் தமிழர் திருமண முறைக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை.
அரங்கநாதன் மீது கொண்ட ஆழ்ந்த பக்தி, காதலால் அவரைவிட்டு எப்போதும் நீங்காது இருக்க வேண்டுமென்ற தாபம்கொண்ட ஆண்டாள் ஆழிவெண்சங்கிடம் உரையாடுவது போன்றமைந்த பாடல்கள் திருமாலின் மீது அவர் கொண்ட மட்டற்றக் காதலை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் 
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண் சங்கே
ஓடும் மேகங்களைத் தூதுவிடுபவள், தம்முயிர் கண்ணனிடம் உள்ளதால் இவ்வுடல் வெறுங்கூடுதான் என்பதை, ‘உலங்குண்ட விளங்கனி போல்’ (உலங்கு – கொசு) என்னும் உவமை மூலம் விளக்குவது அருஞ்சுவைத்தேன் போன்று இனிமையானது. அதாவது விளங்கனியின் மேல் ஓடு இருக்க அதன் உட்பகுதியைக் கொசு அழித்துவிடுவதுபோல, தானும் கண்ணன் தந்த காதல் நோயால் நலிந்துள்ளதை உணர்வுப்பூர்வமாகத் தெளிவுபடுத்துவது சுவைகூட்டுவது. நாச்சியார் திருமொழியில், கண்ணனின் குறும்புகளனைத்தையும் பட்டியலிட்டு, இப்படிப்பட்ட ஒருவனை, அந்த மாயக்கண்ணனை எவரேனும் கண்டதுண்டோ என்று வினவியவளிடம் பிருந்தாவனத்தில் பரமனைக் கண்டதாகப் பதில் கூறும் பாங்கில் இறுதி பத்துப் பாசுரங்களும் அமைந்து வியப்பூட்டுவது சிறப்பு.
அருவி போல் இனிதாய் வழிந்தோடி இயல்பாய் பெருகி வரும் மொழியுடையவள் ஆண்டாள். கார்வண்ணன் மாயக்கண்ணனை மனதில் கொண்டவளின் தெள்ளுத் தமிழ் நடையழகில் மிளிர்ந்த கானங்கள் அனைத்தும் மார்கழி மாதமதைக் கொண்டாடச் செய்கின்றன என்றால் அது மிகையில்லை. இன்றும் இளங்கன்னியர் வண்ணக் கோலமிட்டு அதன் மத்தியில் இலையில் சாணம் வைத்து அதனுள் பூசணிப் பூக்களைச் செருகி அலங்கரித்து, மண் அகலில் தீபமேற்றி மார்கழி மாதம் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைக் காணமுடிகிறது.
ஆண்டாளின் மிக எளிமையான பாசுரங்களான திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் மிகுந்த பக்தியையும், சமூக அக்கறையையும், நன்நம்பிக்கையையும் ஏற்படுத்தவல்லது.
இப்பாசுரத்தை தினம் காலை அங்கம் சுத்தம்செய்து பக்திச் சிரத்தையுடன் படித்தால் கட்டாயம் மழை பொழியும் என்றும் சகல செல்வங்களும் நிரம்பி வழியும் என்றும் பன்னெடுங்காலமாக மக்களிடம் நம்பிக்கை உள்ளது. ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.
‘விண்ணீல மேலாப்பு 
விரித்தாற் போல் மேகங்காள்! 
தெண்ணீர் பாய் வேங்கடத்து 
என் திருமாலும் போந்தானே!
கண்ணீர்கள் முலைக் குவட்டில் 
துளிசோரச் சோர்வேனை!
பெண்ணீர் மையீடழிக்குமிது 
தமக்கோர் பெருமையே!.. (1)
மாமுத்த நிதி சொரியும்
மாமுகில்காள்! வேங்கடத்துச் 
சாமத்தின் நிறங் கொண்ட
தாடாளன் வார்த்தையென்னே!
காமத் தீயுள் புகுந்து
கதுவப் பட்டிடைக் கங்குல்!
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே!…(2)
ஒளி வண்ணம் வளை சிந்தை
உறக்கத் தோடிவையெல்லாம்!
எளிமையாலிட்டென்னை
ஈடழியப் போயினவால்!
குளிரருவி வேங்கடத்து
என் கோவிந்தன் குணம்பாடி!
அளியத்த மேகங்கள்
ஆவிகாத்திருப்பேனே!…(3)
மின்னாகத் தெழுகின்ற
மேகங்காள்! வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை
தங்கிய சீர்மார்வற்கு!
என்னாகத் திளங் கொங்கை
விரும்பித்தான் நாடோறும்!
பொன்னாகம்புல்குதற்கு
என் புரிவுடைமை செப்புமினே…(4)
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
மாமுகில்காள்! வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர் சிதரத்
திறன்டேரிப் பொழிவீர்காள்!
ஊன் கொண்ட வள்ளுகிரால்
இரணியனையுடலிடந்தான்!
தான்கொண்ட சரிவளைகள்
தருமாகில் சாற்றுமினே! …(5)
சலங்கொண்டு கிளர்ந்ததெழுந்த
தண்முகில்காள்! மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
நிரந்தேறிப் பொழிவீர்காள்!
உலகுண்ட விளங்கனிபோல்
உள்மெலியப் புகுந்து! என்னை 
நலங் கொண்ட நாரணர்க்கு
என் நடலை நோய் செப்புமினே..(6)
சங்கமா கடல் கடைந்தான்
தண் முகில்காள்! வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் 
அடிவீழ்ச்சி விண்ணப்பம்!
கொங்கை மேல் குங்குமத்தின்
குழம்பழியப்புகுந்து! ஒருநாள் 
தங்குமேல் என்னாவி
தங்குமென்றுரையீரே! …(7)
கார்காலத் தெழுகின்ற
கார் முகில்காள்! வேங்கடத்துப்
போர் காலத் தெழுந்தருளிப்
பொருதவனார் பேர் சொல்லி | 
நீர்காலத் தெருக்கில்
அம்பழவிலை போல் வீழ்வேனை |
வார்காலத் தொரு நாள்
தம் வாசகம் தந்தருளாரே! ..(8)
மதயானைப் போலெழுந்த
மாமுகில்காள்! வேங்கடத்தைப் 
பதியாக வாழ்வீர்காள்
பாம்பணையான் வார்த்தை யென்னே!
கதியென்றும் தானாவான்
கருதாது! ஓர் பெண் கொடியை
வதைசெய்தானென்னும் சொல்
வையகத்தார் மதியாரே! ..(9)
நாகத்தினணையானை
நன்னுதலாள் நயந்துரைசெய்!
மேகத்தை வேங்கடக் கோன்
விடுதூதில் விண்ணப்பம்!
போகத்தில் வழுவாத
புதுவையர் கோன் கோதை தமிழ்! 
ஆகத்து வைத்துரைப்பார்
அவரடி யாராகுவரே …(10)
———
நன்றி : சொற்கோயில் ஆன்மீக இதழ்.

No comments:

Post a Comment