Monday, May 18, 2026

பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 26

 63 நாயன்மார்களின் வரலாறு – 23. திருநீலநக்க நாயனார்

 

வேத உள்ளுறை ஆவன

  விரிபுனல் வேணி

நாதர் தம்மையும் அவர்

  அடியாரையும் நயந்து

பாதம் அர்ச்சனை புரிவதும்

  பணிவதும் என்றே

காதலால் அவை இரண்டுமே

  செய் கருத்து உடையார்

சோழமண்டலத்தில், காவிரி ஆறு பாய்ந்தோடி வளப்படுத்தும் தன்மை கொண்ட  சாத்தமங்கை எனும் ஊரில் திருநீலநக்க நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து கிழக்கே ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் நம்பியாரூரரால் தம் திருத்தொண்டத்தொகையில்,’ஒலி புனல் சூழ் சாத்தமங்கைஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.”
திருநீலநக்க நாயனாரை
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்” என்று போற்றுகின்றார். திருச்சாத்தமங்கை இன்று மக்கள் வழக்கில் சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்தில் அயன் என்னும் நான்முகன்வழிபட்டதால் அயவந்தி எனப்பட்டது. மறையவர்கள் மிகுதியாக வாழ்கின்ற இவ்வூரின் இறைவன் திருநாமம் மலர்க்கண் அம்மை என்றும் அயவந்தீசுவரர் என்றும் பார்வதி தேவி இருமலர்க்கண்ணம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். திருநீலநக்க நாயனார் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் என்பதால் மறையொழுக்கம் வழுவாமல் ஆகமவிதிப்படி எந்நேரமும் வேத பாராயணம் செய்வார். இத்திருக்கோயிலில் அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துகொண்டு, அங்கு வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையும் செய்து வந்தார். திருச்சாத்தமங்கையில் வாழும் மறையவர்கள் திருநீற்றினைப் போற்றி அதன் பெருமையை வளர்த்து மூன்று வகையான அக்னியை வளர்த்தனர்.

சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் உகந்த நாளான திருவாதிரை நன்னாளில்தான் ஞானப்பால் உண்டார் சம்பந்தப் பெருமான். அப்படிப்பட்ட ஒரு திருவாதிரை நன்னாளில், திருநீலநக்க நாயனார் அயவந்தீசுவரருக்குப் பூசை செய்வதற்காக பூசைக்குரிய பொருட்களுடன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வலம் வந்து வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் இறைவன் திருமேனியில் சிலந்தி ஒன்று விழுந்தது. அதனைக் கண்ட திருநீலநக்க நாயனாரின் மனைவியார் விரைந்து சென்று தாய்மையுணர்வுடன் வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். இதனைக் கண்ட திருநீலநக்க நாயனார் கோபமடைந்தார். வழிபாட்டில் எச்சில் படுவது பாவம் என்பதால் ஆகம நெறிக்கு புறம்பாக சிவபெருமானை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று கூறி, மாலைப்பொழுது ஆனதால் வீட்டிற்குத் திரும்பினார் அச்சங்கொண்டு நடுங்கிய நாயனாரின் மனைவியும் மன வேதனை மேலிட செய்வதறியாது கோயிலிலேயே தங்கி விட்டார். இருள் சூழ்ந்திருக்க எம்பெருமானை வணங்கியபடியே அந்தக் காரிருளில் நடுங்கியபடியே கோயிலுக்குள் தங்கியிருந்தார். நாயனார் வீட்டில் சென்று படுத்து உறங்கினார்.

நீலநக்க நாயனாரின் உறக்கத்தில் ஒரு கனவு தோன்றியது. அயவந்தித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அயவந்திநாதர் தோன்றினார். எம்பெருமான் நாயனாரிடம், அவருடைய மனைவியார் ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறி தம் திருமேனியைக் காட்டியருளினார். மனைவியின் எச்சில் பட்ட இடம் எம்பெருமானுக்கு அமுதநீராயிற்று எனவும் அதுபடாத இடமெல்லாம் கொப்பளமாக மாறியதையும் பெருமான் கனவில் காட்டியதை உணர்ந்து தவறு செய்துவிட்டோமே என்றும் வருந்தினார். கண் விழித்த திருநீலநக்க நாயனார் எம்பெருமானுடைய திருவருளை வியந்து ஆடிப்பாடி கூத்தாடி, கோயிலுக்குச் சென்று அயவந்தீசுவரரைத் தரிசனம் செய்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார் 

நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை

    நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி

யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்

    குமியாத விடநாத னுறுநோய் காட்டக்

காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்

    காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து

வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி

    விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்தவரான திருநீலநக்க நாயனாருக்கு அவர்மீது அதீத ஈடுபாடும் பக்தியோடும் நெருங்கிப் பழகினார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை வந்தபோது அவரை வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வரவேற்றார். அன்று இரவு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீலநக்க நாயனார் இல்லத்தில் தங்க முடிவெடுத்தவர், தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு திருநீலநக்க நாயனார் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய திருநீலநக்க நாயனாரின் பெருமையை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீசுவரரின் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


திருநீலநக்க நாயனார் அவ்வப்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இருக்கும் தலங்களுக்குச் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தினைக் கண்டு களிக்க மனைவியுடன் திருப்பெருமணநல்லூரை அடைந்தார். அத்திருமணத்தை, திருமண வேள்விச் சடங்கினை தாமே முன்னின்று நடத்தி வைத்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் சிவசோதியினுள் கலந்து இன்புற்றனர்.

திருநீலநக்கர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

திருவாசகத்தில்,

சொற்பதங்கடந்த அப்பன் தாளதா

மரைக ளேத்தித் தடமலர்

சூட்டமாட்டா ஆளலா தவரைக்கண்டால்

அம்மநாம் அஞ்சுமாறே

உயிர் பாச நீக்கம் பெற்று சிவப்பேறடைதல் உள்ளார்ந்த ஆன்மிகத் தகுதியை உண்டுபண்ணுதற்கும் பெருஞ்சிவப்பேற்றை அடைந்து பேரின்பமடையச் செய்வதுமே சிவபூசையின் சாராம்சமாகும்.  வேதத்தின் முதற்பொருளான அடியார்களைப் போற்றலும், எம்பெருமானை அர்ச்சிப்பதுமாகிய இரண்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் திருநீலநக்க நாயனார். அருள் நூல்களின் சாரமாக விளங்குவது மெய்ப்பொருளாக விளங்குவது திருநீறே ஆகும். உயிர்களைக் காப்பதும் திருநீறே ஆகும். சைவத்தில் சிவபூசையானது சுத்த நிலையிலுள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகும். திருமந்திரத்தில், யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை” எனவும் போற்றப்பட்டுள்ளது.

 தேவாரத்தில்,

அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரும்

அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே  

ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில்

உண்பதின்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீறணியா ராகில்

 அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

 பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப்

பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே

என்று போற்றப்படுதலும் குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள், பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை” என்ற அருளிப்பாட்டின் மூலம் சிவபூசை அனைவர்க்கும் உரித்தானதென்று விதித்துள்ளதும் அறியத்தக்கது.

 சிவனடியார் வழிபாடும் சிவபூசைக்குச் சமமான மகிமையுடைத்ததாகும். சிவபெருமானை பூசிப்பவர்களின் உள்ளத்தில் சிவபெருமானே தோன்றி அருள் அளிப்பதற்கொப்ப சிவனடியார் வழிபாட்டுக்கும், வழிபடுவோரிடத்தில் சிவம் தோன்றி விளங்குதலால் அறியலாம் என்பது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும்

அஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே

அவரவரைக் கண்டபோதில் உகந்தடிமைத்

திறம் நினைந்தங் குணர்வே மிக்கு

இவர்தேவர் அவர் தேவரென்று பேசி

இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே

பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக்காணலாமே

 எனவும், திருமந்திரத்தில் “மஞ்சன மாலை நிலாவியவானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுதாம் உபசாரமெட்டெட்டொடும் அஞ்சலியோடுங் கலந்தர்ச்சித்தார்களே” எனவும் வருவனவற்றாலறியப்படும்.

 “வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாமுள” என்கிறார் திருமூலர்.

தாம் பூசிக்கும் சிவலிங்கத்தின் திருமேனியில் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற தம் மனைவியார் எம்பெருமானை பச்சிளங் குழந்தையாகக் கருதி வாய் நீர்பட ஊதி உமிழ்ந்து விட்டமை மாபெரும் தவறு என்று நினைத்தவர் உடனடியாகத் தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றிவிட்டார்.

விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்
றெழுந்த ச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட வூதிமுன் றுமிப்பவர் போலப்
பொழிந்த வன்பினா லூதிமேற் றுமிந்தனர் போக.

என்ற சேக்கிழார் வாக்கினால் அறியலாம்.

“ஈசனறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களை” என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க நாயனாரது இறை அன்பையும் தம் மனைவியாரது தாய்மைப் பரிவுடனான அன்பையும் சீர்தூக்கி இருவரது ஆக்கத்துக்கும் ஏற்றவகையில் அருளிய சிவபெருமானின் கருணையை அறியச்செய்கிறது.

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் தங்க இடம் கொடுக்க வேண்டி ஞானசம்பந்தப் பெருமான் சுவாமிகள் இந்நாயனாரைக் கேட்டுக் கொண்டதும் சுவாமிகள் அவர்களுக்குத் தமது சிவபூசை மேடையிலேயே இடங்கொடுத்ததும், சைவசமயத்தில் சாதியொழிந்த இடம் இது என்ற பக்குவநிலையை எடுத்துரைப்பதையும் அறியலாம் . சிவபெருமான் மீது கொண்ட பற்றே அனைத்திலும் சிறந்தது என்ற சுத்த நிலையில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் மனைவியாரும் உண்மைச் சிவனடியார்களாகிவிட்ட நிலையில் பாணர் என்ற பெயர்க்குரிய அவர்களின் சாதி, குல நிலைகள் முற்றாக அற்றொழிந்தவாயின.

சீல மெய்த் திருத்

  தொண்டரோடு அமுது செய்தருளி

ஞாலம் உய்ந்திட நாயகியுடன்

  நம்பர் நண்ணும்

காலம் முற்பெற அழுதவர்

  அழைத்திடக் கடிது

நீல நக்கனார் வந்து அடி

  பணிந்து முன் நின்றார். 

 

நின்ற அன்பரை நீல

  கண்டப் பெரும் பாணர்க்கு

இன்று தங்க ஓர் இடம்

  கொடுத்து அருளுவீர் என்ன

நன்றும் இன்புற்று நடு

  மனை வேதியின் பாங்கர்ச்

சென்று மற்று அவர்க்கு

  இடம் கொடுத்தனர் திருமறையோர். 

 

ஆங்கு வேதியில் அறாத

  செந்தீ வலம் சுழிவுற்று

ஓங்கி முன்னையில் ஒரு

  படித்து அன்றியே ஒளிர

தாங்கு நூலவர் மகிழ்வுறச்

  சகோட யாழ்த் தலைவர்

பாங்கு பாணியாருடன் அருளால்

  பள்ளி கொண்டார்.

திருச்சிற்றம்பலம்

 

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 31

  63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (4) சண்பை வேந்தர் முன்பு சென்று பணிந்த மங்கையர்கரசியாரையும், குலச்சிறையாரையு...