காலை நேரத்தில் மட்டும் இன்னும் இரண்டு கைகள் சேர்த்து முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
சாந்தாம்மா வேலைக்கு வருவதற்குள் பரபரவென, காலை சிறுதானிய கஞ்சி, கருவேப்பிலைத் தொகையல், மதிய உணவிற்கு சாம்பார், காய், கீரை என அனைத்தையும் சமைத்து முடித்தாக வேண்டும். இதற்கிடையில் பால்காரர் வந்தால் பால் வாங்கவும், காய்காரம்மா வந்தால் வாங்குவதும், கணவர், “கங்கா அதெங்கே, இதெங்கே” என்று கேள்விக் கணைகள் தொடுத்தால் அதற்கு விடை சொல்லவும் வேண்டும். பால் காய்ச்சி காபி தயாராகணும். இதற்கு நான்கு கைகளே போதாதென்றாலும் இரண்டு கைகளுடன் வேகமாகச் செய்து பழகிக் கொண்டாகிவிட்டதற்கு என்னையே பாராட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ஆகா இந்த நேரத்தில் போன் வேறு அடித்துக் கொண்டிருக்கிறதே. யாராக இருக்கும்?
இந்த நேரத்தில் என் அன்பு மகள் இனியாதான் கூப்பிடுவாள். மகப்பேறியல் மருத்துவத்தில் உயர் கல்வியான எம்.டி. டி,ஜி.ஒ படித்துவிட்டு அரசு மருத்துவமனையில் ராஜஸ்தானில் பணிபுரிகிறாள். ஆனாலும் இன்று வெள்ளிக்கிழமை, அவளுக்கு போர்ட் மீட்டிங் இருக்குமே, மாலையில்தானே பேசுவாள். பால் பொங்கும் நிலையில் ரொம்ப நேரமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டேயிருந்தால் இப்படித்தான் அப்படியே அசங்காமல் இருக்கும், சற்று நகர்ந்தால் போதும் புசுபுசுவென்று பொங்கிவிடும். போன் அடித்து ஓய்ந்துவிட்டது. பாலை இறக்கிவிட்டுப் போய் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் அமைதியாக நின்று கொண்டேன்.
இனியாதான் கூப்பிட்டிருக்கிறாள். கார் ஓட்டும்போது கூப்பிட்டிருப்பாள்போல. எப்போதும் கண்மூடித்தனமாக வேகமாக ஓட்டுபவள் என்பதால் கார் ஓட்டும்போது போன் பேசக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறேன். ஆனாலும் ஏதாவது முக்கியமான விசயமாக இருக்குமோ? சரி போன் செய்து பார்க்கலாம் என்று டயல் செய்தேன். போன் முழுவதும் அடித்து ஓய்ந்துவிட்டது. மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருப்பாள். மீட்டிங் ஆரம்பித்திருக்கும். ஓய்வு நேரத்தில் அவளே கூப்பிடும் வரை காத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
வேலையெல்லாம் முடித்துவிட்டு ஓய்வாக வந்து உட்கார்ந்த மறுநொடி மகளின் நினைவுதான் வந்தது. கொஞ்ச நாட்களாக அவள் ஏதோவொரு குழப்பத்திலேயே இருக்கிறாள். அழகான பெண் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டோடு நல்ல ஆளும் அமைந்துவிட்ட பின்புதான் அவளை ராஜஸ்தானில் விட்டுவிட்டு மதுரைக்குத் திரும்பினேன். மருமகன், கதிரவன் இந்திய இராணுவத்தில் உயர் பதவியில் இருப்பவர். மரியாதைக்குரிய பணி, வீட்டில் பாதுகாப்பு, எல்லா வேலைக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பொக்கிசமாக வைத்துப் பார்த்துக்கொள்கிறார். ஆனால் மாப்பிள்ளை அடிக்கடி காம்ப் என்று சென்றுவிட்டால் திரும்புவதற்கு வாரக்கணக்காகவோ அல்லது பல நேரங்களில் மாதக்கணக்காகக் கூட ஆகலாம். மற்றபடி வேறு எந்தக் குறையும் இல்லை அவளுக்கு.
என்றாலும் சில நாட்களாக அவளுக்கு அந்தக் கனவு அடிக்கடி வந்து அவளைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. ஒருமாதம் முன்னால் ஒருநாள் காலையில் ஏழு மணிக்கே போனில் அழைத்தவள் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பதறிப்போய் விட்டேன் நான்.
“அம்மா, இன்று விடிகாலையில் அப்படியொரு கெட்ட கனவு கண்டேன்மா. விடியற்காலை கனவு பலிக்கும்னு நீதானே சொல்லுவே. அதான் ஒரே டென்சனா இருக்கு”
“அப்படி என்னம்மா கனவு அது. நீதான் அதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லுவியே. இப்ப என்னாச்சு”
“இல்லம்மா, இது கனவு மாதிரியே இல்லம்மா. எதோ நேரில் பார்த்த காட்சி போலவே தெளிவா இருந்துச்சி. விடியற்காலம் அப்பவே முழிச்சிக்கிட்டேன். ஒரு வேலையும் ஓடல. பயமா இருக்குமா”
“என்னடா இது. டாக்டருக்குப் படிச்ச பொண்ணு ஒரு கனவுக்கா இப்படி பயந்துடுவே. அப்படி என்னதான் கனவு அது?”
“அம்மா, வீட்டில் ஒரே கூட்டமா இருக்கு. ஹால்ல ஒரு பெரிய பெட்டி வந்து இறங்குது. எல்லோரும் கூச்சல் போடுறாங்க. நான் மட்டும் அழாமல் அப்படியே நிற்கிறேன். கதிரோட அலுவலகத்திலிருந்து நிறைய பேர் வந்திருக்காங்க. அந்தப் பெட்டியில் என்ன இருக்குன்னு பார்க்க முயற்சி செய்தேன். கடைசிவரை பார்க்கவே முடியல”
“அடடா, என்னம்மா இது. இப்ப இந்தியா – பாகிஸ்தான் போர் நடக்குதில்ல. அதையே நினைச்சுக்கிட்டு படுத்திருப்பே. மாப்பிள்ளையும் பிசியா இருக்கிறதாலே நீ எதையோ நினைத்து குழம்பிட்ட போல. அதெல்லாம் ஒன்னும் இருக்காதும்மா. நிம்மதியா இருடா” என்று சொல்லிவிட்டாலும் பெற்ற தாயான என் மனதிலும் மகளின் இந்தக் கனவு பாரமாக அழுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
இருப்பது ஒரே பெண், இராணுவ மாப்பிள்ளை வேண்டாம், அதுவும் ராஜஸ்தானில் என்றுதான் கூறிக்கொண்டிருந்தேன். அவ்வளவு தொலைவு சென்று மகளை அடிக்கடிப் பார்க்க முடியாதே என்ற வருத்தம். அப்பா போலவே தன் கணவனும் இராணுவத்தில் பணியாற்றுவதில் அவ்வளவு பெருமை இனியாவிற்கு. அம்மாவானாலும் என் பேச்சு எடுபடாமல் போய்விட்டது. மாப்பிள்ளையின் குணம் சொக்கத்தங்கம் என்று அப்பாவும், மகளும் சேர்ந்துகொண்டு ஒரே பிடிவாதமாக அதே மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
மாப்பிள்ளை கதிரவனின் சுறுசுறுப்பான, கம்பீரமான தோற்றம் அழகு தேவதையான என் மகளுக்குப் பொருத்தமாக இருப்பதால் எனக்கும் பிடித்துவிட்டது. மாப்பிள்ளையின் குடும்பத்தில் எல்லா ஆண்களும் பரம்பரையாக இராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள். மாப்பிள்ளையும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதாவது தனது 22 வயதிலேயே ‘பரம் வீர் சக்ரா’ விருது பெற்றிருந்தார். அவ்விருதைப் பெற்றவர்களில் மிகவும் இளையவர் இவர்தான். இந்தியா, பாகிஸ்தான் போரில் இவர் செயல்பட்ட விதத்தைப் போற்றும் வகையில்
இந்த விருது கதிரவனுக்கு வழங்கப்பட்டது. எனவே அப்படிப்பட்ட மாப்பிள்ளையை யார் வேண்டாம் என்று சொல்ல முடியும்?
திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் கதிரவன் எல்லைப் பாதுகாப்பில் இருந்தபோது, எதிரிகளுடன் ஏற்பட்ட மோதலால் பதுங்கு குழியில் இருந்தவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதில் துடிதுடித்துப் போய் விட்டாள். அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அவளுடன் தங்கியிருந்த என்னால் அவளை
சமாதானப்படுத்தவே முடியவில்லை. தந்தை உடனிருந்து தைரியம் சொன்னதால் அமைதியானாள். நல்ல வேளையாக ஒரு சில நாட்களிலேயே கதிரவன் திரும்பி வந்து வயிற்றில் பாலை வார்த்தார்.
***
ராஜஸ்தான் செல்வதற்கு விமானத்தில் அடுத்த நான்கு நாட்களில் டிக்கெட் போட்ட பின்புதான் மனம் ஆறுதலடைந்தது. அப்பாவும் மகளைப் பார்க்க உடன் வருவார் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் அவர் பணி ஓய்வு பெற்ற பின்பும் எப்போதும் ஏதோவொரு சமூகச் சேவையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் நிவாரணப் பணிகளில் ஒத்தாசையாக இருப்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறார். எப்போதும் சுறுசுறுப்பாக அவர் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவைப் பார்த்தால் இனியா மகிழ்ச்சியாக இருப்பாள் என்றுதான் கூப்பிட்டும் பார்த்துவிட்டேன். 10 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். இனியாவிடம் சொன்னேன். அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தாலும், அதில் ஒரு சலிப்பும் இருந்தது. மாப்பிள்ளை கேம்ப்பிலிருந்து திரும்புவதற்குப் பதினைந்து நாட்கள் ஆகும் என்றாள். அதற்குள் நான் சென்று அவளுடன் சில நாட்கள் இருந்தால் அவள் இயல்பு நிலைக்கு வந்துவிடலாம் என்று நம்பினேன்.
இதோ, இனியாவுக்கும் பேத்தி அனன்யாவுக்கும் பிடித்த பலகாரங்கள் மற்றும் சட்டை துணிமணிகள் தயார். என் கணவருக்கும் தொக்கு, ஊறுகாய் என்று போட்டு வைத்தாகிவிட்டது. மறுநாள் மகளையும், பேத்தியையும் காணப்போகும் மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதித்தது.
இந்த நேரம் பார்த்தா இப்படியொரு செய்தி வரவேண்டும்? என் அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் உடனே கிராமத்திற்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. தம்பியும், மனைவியுடன் மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றுவிட்டதால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததால் தவிர்க்க முடியவில்லை. மகளுக்குத் தகவல் சொல்லக்கூட நேரம் இல்லாமல் கணவனிடம் சொல்லி இனியாவிற்கு போன் செய்யச் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியதாகிவிட்டது. காரில் போகும் வழியெல்லாம் அம்மாவின் நினைவு ஒருபுறம் இருந்தாலும் மகளுக்கு மிகவும் ஏமாற்றமாகியிருக்குமோ என்றும் கவலையாக இருந்தது.
அடுத்த ஒரு வாரம் அம்மாவுடன் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டில் கொண்டுவந்து விட்டு நல்ல கேர்டேக்கர் கிடைக்கும்வரை உடன் தங்க வேண்டியதாகிவிட்டது. பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. இடையில் மகளிடம் ஒரு சில முறைகள் பேசியபோதும் அவளிடம் பழைய உற்சாகம் இல்லை.
நான் ராஜஸ்தான் கிளம்புவதற்கு விமான பயணச் சீட்டு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் மூன்று நாட்கள்தான். நேரில் பார்த்து ஆறுதலாகப் பேசி அவள் மனதில் உள்ளதை அறிந்துகொண்டால் பின் மெல்ல சமாதானம் செய்துவிடலாம். முடிந்தால் அவளை ஊருக்குச் கூட்டிவந்து ஒருமாதமாவது வைத்திருந்து அனுப்ப வேண்டும் என்று மனது கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.
காலை ஒன்பது மணிக்கு விமான நிலையம் செல்லவேண்டும். இரவெல்லாம் சரியான உறக்கமில்லை. விடியற்காலையில் என்னையறியாமல் கண்ணயர்ந்துவிட்டேன்.
அருகில் யாரோ தோளைத்தட்டி அம்மா .. அம்மா என்று அழைக்கிறார்கள்.
“அட இனியா செல்லம், நீயே இங்கே வந்திட்டியா. அம்மாவுக்காக காத்திருந்து விட்டு நீயே நேரில் வந்துவிட்டாயா கண்மணி. நல்ல வேளை. நம்ம வீட்டிற்கு வந்திட்ட இல்லையா. இனிமேல் பாரேன், எல்லாமே சரியாகிவிடும். குட்டிப் பாப்பா எங்கே காணோம். தூங்கிட்டாளா. என்ன ஆச்சு, சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு வந்துட்ட. சரி, சரி பரவாயில்லை. மாப்பிள்ளை வரும்வரை நீ இங்கேயேதான் இருக்கணும். சரியா” என்று படபடவென கொட்டித் தீர்த்தபோது, இனியா ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.
“என்னம்மா .. என்னம்மா .. என்னாச்சுடா தங்கம். ஏன் இப்படி …..” என்று சத்தமாக நான் படபடக்கவும் அருகில் இருந்த கணவர் திடுக்கிட்டு விழித்தார்.
“கங்கா என்னாச்சுமா? ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இப்படிப் புலம்பற. போய் மகளோட சந்தோசமா தானே இருக்கப் போற? அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு. கிளம்பு நேரத்தோட” என்றார்.
நான் அவர் கைகளை விலக்கினேன். “இல்லைங்க. இனியா இங்க வந்துட்டாளே.. இதோ என் பக்கத்தில் இருந்தாளே.. இதோ இப்பதான் என்னைத் தொட்டு அம்மா.. அம்மான்னு கூப்பிட்டாளே. எங்கே போனாள்? கண்ணம்மா விளையாடாதே . எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய். வெளியே வாடா கண்ணு” என்று கட்டிலை விட்டு இறங்கிப் பரபரவென வீடு முழுக்கத் தேட ஆரம்பித்தேன்.
ஆனால் அவர், “ஏய் என்ன பைத்தியமா உனக்கு. நான் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னமோ இனியா வந்தாள்னு உளறிக்கிட்டிருக்கே. போய்ப் பார். கதவு பூட்டியிருக்கு. அப்படின்னா அவ என்ன மாயாவியா, அப்படியே உள்ளே நுழைந்து வருவதற்கு” என்று சொல்லிச் சிரிக்க, எனக்கு மட்டும் ஏனோ சிரிப்பே வரவில்லை.
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வீட்டிற்குள் எங்கோதான் என் இனியாக் குட்டி இருக்கிறாள் என்றே தோன்றுகிறது…
மெல்ல இயல்பு நிலைக்கு நான் வர முயன்றபோது, போன் அடித்தது. அப்போது விடியற்காலை ஐந்து மணி. இந்த வேளையில் யாராக இருக்கும்? கடவுளே அம்மாவுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாதே என்ற படபடப்புடன் போனை எடுத்தேன்.
புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பு. ஒன்றும் புரியாமல் “ஹலோ, யாருங்க” என்றேன்.
போனில் வந்த செய்தி தலையில் இடியென இறங்கியது. “என்னது. என்னது, என்ன சொல்றீங்க.. நீங்க யாரு. ஏதோ தப்பான நம்பருக்கு கூப்பிட்டிருக்கீங்க. இல்லை .. இல்லை” என்றவாறு மயங்கிச் சரியப் போனேன். சட்டென்று கைபேசியைப் பிடுங்கிய என் கணவர், பொறுமையாகக் கேட்டுவிட்டு “ஐயோ இனியா, என் தங்கம்..” என்று அலற ஆரம்பித்துவிட்டார்.
இரவுப் பணி முடிந்து வீடு திரும்பும்போது இனியாவின் கார் மலைப்பகுதியில் ஒரு வளைவில் கட்டுப்பாடில்லாமல் உருண்டு விழுந்துவிட்டதாம். அந்த இடத்திலேயே அவள் உயிர் பிரிந்து விட்டதாம்.
என்னென்னவோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு, தன்னுடைய முடிவைத்தான் காட்சியாகக் கனவில் பார்த்திருக்கிறோம் என்று தெரியாமலே போயிருக்கிறது. விதியின் விளையாட்டை யாரால்தான் கணிக்க முடிகின்றது?
மாப்பிள்ளையின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. அவருடைய பெற்றோர் அவரைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். குழந்தையை அங்கு விட்டுவிட்டு வர மனம் இடங்கொடுக்கவில்லை. இதைப்பற்றி விவாதிக்கும் மன நிலையிலும் அவர்கள் இல்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு நாங்கள் கிளம்பத் தயாரானபோதுதான் சுயநினைவு வந்தவராக மாப்பிள்ளை ஓவென்று கதற ஆரம்பித்துவிட்டார். எத்தனையோ மரணங்களை நேரில் சந்தித்தவர். தனக்கென்று ஒரு இழப்பு வரும்போது அதெல்லாம் மறந்து ஒரு சாதாரண மனிதனைப்போல மாறிவிடுவதுதானே மனித இயல்பு. கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசத்தை இழந்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர இயலாமல் தவிப்பதைக் காணும்போது ஈரக்குலையெல்லாம் நடுங்கத்தான் செய்கிறது. ஆனாலும் வேறு என்னதான் செய்ய முடியும்?
சம்பந்தி வீட்டாரிடம் ஒருவழியாகச் சமாளித்து குழந்தையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம். அவர்களும் சில நாட்களுக்குப் பிறகு நேரில் வந்து மற்ற விசயங்களைப் பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். அடுத்து நடக்கப்போவதை இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்.
இன்று அந்த இரண்டு வயதுக் குழந்தை அனன்யாவைக் கையில் வைத்துக்கொண்டு இதயத்தில் பெரும் பாராங்கல்லைச் சுமந்தபடி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மகளை இழந்த துக்கத்தை எங்கள் பேத்தியான குட்டி இனியாதான் இனித் தீர்த்து வைக்கவேண்டும். விதி வலியது, என்றாலும் நம்பிக்கைகள்தானே நம்மைப் பிழைக்க வைத்திருக்கிறது!
***

No comments:
Post a Comment