Thursday, September 12, 2013

சிறுகை துளாவி... சிற்றுளி எடுத்து!



பவள சங்கரி


எங்கோ ஓரு மூலையில் ஒரு திரை சட்டென்று விலகுகிறது..  வெடித்துக்கொண்டு சிதறுகிறது சொற்களாக..  ஆசானின் அரிச்சுவடியை சிரமேற்கொண்டு சிறுகை துளாவி சிற்றுளி எடுத்து சிரத்தையாய் வடிவமைக்கும் முயற்சி..தவறானால் தண்டனிட்டு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்! 



என்றோ காயாத கான்கிரீட் தரையில் 
பதிந்து கிடந்த நாயின் அடியொற்றி
பற்றில்லாக் கால்களின் பாதையறியா பயணம்.

கந்தலாகிப்போன வறட்டு கௌரவம் 
கதைபல பேசி கட்டாந்தரையாக்கியதால்
நத்தையாய் சுருண்டு போனது உயிர்.

பூமியாய் பொறுமையும்
 சோதியாய் தனிமையும்
போதியாய் ஞானமும்
சாமியாய் வரமும் வந்தது

ஓடுகூட பாரமாகித்தான் போகிறது
கூடுவிட்டு கூடுபாய ஊர்ந்து தேய்க்கிறது
கடக்க வேண்டிய காததூரத்தையும்!




படத்திற்கு நன்றி:

பெருமதிப்பிற்குரிய கவிஞர் சுந்தர்ஜி அவர்களின் ‘அதனதன் இடம்’ என்ற கவிதையின் இன்ஸ்பிரேஷன் தான் இந்த என் கவிதை! அவரிடம் சம்மதம் பெற்று படத்தையும் சுட்டுவிட்டேன்! கவிஞர் சுந்தர்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த  நன்றி.

Tuesday, September 10, 2013

வினை தீர்க்கும் விநாயகன்!



பவள சங்கரி



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நில உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம். 

அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். காணும் ஒவ்வொரு பொருளும் இறை வடிவாகக் காட்சியளிப்பதே தமிழர்தம் அறநெறியாம். கீதையில் கண்ணன் அருளும் மொழியும் இதுதான். மலரிலும் மகேசனைக் கண்ட  தாயுமானவர் சுவாமிகள் அருளியதும், ‘பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி ` என்பதுதான். பார்க்கின்ற இடமெல்லாம் நிறைந்திருக்கிற பரிபூரண ஆனந்தம் ஆண்டவன் என்கிறார் அவர். அதாவது நீர், வான், நெருப்பு, காற்று, சந்திரன், சூரியன், மண், உயிர்கள் என எட்டுப் பொருட்களிலும் நிறைந்துள்ளவன் இறைவன் . உடலில் பேதமிருந்தாலும், இறைவன் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் . இந்த உயரிய தத்துவத்தின் மொத்த உருவமே விநாயகப் பெருமானின் திருவுருவமாகும். பூமியின் ஒரு உருவகம்தான் விநாயகர் உருவம்.. 
யானை முகமும், மனித உடலும் கொண்டு அனைத்து உயிரும் சமம் என்று சொல்லாமல் சொல்கிறானோ?

Thursday, September 5, 2013

நன்றி சொல்லும் நேரமிது!


பவள சங்கரி


என்னை ஈன்றெடுத்து, பெயர் சூட்டி நல்லபடியாக, ஒழுக்க நெறி தவறாமல் வாழ வழிகாட்டி என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஊட்டி வளர்த்து, நல்ல கணவரைத் தேர்ந்தெடுத்து எம் வாழ்க்கையை மேலும் செம்மையாக்கி, இன்று வரை அதிகாலையில் முதல் வாழ்த்தாக எனதருமைப் பெற்றோரின் வாழ்த்தைப் பெறுவதில் மனம் இமையமாய் பெருமை கொள்கிறது. என் தந்தையின் அழகு தமிழ் வாழ்த்துரை என்றும் எம் மனதில் ரீங்காரமிடும் ஒன்று. ஆண்டவன் அருளால் இன்று போல என்றும் இதே அமைதியுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன். 

                                                    எனதருமைப் பெற்றோர்


எங்க குடும்பம் ரொம்ப பெரிசு! வெளிநாடுவாழ் என் குழந்தைகள் உள்பட இன்னும் பாதி டிக்கெட் குறைகிறது. விரைவில் முழு படத்தையும் எடுத்துப் போடுகிறேன்.....


நாட்கள் நிமிடங்களாகக் கரைந்துகொண்டிருக்கின்றன. செப்டம்பர் 4 நேற்று பிறந்தநாள் வழக்கம்போல் வந்தது. நண்பர்களின் வாழ்த்து மழை வழக்கம் போல் உற்சாகமளிப்பதாக இருந்தது. என்ன பேறு பெற்றோம் என்று மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இதற்கு நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை. இந்த முறை எனக்காக நண்பர்கள் எழுதிய கவிதைகளைப் பத்திரமாக, பொக்கிசமாக சேமித்து வைக்க வேண்டுமல்லவா? இதோ :


முனைவர் அண்ணாகண்ணன் - தமிழ் எடிட்டர் - யாஹூ


அயராத உழைப்பு, அன்பினில் திளைப்பு,
முயற்சியுள் முனைப்பு, முன்னேற்றும் படைப்பு,
செயல்வீரச் சிரிப்பு, சிந்தனைத் தெறிப்பு,
பயனாகும் நினைப்பு, பவளாவின் சிறப்பு.
ஆசிரியர் பவளசங்கரி, நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.


அன்புத் தோழி அருமை எழுத்தாளர், கவிஞர் ஷைலஜா என்கிற மைதிலி

செப்டம்பர் நான்கினில் பிறந்த
செந்தமிழ்ச்செல்வியே!
எப்போதும்  புன்னகைகொண்ட
எழில் பவள சங்கரியே!
செல்விருந்தோம்பிவருவிருந்தேற்கும்
வல்லமை நாயகியே!
எளிமையும் அன்பும் இன்முக ஓம்பலும்
என்றும் கொண்ட என் உயிர்த்தோழியே!
அறிவும் ஆற்றலும் ஆழ்ந்த புலமையும்
பரிவுடன் பற்றும் பாங்குடன் பழக்கமும்
உடையவர் நட்பினில் உன்னதம்  வாழ்க்கை!
அறிவினை விற்கும் வறிஞருக்கிடையில்
அறிந்ததைக்கொடையாய் வழங்கிடும் வள்ளல்
பலரது படைப்புகள் பயன் பெற அளிக்கும்
பன்முக மங்கை பவளசங்கரி வாழி நீ!



அன்பு நண்பர், அருமைக் கவிஞர் திரு சத்தியமணி


அவளா  யிரம்      தருவா        ளெனத்       திறமா     யெடுத்து
இவளே  யிதன்   தலைமை  யெனும்      பதவி       கொடுத்து
துவளா    மலரி   திருமா         லவன்          கவிச்        சீரெடுத்து
பவளா     யென   அருளா        ய்த்த‌மிழ்     சிவமே   உமையே


ஆசிரியர்  தினத்தில் சங்கம் வளர்க்கும் வல்லமை  இணைய ஆசிரியர்க்கும், 
அவருடன் செயலாற்றும் துணை ஆசிரியர்களுக்கும் அன்பு கனிந்த வாழ்த்துகள்.
தங்கள் சுயநலமற்ற பணி  தொடர அன்னை மீனாளும் அப்பன் சொக்கனும் 
துணையாகட்டும்.


S.Sathiyamani,
Director (Technical)
NIC, DIT, M/o IT And Communcation,
New Delhi
9868126406

நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தையைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். 

அன்புடன்
பவள சங்கரி


Erode Tamilanban சீரத்தஅறிவும் செம்மாந்த தமிழ்த்தேர்ச்சியும்,சுடரும்சொல்லாற்றலும் வாய்க்கப்பெற்றதோடுபண்புநலமும் பெற்றுத்திகழும் திருமதிபவளசங்கரி தமிழ்த்தாயின் வாழ்த்துக்கு உரியவராதலால் நானும் வாழ்த்துகிறேன். Erode Tamilanban ஆய்வுக்கு உரிய படைப்பளித்த உங்களைவாழ்த்துகிறேன்.

Wednesday, September 4, 2013

பேராண்மை!


பேராண்மை!

"ஏண்ணா, கோவில் நடையைத் திறக்க நாழியாயிடுத்துன்னு பறந்துண்டு ஓடினேள்.... என்ன ஆச்சு, திரும்ப வந்துட்டேள்

என்னத்தச் சொல்ல.. வழக்கம் போலத்தான். அந்தப் பக்கத்தாத்துல புதுசா குடி வந்திருக்காளே அந்த தில்லிக்காரா.. அந்தப் பொண்ணு காலங்கார்த்தாலே வந்து நிக்கிறா.. நல்ல காரியமா போறச்சே இவோ மூஞ்சியில முழிச்சுட்டுப் போக சங்கடமா இருக்கு. கொஞ்சம் தூத்தம் கொண்டாடி. குடிச்சிப்பிட்டு கிளம்பறேன்

ஏண்ணா நம்மாத்தை விட்டு வெளியில் படியிறங்கறா வரையிலத்தான் சகுனம் எல்லாம் பார்க்க முடியும். தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிச்சப்பறம் யார், யாரோ வருவா.. போவா...  அதெல்லாம் சகுனத்தடையா நினைச்சா எப்படிண்ணா..

அப்படியில்லைடி.. புதுசா எதிர்த்தாத்துக்கு வந்திருக்கவா, அந்தப் பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்கு கரெக்டா எதிர்ல வந்துட்றா.. அவளைப் பார்த்துட்டு அப்படியே கிளம்ப மனசு ஒப்பலைடி நேக்கு. நல்ல காரியம்  பண்றதுக்கு கிளம்பும்போது இப்படி வெறுங்கழுத்தோடவும், பாழும் நெற்றியோடவும் இருப்பவளைப் பார்த்துட்டுக் கிளம்ப மனசு என்ன்மோ பண்றது.. அதான் வந்து, தண்ணி குடிச்சுப்பிட்டு, சித்த நாழி கழிச்சி புறப்படலாம்னு வந்தேன்

அந்தப் பொண்ணு நம்ம பக்கத்துல இருக்கிற பள்ளியில டீச்சரா வேலை மாத்தி வந்திருக்காண்ணா.. குடும்பத்தோட வந்திருக்காங்க. அவ்ளுக்கு ஒரு பையனும் இருக்கான். ஐந்து வயசு இருக்கும். அவனையும் கூட்டிண்டு ஏதேதோ கிளாஸ், அப்பறம் பள்ளிக்கூடம் போவா.. தினமும் நீங்களும் அதே நேரத்துல கிளம்பறேள். இனிமேல் அரை மணி முன்னாலேயே கிளம்புங்கோ. அவ்ளோதானே. அதுக்கு ஏன் சலிச்சுக்கறேள்

Friday, August 30, 2013

அமைதிக்கான விடியல்!


பவள சங்கரி




மழலை உலகினுள் கபடமற்ற 
மலராய் நுழைந்து மாசற்ற
அன்பைப் பனியாய் பொழிந்து
நேசமெனும் தணலில் காய்ந்து
கதகதப்பாய் கவலையின்றி
கற்கண்டாய் மொழிகள் பலப்பேசி
செவ்விதழ் மலர செழுங்கரும்பாய்
வெள்ளைப்பூக்களின் தேனிசை முழங்க
கவின்மிகு கற்பனைத்தேரில்
கலந்தே கவிபாடி கசிந்து மனமுறுகி
செங்கதிரோனின் பாசக்கரங்கள்
பற்றற்று பற்றிக்கொள்ள பாந்தமாய்
பசுமையாய் பரவசமாய் மலர்ந்தது
எம்காலைப்பொழுது!




படத்திற்கு நன்றி:

Thursday, August 29, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)


பவள சங்கரி

முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!
“அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”
அன்னை தெரசா
images 5முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!

Tuesday, August 27, 2013

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!


பவள சங்கரி




தேவையற்ற கசதியில் உழன்று திரிவது
தேர்ந்த ஞானம் கொண்டோரின் செயலல்ல

முக்காலத்தும் இல்லாததொன்றின் இருப்பு 
எக்காலத்தும் இல்லை என்பதே சத்தியம்

புலன்களுக்கு அகப்படாத ஒன்று இல்லாததொன்றாகுமா?
நித்தியமான, நிரந்தரமானதொன்று ஆன்மா மட்டும்தானே!

அழிவதெல்லாம் இரத்தமும் சதையும் உள்ள உடல்தானே
 அழியாத நித்தியமாய் வாழும் ஞாதிருவை அழிக்க எவருளர்?

சுயதருமமும் உன் சுபாவமும் உரைப்பதில் குறைவிருந்தாலும்
கடமையில் தவறாமல் இருப்பதே தர்மம் இல்லையா?

பிறிதொருவருடைய கடமையை ஏற்று செம்மையாய்ச் செயலாற்றினாலும்
தம் கடமையில் தவறாது அதனைக் கண்ணெனப் போற்றுதல் வேண்டுமே

அக்கினி கக்கும் புகை போல எச்செய்கையிலும் ஏதேனுமொரு
குறையும், பகையும் இருக்கத்தானே செய்கிறது!

சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமையைச் சலியாமல்
சுவையாகக் கடைபிடிப்பவனே  பாவமறியாதவன்!

படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://www.alaikal.com/news/wp-content/uploads/kuruna-geta.jpg&imgrefurl=http://www.alaikal.com/news/?p%3D59120&h=338&w=450&sz=99&tbnid=SCnPRmaj7hEO3M:&tbnh=90&tbnw=120&zoom=1&usg=__XOA-ztMbBMvfwSV75Xo1-aSI4iM=&docid=ZlUegG_G5yfxNM&sa=X&ei=GXUcUoqAPIX_rAenxoH4AQ&ved=0CEAQ9QEwAw&dur=129#imgdii=SCnPRmaj7hEO3M%3A%3BW5FPsmBJ6FOdOM%3BSCnPRmaj7hEO3M%3A

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...