பவள சங்கரி
வெற்றிவாகினியே வீரத்திருமகளே
ஊரெல்லாம் குதூகலமாய்
கூடிக் களித்திருக்கையில்
பாடிப்பரவசமாய் ஓருயிர்
பத்ரகாளியுந்தன் பதம்பணிந்தே
நித்தமுன்நாமம் கூவியழைத்து
வெதும்பியழ பாவியானென
பரிதவித்து உனைத்தொழ
சூழும்துயர் களையாமல்
எங்கனம் செல்வாயோநீயே
கங்கனம்கட்டாமலே காவலுக்கு
நில்லாமலே சொல்லெலாம்
நிறைந்தாலும் சுள்ளென்று
தீக்கனல் சொரிந்து தள்ளென்று
தவிக்கவிட்டு பகடையாயுருட்டி
பச்சிளம்குழவியாய் பாசவினைக்காய்
ஏங்கிஏங்கி மாய்ந்துமாய்ந்து
மருண்டுநிற்கும் பேதைதனை
தளிர்க்கரம் நீட்டி தாவியணைக்காமல்
தீக்கனல்மூட்டி சுட்டெரித்து
அச்சமூட்ட குற்றமென்னசெய்தேன்?
குவிந்த இதழ் முத்தமிட்டது
உன்திருநாமம் மட்டும்தானே
பணிந்தசிரம் தொட்டணைத்தது
உந்தன்பாதமலர்மட்டுமன்றோ
விரிந்தகூந்தலில் விருப்பமாயமர்ந்தது
இதயமலர் என்பதையறியாயோ
இரத்த நாளங்களனைத்தும் சுற்றியுனை
உருகிஉயிர் உன் காலடியில்
மருகிமயலாகி மடிந்துஒளிருதே
அறியாயோ நீயே! வரம் அருளாயோ தாயே!
ஆங்காரம் அடியோடு ஒடுங்கி
ஓங்காரமாய் நிற்கும் தேவியுந்தன்
பாதாரவிந்தம் சேரும்நாள் எந்நாளோ
வாழும் உயிர்களனைத்தும்
பாழும்பந்தத்தில் உழலாமல்
சித்தம்சீராய் சிந்தைதெளிவாய்
நம்பிக்கை ஒளியாய் நயமான
கற்பகத்தேரில் கனிவாய் பவனிவரும்
அற்புதக்காட்சி! கருத்தில் நிறைந்த
கற்கண்டாய் கனிரசமாய் மலர்ந்த காட்சி!
சொற்பதங் கடந்த மௌனமொழிக்காட்சி!
கருணைக்கடலே! காக்கும் அன்னையே!
காத்தருள் காளியே! சிம்மவாகினியே!
படத்திற்கு நன்றி: