Sunday, January 26, 2020

திருவள்ளுவர் விழா













வி.ஐ.டி. வேந்தர் கல்விக்கோ. விசுவநாதன் ஐயா  அவர்களின் தமிழியக்கம் சார்பில் தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு விழா எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (26/01/2020) ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சுகந்தி அவர்களின் ஒத்துழைப்புடன்,  உயர்திரு அரங்க.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் குறிப்பிட்ட காலத்தில் குறள் ஒப்புவிக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழியக்க இணைச் செயலாளர் முனைவர் ஜோதிமணி, பொருளாளர் முனைவர் செந்தாமரை ஆகியோருடன், திரு அரங்க சுப்பிரமணியமும் நடுவராக இருந்து, பங்கு பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தமிழியக்கத்தின் சார்பாக சான்றிதழ்களும், சிறப்பாக ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வரலாற்றாசிரியர் திரு கணியன் பாலன், ஈரோடு நவரசம் கல்லூரியின் துணை முதல்வரும், ஈரோடு மாவட்ட தமிழியக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு செல்வம், நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு இளங்கோ ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு குறள் சார்ந்த அரிய பலக் கருத்துகளை எடுத்துக்கூறினர். ஐயன் வள்ளுவருக்கு குறள் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Wednesday, January 22, 2020

தாமஸ் கார்லைல் தன்னம்பிக்கை






எந்த சக்தியும் படைப்பாற்றலின் குறுக்கே தடையாக நிற்கவியலாது என்பதற்கு சிறந்த உதாரணம் - தாமஸ் கார்லைல் என்ற பிரித்தானிய வரலாற்றாசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், தத்துவவாதி, கணிதவியலாளர். (திசம்பர், 04, 1795 - பிப்ரவரி, 05, 1881)
அவரது படைப்புகளில் மிக முக்கியமானது, பிரஞ்சுப் புரட்சி, 3 தொகுதிகள். The French Revolution, 3 vol. (1837), (1858-65)
இந்த பிரெஞ்சுப் புரட்சி நூலின் முதல் தொகுதியின் முழுமையான கையெழுத்துப் பிரதியை சிறப்பாக முடித்துவிட்ட மன நிறைவில் அதனை தனது நண்பரான தத்துவஞானி ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் கருத்தைப் பெறுவதற்காகக் கொடுத்துள்ளார். அவர் அதை வாசிக்க ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவருடைய பணிப்பெண், அதன் மகத்துவம் குறித்து அறியாதவர், தற்செயலாக அதை வெண்ணீர் காய்ச்சுவதற்காக எரித்துவிட்டார். இதனால் மனமுடைந்து விரக்தியில் சில நாட்கள் கழிந்த பின்னர், கார்லைல் ஒரு நாள் தன் இல்லத்தின் சாளரம் வழியாக கட்டிடம் கட்டும் தொழிலாளர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அந்த செங்கல் கட்டிடங்களை அடுக்கடுக்காக மீண்டும், மீண்டும் அடுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவரின் எண்ணத்தில் ஒரு புத்துணர்வு தோன்றியது. விரக்தியான மனநிலையிலிருந்து மீண்டு வந்தவர், முதல் பகுதியை மீண்டும் எழுதுவதற்கு முன்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை புதிதாக எழுதினார். அந்தக் காலத்தின் வரலாற்று படைப்புகளில், மிகச் சிறந்ததாகக் கருதப்பட்ட இவருடைய இந்த படைப்புக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
கார்லைலின் பாணி மிகவும் வித்தியாசமாகவும், சிறப்பியல்புடையதாகவும் இருந்தது. இயல்பான நாவலாசிரியரின் அல்லது வரலாற்றாசிரியரின் பாணியில் இல்லாமல், இரண்டிலிருந்தும் வேறுபட்ட கூறுகள் இருந்தபோதிலும். அவர் கண்களுக்கு முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி கருத்து தெரிவிப்பது போலவும், சில வரலாற்று கதாபாத்திரங்களை நேரடியாகவும் தெளிவாகவும் அணுகிய வகையில் எழுதினார். இதனாலேயே ஏனைய மற்ற வரலாற்றாசிரியர்களிடம் ஆழ்ந்த விரோதப் போக்கை வளர்த்துக் கொண்டார். தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் தனிப்பட்ட புறநிலைத்தன்மை அவருடைய எழுத்துக்களில் இல்லை என்பதே அவருடைய தனித்தன்மை மற்றும் சிறப்பு!

Sunday, January 19, 2020

தமிழ் மொழிவழிக் கல்வி



கர்நாடக மாநிலத்தில் கன்னடம் கட்டாயமாகப் பயில வேண்டும் என்பது போல மகாராட்டிரத்திற்கு மராட்டிய மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கன்னடம் தான் பயிற்று மொழி; 10ஆம் வகுப்பு வரை, கன்னடம் கட்டாய மொழிப் பாடம் என்ற, சட்ட திருத்தத்தை, கர்நாடகா அரசு நிறைவேற்றியுள்ளது.
'தொடக்கக் கல்விச் சட்டம் 1920' சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, தாய் மொழியான தமிழில் தான் கல்வி கற்றுத் தரவேண்டும் என்பதற்கான விதிகள், 1924இல் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், தாய்மொழி வழிக் கல்வி தான் வலியுறுத்தப்படுகிறது என்பது உறுதியாகிறது. தற்போதுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின், 29 (எம்) பிரிவும், தேசிய கல்விச் சட்டமும் தாய்மொழிக் கல்வியைத் தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பிலிருந்து, தாய்மொழி வழி கல்வியை போதிக்காமல் இருப்பது சட்ட விரோதமானது அல்லவா?
ஏன் நம் தமிழ் நாட்டில் மட்டும் நம் தமிழ் மொழி வழிக்கற்பித்தல் கட்டாயமாக்கப்படவில்லை மை லார்ட்?

வாழ்க்கை



மிதிவண்டி மிதித்து வயிறு வளர்த்த காலம்போய் மிதிவண்டி மிதித்து வயிறு குறைக்கும் காலத்தில் வாழ்கிறோம்!😂😂😂😂😂😂

Thursday, January 16, 2020

திருவள்ளுவர் விழா






இன்று திருவள்ளுவர் தினம். வி.ஐ.டி. வேந்தர். கல்விக்கோ. விசுவநாதன் அவர்களின் தமிழியக்கத்தின் சார்பில் மாவட்டம் தோறும் திருவள்ளுவர் விழா எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ். எஸ். எம். கல்லூரியில், உயர்திரு.வி.ஜி.பி. சந்தோஷம் ஐயா அவர்கள் நிறுவியுள்ள பிரம்மாண்டமான ஐயன் சிலைக்கு, ஊர்வலமாக எடுத்து வந்த மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, குமாரபாளையம் நகரசபைத் தலைவர் உயர்திரு தனசேகரன் அவர்கள் தலைமையில், நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு இளங்கோவன் அவர்களின் ஏற்பாட்டில், குமாரபாளையம் தமிழ் சங்கமும் இணைந்து நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்.

Wednesday, January 15, 2020

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!




மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

ஆண்டான் அடிமையெனும் பேதங்களில்லை
கொண்டான் கொடுத்தானெனும் சங்கடங்களில்லை
இனம் நிறம் மதமெனும் மயக்கங்களில்லை
மழலையர் பதின்மர் முதியோரெனும் பிரிவினைகளில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

மனம் குணம் குற்றம் குறையெனும் இழிவுகளில்லை
இகம் பரம் வானம் பூமியெனும் பாரபட்சங்களில்லை
செல்வந்தன் வறியோன் வேடதாரியெனும் கபடங்களில்லை
சொந்தம் சுற்றம் உறவு பகையெனும் விகல்பங்களில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

கதறல் சிரிப்பு கவலை களிப்பெனும் கருத்துக்களில்லை
 வளர்க வளமும் நலமும் பெருகவெனும் வாழ்த்துக்களில்லை
சிற்றின்பம் பேரின்பம் சிறுமை பெருமையெனும் சாத்திரங்களில்லை
இல்லறம் துறவறம் துணைநலம் மக்கட்செல்வமெனும் கோட்பாடுகளில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

வேதவித்தகன் மகோன்னதன் மகிழ்நன்னெனும் மாச்சரியங்களில்லை
சொந்தக்காரன் மாற்றான் தோட்டத்துக்காரனெனும் உறவுகளில்லை
கல்லாய் பேயாய் கணங்களாய் வல்லசுரராய் காணும் காட்சிகளில்லை
கனிரசமாய் கற்கண்டாய் கார்மேகமாய் கரடுமுரடாய் பகுத்துணர்வதில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

திருமண பந்தம் மரண பிம்பம் எனும் வேறுபாடுகளில்லை
கருணை வள்ளல் முரட்டு சிங்கமெனும் முட்டுக்கட்டைகளில்லை
கற்பகத்தரு கற்றாழை தாமரை தாழம்பூவெனும் தரவரிசைகளில்லை
கொண்டாடுவோர் குறைகாண்போர் குத்திக்கிழிப்போரெனும் பரிகாசங்களில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!




Saturday, January 4, 2020

The Man in the Mist - Agatha Christie




ஒரு காலத்தில், கல்லூரிக் காலங்களில் அகதா கிரிஸ்டி கதை என்றால் அப்படியொரு ஈர்ப்பு இருந்தது. கதாவின் நூற்றாண்டான இப்போது ஒரு சிறுகதையைப் படித்து மொழிபெயர்க்கலாம் என்றால் தற்காலக் கதைகளிலிருந்து இது எவ்வளவு வித்தியாசப்படுகிறது என்று தெரிகிறது ... துப்பறியும் சாம்பு மாதிரித் தெரிகிறது கொஞ்சம் .. 

மூடுபனி மனிதன் - The Man in the Mist

துப்பறிவாளர்கள், டாமியும், தப்பென்சும், சமீபத்தில் ஒரு முத்துமாலை களவாடப்பட்ட வழக்கில், தோல்வியைத் தழுவியிருந்தனர். அதுகூட பரவாயில்லை, உள்ளூர் காவல் அதிகாரி அந்தக் கயவனை கையும், களவுமாகப் பிடித்தும்விட்டதால் தங்களது துப்பறியும் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டதாக மிகுந்த வருத்தம் கொண்டவர்கள் அந்த வருத்தம் தீருவதற்காக  ஒரு விடுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பல்ஜர் என்று அழைக்கப்பட்ட  மெர்வின் எஸ்கோர்ட், என்ற தெரிந்த நபர் ஒருவரைச் சந்தித்தனர்.. அவன் கில்டா கிளென் என்கிற ஒரு பிரபலமான நடிகையிடம் தொடர்பு கொண்டிருந்தவன். கில்டா கிளென் நல்ல அழகியானாலும் சற்று மந்த புத்தி உடையவள் என்ற அவளைப்பற்றிய கிசுகிசுப்பும் உண்டு. செல்வி கில்டா, டாமியின் தந்தை பிரவுன்  மாறுவேடத்தில் இருப்பதைக் கண்டு இவர் ஏன் இப்படி மாறு வேடத்தில் இருக்க வேண்டும் என்று குழப்பமடைந்தாள். இதை அறிந்த டாமி தன் தகப்பனின் துப்பறியும் திறமையைப் பற்றி  ஆதாரத்துடன் அவளிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தான். காவல் நிலையத்திற்குச் செல்வதற்காக பல்ஜரிடம் வழி கேட்டுக்கொண்டிருந்தாள் அவள். அவன் மார்கன் அவென்யூ பக்கம் செல்ல வேண்டும் என்று வழிகாட்டிய போது, கில்டா கிளென் அதிர்ச்சியடைந்தாள். ஆம், கொலை செய்யப்பட்ட ஒரு காவல்துறை பணியாளர், கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த இடத்தில் ஆவியாக அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் வதந்தியை முழுதாக நம்பிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து வேடிக்கையாகச் சிரித்தான் அவன். அந்த கேலிச் சிரிப்பு சங்கடப்படுத்த,  மெல்ல பேச்சை மாற்றும்முகமாக,  சற்று முன் அந்த விடுதியின் வெளியில் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்த  லார்ட் லெக்கன்பரியைத்தான் தனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறாள். பல்ஜரும் அவசரமாகக் கிளம்பத் தயாரான அந்த நேரத்தில்தான் டாமி கிளென்னிடமிருந்து, தனக்கு உதவி வேண்டுமென்ற செய்தி வருகிறது. வெள்ளை மாளிகை, மார்கன் அவென்யூவில் மாலை 6.10 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றது மேலும் அந்த குறிப்பு.
அந்த நேரத்தில், அலங்கோலமாக உடை உடுத்திய ஒரு வித்தியாசமான இளைஞன் ஒருவன் அந்த விடுதியினுள் ஆவேசமாக நுழைந்தான். இதனால் மேற்கொண்டு இது தொடர்பான பேச்சு தடைபட்டது. வந்தவன் டாமி மற்றும் தப்பென்சு அருகில் அமர்ந்தபடி, தன் பெயர் ஜேம்ஸ் ரெய்லி என்றும், தான் ஒரு அமைதிவாதக் கவிஞர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். கில்டா மீது தனக்கு அன்பும் அக்கறையும் இருந்தாலும், அவளுக்கு லார்ட் லெகன்பரியுடன் திருமணம்  நிச்சயம் ஆன பிறகு அவள் பின் சென்று தொல்லை கொடுப்பதில்லை என்றான். ஆனாலும் அவனுக்கு இன்னும் கோபம் தீரவில்லை என்பது, அவன் வந்த அதே வேகத்தில் திரும்பிச் சென்றதில் தெரிந்தது.
டாமியும், தப்பென்சும் மார்கன் அவென்யூ நோக்கிச் சென்றனர். காற்றினூடே அடர்ந்த பனிமூட்டம் புகையாய் கிளம்பியிருந்தது. அதனுள்ளிருந்து, ஒரு உருவம் ..  காவல்காரர் தோற்றத்தில், வெள்ளை மாளிகையின் அருகிலிருந்து மெல்ல மெல்ல மேலே எழும்பி வருவதைப்போல் இருந்தது. அதைக் கண்டு தப்பென்சு திடுக்கிட்டாலும், ஒருவேளை பிரம்மையாக இருக்கும் என்று விரைவில் ஆசுவாசப்படுத்திக்கொண்டபோது, ரெய்லி அந்த வீட்டினுள் நுழைவதையும் அவர்கள் கண்டனர். காவல்காரர் அதை திருமதி ஹனிகாட் இன் இல்லம் என்று உறுதிபடுத்தியதோடு, சில நிமிடங்களுக்கு முன் செல்வி கிளென் போலவே யாரோ ஒருவர் அந்த வீட்டினுள் நுழைவதைப் பார்த்ததாகவும் கூறுகிறான். அந்த வீட்டினுள் நுழைய எத்தனித்தபோது பயங்கரமான ஒரு அலறல் சத்தம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அப்போது ரெய்லி கையில் சிகப்பு பெயிண்ட் போல எதையோ வாசற்கதவின் கம்பத்தில் பூசிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தான்.

அவர்கள் இருவரும் வீட்டின் உள்ளே சென்று எல்லெனைச் சந்திக்கிறார்கள். அந்தப் பணிப்பெண் ரெய்லியின் வருகைக்கும், திருமதி ஹனிகாட்டை சந்திப்பதிலும் விருப்பமின்றி கோபமாக இருக்கிறாள் என்பது தெரிகிறது. டாமியை ஒரு உண்மையான பாதிரியார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, கில்டா தன் தங்கை என்ற உண்மையையும் சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய பதினேழாவது வயதில் தன் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக மணந்து கொண்ட அவனை  இன்று லார்ட் லெகான்பர்ரியை மணப்பதற்காக விவாகரத்து செய்ய  விரும்புகிறாள். ஆனால் இந்தத் திருமணம் முடிந்து வெகு காலம் ஆனதில் திருமதி ஹனிகாட்டிற்கு அவன் பெயர் கூட நினைவில் இல்லை. இந்த நிலையில் அவளுடைய கணவன் அவளின் இந்த விருப்பத்திற்கு உடன்பட மறுக்கிறான். வெகு வேகமாக மாடிக்கு விரைந்த அதே வேகத்தில் திரும்பியது ரெய்லி இல்லை என்று உறுதியாகக் கூறுகிறாள் அவள். அங்கு நடந்தது என்னவாக இருக்கும் என்ற நடுக்கம் ஏற்பட்டது. டாமி மாடிப்படிக்கான வழியை காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டு போய் பார்த்தான். அங்கு மழுங்கிய ஏதோ ஒரு ஆயுதம் மூலம் கில்டாவின் தலையின் ஒரு புறம் அடித்து நசுக்கப்பட்ட நிலையில் உயிரற்ற அவளுடைய உடல்  கிடப்பதைக் கண்டனர் அவர்கள். தப்பென்சு போலீசை வெளியிலிருந்து இழுத்து வருகிறான். திருமதி ஹனிகாட்டை விசாரித்ததில், அவளுடைய தங்கை மணி ஆறடிக்க எட்டு நிமிடம் இருக்கும்போது, உள்ளே நுழைந்தாள் என்பதைத் தான் அந்த பெரிய கடியாரத்தைச் சரி செய்யும் வேளையில் சரியாக அவள் வந்ததால் உறுதி செய்ய முடிந்தது என்கிறாள். அந்த போலீசுக்காரர் அந்த நடிகை டாமியும், தப்பென்சும் மார்கன் அவென்யூவிற்கு வரும் சற்று முன்பு அவள்  உள்ளே சென்றதைப் பார்த்ததையும் உறுதி செய்தது இது. 

மறுநாள், ரெய்லி கைது செய்யப்பட்டு, டாமியும், தப்பென்சும் குற்றவாளியை அவனுடைய வழக்கறிஞர் மிஸ்டர் மார்வெல்லுடன் சந்தித்தனர். ரெய்லி, தான் அந்த அறையினுள் நுழைவதற்கு முன்பே அந்தப் பெண் இறந்திருந்தாள் என்று வலியுறுத்துகிறான். ஆனால் அந்த நேரத்தில் அந்த வீட்டினுள் வேறு எவரும் இல்லாதலால் எல்லென் அல்லது ஹனிகாட் இருவரில் யாராவது ஒருவரே அவளைக் கொன்றிருக்கக் கூடும் என்று தோன்றியது. டாமி உடனே, யாரும் இல்லாத வீட்டினுள் கில்டா நுழைவதைக் கண்டதை நினைவுகூர்கிறான் - அவள் குரலை மட்டுமே கேட்டனர் - ஆனால் அதற்கு முன்பு வீட்டிலிருந்த இரு பெண்களும் சமயலறையில் இருந்தனர், அவர்கள் வேறு எவரும் உள்ளே நுழைவதைக், காணவோ அல்லது சத்தம் கேட்கவோ இல்லை. கதவின் அசைவைக் கேட்டதால் மட்டுமே அது எதையும் நிரூபிக்க முடியாது.  சாதாரணமாக வீட்டை விட்டு யாரோ வெளியேறுவதாலும் ஏற்படும் சலசலப்பாகவும் இருக்கலாம் - வெளியில் இருந்த போலீசுக்காரன் அந்த வேலையை முடிக்கக்கூடிய மழுங்கிய ஒரு ஆயுதத்துடன் கேட்டின் வழியாக பனிமூட்டத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக அந்த போலீசுக்காரனே கில்டாவின் வெகு காலத்தின் முந்தைய கணவனாக இருந்திருக்கவும் வேண்டும்.



பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...