Tuesday, June 18, 2013
Thursday, June 13, 2013
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (16)
பவள சங்கரி
உள்ளார்ந்த ஒரு நெடும் பயணமே மிகவும் நீண்ட பயணம். ஒருவர் தம்முடைய இலக்கை அடைய முனையும் போது தம்முடைய உள்ளாற்றலை முழுமையாகப் பயன்படுத்தி அந்தத் தேடுதலைத் தொடங்கினால், அதன் முடிவில் தம்முடைய இருத்தலின் அடையாளத்தை அழுத்தமாக நிறுவமுடிகிறது அவரால்!
டாக் ஹாமர்ஸ்க் ஜோல்ட் - ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொது செயலாளர்
அமைதியான தீர்வு!
ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு அதற்கான தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருந்த நான், அன்புத் தோழி ஒருவரிடம் அது பற்றி கலந்தாலோசித்தேன். அவள் சொன்ன ஒரு யோசனை, கடுமையான சிக்கல் என்று எண்ணி பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த என் மனநிலையை நொடியில் மாற்றியமைத்துவிட்டது. அவள், ‘சங்கரி, உனக்கு இப்ப வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது மட்டும்தான் உன் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு சொல்லக்கூடியது. ஆம் உனக்கு தற்போது வேண்டுவதெல்லாம், அமைதியாக தீர்வு காணக்கூடிய மனோபாவம்!” என்றாள். அவள் சொன்ன வார்த்தைகள் உண்மையிலேயே என் இதயத்தைச் சுண்டிவிட்டது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னுடைய பல்வேறு பிரச்சனைகளையும், துணிவுடன் சமாளிக்க அந்த வார்த்தைகளே கைகொடுக்கிறது!
‘தீர்வு’ என்று சொல்லும்போது ஒன்றைப் பற்றிய திட்டவட்டமான அல்லது உள்ளார்வத்துடனான முடிவை எடுப்பதென்பதே. அதாவது எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியானதொரு தீர்வைக் காண்பது. உதாரணமாக, இரண்டு நீண்டகால நண்பர்கள், பங்குதாரர்களாகச் சேர்ந்து ஒரு நூற்பு ஆலையை வைத்தார்கள். நட்பில் இருந்த நெருக்கம், தொழில் என்று வந்த போது முற்றிலும் மாறுபட்டுவிட்டது. இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு சமயத்தில் சேர்ந்து தொழில் செய்வதே சிரமம் என்ற நிலை உருவானது. இருவரும் அமைதியாக தொழிலை பிரித்துக் கொண்டு விலகி விட்டார்கள். இலாபமோ, நட்டமோ, அவர்கள் எடுத்த தெளிவான முடிவினால் இருவரும் மன உளைச்சலிலிருந்து விடுபட்டதோடு, அடுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த முடிந்தது அவர்களால். மனச்சுமையிலிருந்து சுத்தமாக விடுபட்டு வெளியேறினர் அந்த இருவரும்.
தொழில்முறை முரண்பாடுகளோ அல்லது சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளோ, அது சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வு என்பது அதனை நாம் அணுகும் விதத்திலேயே அமைகிறது. நாம் கையாளும் ஒரு காரியத்தில் பாதுகாப்பற்றதொரு உணர்வைப் பெறும்போது, உடனடியாகத் தீர்வை நாடும் மனம், அதற்காக கடுமையாக போராடவும் ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் அச்சப்பட்டோ, கண்மூடித்தனமாகவோ, அல்லது கோழைத்தனமான முடிவையோக்கூட எடுக்க வேண்டிவந்துவிடும். குழப்பமான இது போன்ற மன நிலையில் எடுக்கும் முடிவுகள், நம்மை மீண்டும் தலை தூக்க முடியாத அளவிலான தீர்மானங்களைக் கூட எடுக்க வைத்துவிடும். எச்சரிக்கை தேவை!
நியாயமான அமைதியை இலக்காகக் கொண்டு செயல்படும்போது, நம்மைச் சரியான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய அறிவார்ந்த உறுதிப்பாட்டின் ஒரு மாபெரும் சக்தியை உருவாக்குகிறோம் . அப்போதைக்கு இதன் பின்விளைவுகளைப் பற்றி உடனே அறிய முடியாமல் போனாலும் கூட, அதைப்பற்றிய விழிப்புணர்வு தேவையான காலத்தில் கட்டாயம் வரும் என்ற திடமான நம்பிக்கை மலரும்! அந்த நம்பிக்கையே மனத்தெளிவையளிப்பதோடு, அடுத்து நடக்க வேண்டியதற்கும் அச்சாரம் போட்டுவிடும்.
அதே சமயம் தீர்வைப் பற்றிய சிந்தையே இல்லாததொரு சலனமற்ற அமைதி என்பது சூழ்நிலைக்கேற்ப பயனுள்ளதாகவோ அன்றி பயனற்றதாகவோக்கூட ஆகலாம். தன்னால் இயலாத நிலையில், ஓய்வு பெற்று உட்கார்ந்திருப்பவர்களுக்கு இது நல்ல முடிவாக இருக்கலாம். ஓய்வுக் காலங்களில் இப்படி நீண்ட அமைதிகாத்து அமருபவர்கள்கூட முன் காலத்திலேயே அதற்கான சரியான திட்டமிடல் மூலம், நல்லதொரு பாதையை அமைத்துக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், தானாக காரியங்கள் நடந்துவிடும் என்று மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் விதியின் வசம் முடிவை விட்டுவிட்டு அடுத்து என்ன நடக்குமோ என்ற ஏக்கமும், அச்சமும் வாட்டியெடுக்கும் குழப்பத்தில் உழல வேண்டி வரும். இது மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும். அதனால் ஏற்படக்கூடிய எதிர்வினைகளுக்கும் தாமே காரணமாகிவிடக்கூடும். அதாவது, ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்றில்லாமல் குழப்பமற்ற அமைதியான மனநிலையுடன் எடுக்கும் முடிவுகள் மூலம் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்ற திடமான நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதே சத்தியம்.
தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களும் இது போன்றதோரு சூழ்நிலையில், அமைதியான மனநிலையுடன் எடுக்கும் முடிவுகளே அவர்களை மீண்டும் அந்தச் சேற்றில் உழன்று, மென்மேலும் தவறு செய்யாத ஒரு உறுதியான மன நிலைக்கு ஆட்படுத்தி சரியான பாதையில் பயணிக்கும் நம்பிக்கையும் அளிக்கிறது.
எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியான மனநிலையுடன் எடுக்கும் தீர்வானது, நல்லதொரு பாதையின் பயணத்தின் ஆரம்பம். அடுத்து நடக்க வேண்டியவைகளை நம் அறிவு வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.
சிறகைச் சுமை என்று நினைத்தால் பறவைகள் பறக்க முடியுமா?
தொடருவோம்
நன்றி : வல்லமை
Monday, June 10, 2013
மோட்டூர்க்காரி!
பவள சங்கரி
முன்
குறிப்பு: கீழ்கண்ட இந்த கதை முற்றிலும்
என் கற்பனையே. எந்த குறிப்பிட்ட நபரையும்
கருத்தில் கொண்டு எழுதவில்லை என்பதை
உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மெல்ல
மொட்டவிழும் மலர்களின், நாசியை நிறைக்கும் சுகந்த மணம். மென்மையாக பூபாளம்
இசைக்கும் காதல் பறவைகளின் கீதம்.
மணி 5.15. அலார பென்குயினின் தலையில்
செல்லமாகத் தட்டிவிட்டு, எழுந்திருக்கலாமா என்று யோசிக்கும்போதே வேண்டாம் என்று
சொல்ல நொண்டிச் சாக்கைத் தேடுகிறது மனம். இன்று
ஒரு நாள் போகாமல் விட்டால்தான்
என்ன ஆகிவிடப் போகிறது? சரியான காரணமில்லாமல் ஒரு
நாள் சோம்பலில் விட்டால்கூட உடம்பு அந்த சுகத்தைப்
பழகிவிடுமோ..? இளங்காலைப் பொழுதின் ரம்மியமான சூழலில் சுகமான உலாவைக்காட்டிலுமா இந்தத்
தூக்கம் பெரிதாகிவிடும். அன்பு கணவர் அருகண்மையில்,
ஆனந்தமான நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். இரவு வெகுநேரம் , ஒரு
சிறிய பந்திற்காக,
22 வல்லுநர்கள் ஆடி, ஓடி விளையாடும்
அரிய காட்சியைக் காண தன் நித்திரையைக்கூடத் தியாகம் செய்த உத்தமர்.
சூதாட்டக் குழுவினரால் ஏற்கனவே யார் யார்
எவ்வளவு ரன் அடிக்க வேண்டும்,
எப்போது அவுட் ஆக வேண்டும்
என்று திட்டமிட்டு களமிறக்கியிருக்கும் ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைக்கூட போலியாக இரசித்து, கைதட்டி
ஆரவாரம் செய்துகொண்டு உட்கார்ந்திருக்கும் தாராள மனசுக்காரர். இப்பொழுதுதான்,
சாக்லேட் உண்ணும் மழலையைப் போல
புன்னகை தவழும் இதழ்களுடன், [ஏதாவது
கனவு கண்டு கொண்டிருப்பாரோ?] உறங்கிக்
கொண்டிருக்கிறார். இவரை எழுப்பி வேலைக்காகாது
என்று பூனையைப்போல மெதுவாக ஓசையின்றி வெளியே
சென்று, அடுத்த அறையின் ஓய்வறையில்
காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தயாராகிவிட்டேன். அடுத்த
45 நிமிட, வழமையான மூன்று கிலோமீட்டர்
நடைப்பயணம்.
Saturday, June 8, 2013
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)
பவள சங்கரி
தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும்
சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான்
உண்மையில் நீங்கள் அறிவுத்திறன்
உடையவராய் இருக்க முடியும்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி - வாழ்வியல் ஞானி!
ஒரு சிற்றரசன் ஒரு முறை ஒரு பேரரசனுடன் போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான். படை வீரர்களுக்கு பெரும் பதட்டமான சூழ்நிலை. காரணம், மிகச் சிறிய படையை உடைய தங்களால் அத்துனைப் பெரிய படையை எதிர்த்து நின்று போரிட முடியுமா என்ற அச்சமே. அரசனின் ஆணையையும் மீற முடியாதே. இந்த எண்ணமே அவர்களை துவண்டு போகச் செய்தது. இதனை உணர்ந்துகொண்ட அரசன் படை வீரர்களை அழைத்து, நம்மிடம் மன உறுதி இருந்தால் எத்தகைய பகைவனையும் சமாளிக்கலாம், நம் மனம் எத்துனை பலம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதைக்கொண்டுதான் எதிரியை வீழ்த்த முடியும், அதனால் எக்காரணம் கொண்டும் மனம் தளரக்கூடாது என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசியதோடு, தாங்கள் தங்கியிருந்த காளிமாதா கோவிலின் முன் தங்களுடைய ஆன்ம பலத்தையும் சோதித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டார். ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு, தலை விழுந்தால் நாம் போரில் எக்காரணம் கொண்டும் தலைகவிழ மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லி தேவி முன்னால் சங்கல்பம் செய்துகொண்டு அந்த நாணயத்தை சுண்டிவிட்டார். வீரர்கள் மிக ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரசன் சொன்னது போலவே தலை விழுந்ததாம். உடனே வீரர்களிடம் உற்சாகம் பொங்கியதோடு, காளிதேவியின் அருள் தங்களுக்குப் பூரணமாகக் கிட்டிவிட்டது, இனி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக நம்பிய படை வீரர்கள் போருக்குத் தயாராகிவிட்டனர். அதே உறுதியோடும், உற்சாகத்தோடும் போரிட்டவர்கள் இறுதியாக வெற்றி மாலையும் சூடி வந்தனர். எல்லாம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக நாடு திரும்பியவுடன், தளபதி அரசனிடம் மெல்ல வந்து, ‘அரசே, ஒரு வேளை நீங்கள் நாணயத்தை சுண்டிய பொழுது அதில் பூ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். வீரர்கள் போரிடவேத் தயங்கியிருப்பார்களே, காரியமே கெட்டிருக்குமே’ என்று ஆச்சரியமாகக் கேட்டார். அப்போது அரசன் புன் சிரிப்புடன் ஒன்றுமே பேசாமல் அந்த நாணயத்தை எடுத்துக் காட்டினார். அதில் இரண்டு பக்கமும் தலை மட்டுமே இருந்தது. அரசரின் சமயோசித புத்தியையும், வீரர்களுக்கு மன உறுதியை ஊக்குவிக்கும் விதமாக செயல் புரிந்ததற்கும் முதலில் அரசனின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மற்றும் சரியான வழிநடத்தலுமே என்பதை புரிந்து கொண்டார். இந்த தலைமைப் பண்பு மட்டுமே ஒரு காரியத்தை வெற்றிப்பாதையை நோக்கிச் செலுத்துகிறது.
Tuesday, June 4, 2013
என்ன ஆச்சு சுவாதிக்கு?
பவள சங்கரி
“சுவாதி..
சுவாதீம்மா.. என்னடா பன்றே. மணி
8.30 ஆகுது. ஸ்கூல் லீவுன்னா இவ்ளோ
நேரமா தூங்கறது. எழுந்திரிச்சி வாம்மா. அம்மா, ஆபீஸ்
போகணுமில்ல. நீ குளிச்சிட்டு சாப்பிட
வந்தாத்தானே உனக்கு டிபன் குடுத்துட்டு
நானும் நிம்மதியா கிளம்ப முடியும். வாடா
குட்டிம்மா, ப்ளீஸ்.. என் தங்கமில்லையா நீ..”
ஒன்றும்
பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்ட அன்பு மகளின்
போக்கு இந்த மூன்று நான்கு
நாட்களாக வித்தியாசமாகத்தான் இருக்கிறது. எதைக்கேட்டாலும்
மௌனம்தான் பதில். கலகலவென பேசித்தீர்க்கும்
மகளிடம் இந்த குணம் ரொம்ப
வித்தியாசமாகத்தான் இருக்கிறது. எல்லாம் வயசுக் கோளாறாக
இருக்குமோ. இந்த வருசம் பிளஸ்
டூ வேற. இப்படி இருந்தா
எப்படி படிக்கப்போறாளோ. இந்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்குப்
பிடித்த இடமான மாமல்லபுரம் ஃபிஷ்ஷெர்மேன்ஸ்
கோவ்விற்கு [Fisherman
cove] கூட்டிச்சென்று அவளிடம் மனம்விட்டு பேச
வேண்டும். என்ன பிரச்சனைன்னு கேட்கணும்.
இதுக்கும் மேல காத்துக்கிட்டிருக்க முடியாதலால்
பணிப்பெண்ணிடம் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வங்கியின் உயர் அதிகாரியாகிய தானே
நேரம் கழித்துச் செல்வது சரியாகாது என்பதால்
மாருதியை விரட்டிக்கொண்டு போகவேண்டியதாகியது.
Wednesday, May 29, 2013
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா ! (14)
பவள சங்கரி
“நான் உலகத்திற்கு எப்படி தோற்றமளிக்கிறேன் என்பது எனக்குத் தெரி்யாது; ஆனால் என்னைப் பொருத்தவரை, ஒரு சிறுவனாக கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன், கண்டறியப்படாத எத்தனையோ உண்மைகள் எம் முன் பெருங்கடலாக விரிந்து கிடக்கிறது. ஆனால் நானோ அவ்வப்போது ஒரு மென்மையான கூழாங்கல்லோ அல்லது சாதாரண சிப்பியைக் காட்டிலும் மேலும் அழகான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறேன் ”.
ஐசக் நியூட்டன்
உள்ளொளியை மதித்துப் போற்றுவோம்!
உயர, உயரப் போன எதுவும் ஓர் நாள் கீழே வந்தாக வேண்டும். கீழே வீழ்ந்ததும் ஓர் நாள் திரும்ப உயரும் காலமும் வரும். ஆனால் இது எப்போதும் எல்லோருக்கும் தானாக நடக்கக் கூடியது அல்ல. பொருளாதார அடிப்படையில் நல்ல நேரங்களும், கெட்ட நேரங்களும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளும் யதார்த்தம். இருப்பினும் அறிவார்ந்த மக்கள் உயர்வு நிலையைக் கொண்டாடுவதுபோல தாழ்வு நிலையையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. எந்த ஒரு தொழிலும் சில காலங்கள் உச்சாணிக் கொம்பிலும், சில காலங்கள் சந்தையில் தாழ்வு நிலையிலும் இருப்பதைக் காண்கிறோம். பொதுவாக உயர்வான நிலையில் இருக்கும்போது எவருக்கும் மனதில் தாழ்வு நிலை வரக்கூடும் என்ற சந்தேகமே எழுவதேயில்லை. பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்பவர்கள், அடிக்கடி இந்த அனுபவத்தைப் பெறக்கூடும். நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ஒவ்வொரு வெற்றியும், பல துன்பங்களின் மீது கட்டப்பட்டிருக்கலாமே தவிர அந்த துன்பங்களாலேயே ஆனது அல்ல என்பதே நிதர்சனம். ஒருவருக்கு பொருளாதாரப் பின்னடைவு என்பது எந்த நேரத்திலும் எழலாம். இது எத்துனைப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும் நம் வாழ்க்கை ஓட்டத்தைச் சீரமைக்கக்கூடிய ஒரு வரப்பிரசாதம் நம்முடனேயே இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை வரத்திற்கு ஏற்றவாரு நம் போக்குகளையும், சக்திகளையும், வெற்றிக்கான வாய்ப்புகளையும் அமைத்துக் கொள்வதால் பொருளாதாரம் ஏற்படுத்துகிற எந்த ஒரு சூழலையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெற்றுவிட முடியும். அப்படி ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் வல்லமை பெற்றதுதான் நம்முடைய உள்ளுணர்வு. இதன் அளவுகோளைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு இயந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
Monday, May 27, 2013
குரங்கு மனம்
பவள
சங்கரி
"அருந்ததி, அம்மா
சாப்பிட்டாங்களா? எங்கே ஆளையேக் காணோம்”
“இல்லப்பா, எங்கப்பா
நேரத்துக்குச் சாப்பிடறாங்க.. என்ன
சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. அழுதுகிட்டே
இருக்காங்க. இன்னும் உங்கப்பா செத்த
அதிர்ச்சியில இருந்து மீளவே இல்லை
பாவம். நானும் எவ்வளவோ சமாதானம்
சொல்லிப் பார்த்தேன். வேற என்ன செய்யிறதுன்னு
தெரியல. நீ போய் பாரு
ஜனா”.
கணவனும்,
மனைவியும் மாறி மாறி வருந்திக்
கொண்டிருந்தனர். அப்பாவை திடீரென்று
இப்படி ஒரு விபத்து அள்ளிச்
சென்றுவிடும் என்று கனவிலும் யாரும்
நினைக்கவில்லை. இந்த அறுபது வயதிலும்,
வங்கி மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு
பெற்ற பின்பும் கூட, தான் ஓய்ந்து
உட்காராமல், ஸெராக்ஸ் மிஷின் மற்றும் கம்ப்யூட்டர்
சென்ட்டரும் வைத்து நடத்திக்கொண்டிருந்தவர். அவருடைய சுறுசுறுப்பைப்
பார்த்து இளைஞர்களே
பொறாமை கொள்ளும் அளவிற்கு அவர்தம் நடவடிக்கை இருந்தது
அந்த ஆண்டவனுக்கேப் பொறுக்கவில்லை போலும். 15 வருடமாக தன்னோடு ஒட்டி
உறவாடிய அந்த இரு சக்கர
வாகனமே எமனாகிப் போனது. அப்படி ஒரு
கோரமான விபத்தில் பாவம் மனிதர் அந்த
இடத்திலேயே உயிரை விட்டுவிட்டார். மனைவியிடம்,
சீக்கிரம் வந்து டாக்டரிடம் கூட்டிச்
செல்வதாகச் சொல்லிச் சென்றவர், வெகு சீக்கிரமே போன
கையோடு, கருப்பு வண்டியில் வெள்ளைக்
கட்டுகளுடன் வந்து சேர்ந்த போது
மயங்கிச் சரிந்த மனைவி கௌரி
இன்னும் முழுமையாகத் தெளியவே இல்லை. மகன்
ஜனார்த்தனனும், மருமகளும்
ஒரு குழந்தையைப் போல கௌரி அம்மாவை
கவனித்துக் கொண்டதை அக்கம் பக்கத்தினர்
பாராட்டாத நாளில்லை. நேர, நேரத்திற்கு
கட்டாயப்படுத்தி உணவு உண்ணச் செய்து,
பெரும்பாலான நேரங்கள் கூடவே இருந்து ஆறுதலும்
சொல்லி தேற்றிக் கொண்டிருந்தனர். கௌரியும் மற்ற மாமியார்கள் போல
டிவியின் முன்னால் உட்கார்ந்து சீரியல் பார்த்துக்கொண்டு மருமகளை
அதிகாரம் செய்து வேலை வாங்கும்
வழக்கம் இல்லாதவள் ஆயிற்றே . வீட்டில் எல்லா வேலைகளையும் தானே
இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதோடு மருமகளையும், தன் மகளைப் போலவே,
கண்ணே, பொன்னே என்று தலையில்
தூக்கி வைத்துக்கொண்டல்லவா திரிந்தாள். இன்று அவளுக்கென்று ஒரு
பெருந்துயரம் வந்தபோது தூணாகத் தாங்கி நிற்பதில்
என்ன அதிசயம். திருமணம் ஆகி 12 வருடம் ஆகியும்
குழந்தை பாக்கியம் இல்லாத மருமகளை இன்றுவரை
ஒரு சொல்லேனும் சலிப்பாகப் பேசியவளில்லை. ஆண்டவன் செயல், நேரம்
காலம் வரும்போது எல்லாம் தானாக நடக்கும்
என்று பாடும் பழைய பஞ்சாங்கமாக
இருக்காமல், மருமகளை கோயில் குளங்களுக்குக்
கூட்டிச் செல்வதுடன், ஊரில் உள்ள நல்ல
குழந்தைப் பேறு மருத்துவமனைகள் அனைத்திற்கும்
கூட்டிச் செல்வாள். எந்த வகையிலும் மருமகள்
மனம் தளராமல் தைரியம் சொல்லி
பாதுகாப்பதில் தன் தாயை மிஞ்சியவள்
மாமியார் என்பதில் அப்படி ஒரு பெருமை
அருந்ததிக்கு. வயது ஏறிக்கொண்டே போவதால்
இனி காத்திருந்து பயனில்லையென சோதனைக் குழாய் குழந்தை
முயற்சிக்கலாம் என்று மகனையும், மருமகளையும்
கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்த இந்த நேரத்தில்தான்
இப்படி பேரிடி தாக்கி, உறைந்துபோய்
கிடக்கிறாள் கௌரி. தில்லியில் வேலை
பார்க்கும் மகளும், மருமகனும்கூட அதிக
நாள் லீவு போட்டு தங்க
முடியாத சூழ்நிலையில், அம்மாவை அழைத்துக் கொண்டு
போவதாகச் சொல்லியும், கணவன் வாழ்ந்த இடத்தைவிட்டு
ஒரு அடிகூட எங்கும் நகர
மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும்
தாயை அனுப்ப மகனும் தயாராக
இல்லை. நடந்ததை
ஏற்றுக் கொள்ளும் பக்குவமே இல்லாமல் துவண்டு போய் கிடக்கும்
மாமியாரைத் தேற்றுவதற்கு தன்னால் ஆன அனைத்தும்
செய்து கொண்டிருந்தாள் அருந்ததி. இந்த நேரத்தில்தான், அவளுக்கும்
குழந்தைபேறு உண்டாகி வாந்தி மயக்கம்
என வர ஆரம்பித்திருந்ததால் மெல்ல
தன்னைத் தேற்றிக் கொண்டு தன் கணவனே
குழந்தை உருவில் வரப்போவதாக நம்பிக்
கொண்டு மருமகளை
கவனிக்க ஆரம்பித்திருந்தாலும், முகத்தில் பழைய உற்சாகம் சுத்தமாக
இல்லை.
Subscribe to:
Posts (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43
63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர் கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...
-
விடியற்காலை....பிரம்ம முகூர்த்த வேளை. தியானத்திற்கான அருமையான நேரம். வஜ்ராசனத்தில் பயிற்சிகள் முடித்து, சுகாசனத்தில் ப்ரணாயாமம் ..............
-
சசி.....என்ன நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை.......? ம்ம்.....ஒண்ணும்மில்லீங்க....... ஏதோ யோசனையுடனேயே எழுந்து சென்றவள், மணக்க மணக...




