Saturday, July 24, 2010

என்.... குழந்தையா........இப்படி......?

சமீபத்தில் என் தோழி ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், காரணம் கேட்டபோது எனக்கும் அதிர்சியாக இருந்தது. குழந்தைகள் வளர்ப்பில் இன்று அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.அவர்களின் படிப்பை மட்டும் குறியாகக் கொண்டு, சில நேரங்களில் மற்ற பழக்கவழக்கங்களை கவனிக்காமல் விட்டுவிடும் போது அது பெரிய ஆபத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.

என் தோழிக்கும் அப்படித்தான் ஆனது. இந்தத் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் . ஏழு வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அதனால் இயல்பாகவே அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்கள்.ராஜா வீட்டு கன்றுக் குட்டி போல வளர்ந்து வந்தான். ஒரு பெரிய கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே நல்ல புத்திசாலியான அவன் படிப்பில் திடீரென தொய்வு ஏற்பட்டது. அவன் நடவடிக்கைகளிலும் சிறிது, சிறிதாக மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடந்தான், பெற்றோருக்கு சந்தேகம் வர, அவனை கவனித்துப் பார்த்ததில், அவனுக்குப் போதைப் பழக்கம் இருப்பது தெரியவர, பேரதிர்ச்சிக்குள்ளானார்கள், பெற்றோர். நாளுக்கு நாள் அவன் அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் போனது. ஒரு கட்டத்தில், சே, இபபடி ஒரு பிள்ளை நமக்குத் தேவைதான என்று வெம்பி , வேதனைபட வேண்டியதாகியது. இது யாருடைய தவறு. ஏன் இப்படி நடந்தது ?

சில பெற்றோர்கள், போதைப் பழக்கங்கள் பற்றி குழந்தைகளிடம் விவாதிப்பது தவறு என்று எண்ணுகிறார்கள். பள்ளிக்கூடங்களில், அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணிவிடுகிறார்கள். இது தவறு. குழந்தைகள் நலனில் பெற்ரோரை விட அதிக அக்கரை யார்தான் எடுத்துக் கொள்ள முடியும்? குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் முன் எந்தெந்த எந்தெந்த விதமாக குழந்தைகள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை முதலில் உணர வேண்டும். இன்று பலவிதமான போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பித்துவ்ட்டன. தாங்கள் வாழக்கூடியப் பகுதியில் எது போன்ற புழக்கம் அதிகமாக உள்ளது என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும்.பிறகு அது குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் போது திறமையான, மனதில் ஆழப்பதியும் படியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.தான் தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. பெரும்பாலான இளைஞர்கள் முதலில் முயற்சிப்பது புகைபிடிக்கும் பழக்கம்தான்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான விடலைப் பருவத்தினருக்கு பெரும்பாலும் பெற்றோர்களே முன்னோடிகளாக இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் நேஷனல் கவுன்சிலின் போதைத்தடுப்பு பற்றிய விவாதத்தின் போது அறுதியிட்டுக் கூறியுள்ளது.

பெரும்பாலான நேரங்களில் மதுப்பழக்கம் உடையவர், அதிக வேலை காரணமாக அசதி தெரியாமல் இருப்பதற்காகவும், மனச் சஞ்சலம் அதிகமானதால் குடிப்பதாகவும் கூறுகின்றனர். இதைக் கவனிக்கின்ற குழந்தைகள் மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

குழந்தை, அப்பா ஏன் குடிக்கிறார் என்று கேட்கும்போது, அப்பா பெரியவர், அந்த சுவை அவருக்குப் பிடித்திருக்கிறது , அதனால் ஏதோ சில நேரங்களில் குடிக்கிறார், என்றுதான் சொல்ல வேண்டும். அப்பாவிற்குத் தேவையாக இருப்பதால் குடிக்கிறார் என்ற வார்த்தையை கண்டிப்பாக நீக்கிவிட வேண்டும்.

குழந்தை, ஏன் நான் குடிக்கக் கூடாது என்று கேட்டால், நீ இன்னும் பெரியவனாகவில்லை, சிறுவயதில் குடிப்பது சட்டப்படி குற்றம், அதோடு உன் உடல் நிலையையும் இது பாதிக்கும், நீ வளர்ந்து பெரியவனாகும் போது நீயே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவாகக் கூற வேண்டும்.

போதை தடுப்பு முறைகள் பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதாவது 5 வயது முதலே அறிவுறுத்த ஆரம்பித்து விட வேண்டும். நெருப்பைத் தொட்டால் சுடும் என்று யதார்த்தமாக குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல போதை மருந்துகளின் அபாயங்களையும் புரிய வைத்துவிட வேண்டும். குழந்தைகள் வளர்ந்து பெரியவனாகும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்தால் சில நேரங்களில் அது பயனற்றுப் போகும். வருமுன் காப்பதுதானே சாலச் சிறந்தது?

குழந்தைகளை பள்ளிக் காலங்களிலிருந்தே அவர்கள் நடவடிக்கைகளில் பெற்றோர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பக் காலங்களில் கண்டுபிடித்து விட்டால் மாற்றுவதும் எளிதாகும். மேலை நாடுகள் போல, நம் நாடுகளில் இது போன்ற கணக்கெடுப்புகள் அதிகமாக இல்லை. நம் கலாச்சாரம் பண்பாடு கருதி இதைத் தவிர்த்து விடுகிறார்கள்.கலிபோர்னியாவில் சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி 25 முதல் 30 சதவிகித பெற்றோர் தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகளிடம் இதன் அபாயம் குறித்து பேசும் போது, அதை ஒரு தனி வகுப்புப் பாடம் போல நடத்தக் கூடாது. டிவி பார்க்கும் போதோ, அல்லது காரில் பயணம் செய்யும் போதோ, அறிவுரை கூறுவதுபோல் இல்லாமல் யதார்த்தமாகக் கூற வேண்டும். ஏதாவது சம்பவங்களையோ அல்லது உதாரணங்களையோக்கொண்டு அழுத்தமாக, அதே சமயம் யதார்த்தமாகச் சொல்ல வேண்டும். போதைப் பழக்கம், உடல் உறுப்புக்களை அப்படியே கறையான் போன்று அரித்து விடும், என்பதனையும் உணரச் செய்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஆரோக்கியமான மற்ற கேளிக்கைகள் பற்றி புரிய வைக்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை சிறுவயது முதலே ஊக்குவிக்க வேண்டும்.
பெரும்பாலும் சற்றே வளர்ந்த குழந்தைகள் ,நண்பர்கள் மூலமாகத் தான் இது போன்ற தீய பழக்கங்களை தொற்றிக் கொள்கின்றனர். நண்பர்கள் கட்டாயப்படுத்தினால் கூட மறுக்க வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிய வைக்க வேண்டும். பெற்றோருக்கு இது போன்ற தீயப் பழக்கங்கள் அறவே பிடிக்காது என்று உணர்ந்த குழந்தைகள், நண்பர்கள் மத்தியிலும் கண்டிப்பாக 'ஐய ..... இதெல்லாம் வேண்டாம், எனக்குப் பிடிக்காது, உனக்குக்கூட இது தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.

குழந்தைகளாக இருக்கும் பொழுதே இது போன்ற ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்து விட்டோமானால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, படிப்பு, தொழில் சம்பந்தமாக நம் கண் பார்வையில் இல்லாமல், வெளியூர்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்லும் நேரங்களில் கூட பெற்றோர்கள் கவலையில்லாமல், அவர்கள் முன்னேற்றத்திற்கு அணையும் போடாமல், ஊக்குவிக்கும் வண்ணம் செயல்படலாம்.

3 comments:

  1. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....
    வரும்தலைமுறை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை

    ReplyDelete
  2. பொதுவாக மாநகராட்சிப் பள்ளிகளில் கீழ்த்தட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பதால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்ற மாயையில் அதைப் புறந்தள்ளியே தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுவது தொடங்கியது. இப்போது பணம் மட்டுமே ப்ரதானம் என்ற நிலையில் தனியார் பள்ளிகளில்தான் இத்தகைய ஆபத்துகள் காத்திருக்கின்றன. நல்ல பள்ளியில் சேர்த்துவிடுவது மட்டுமே கடமை என்றிருப்பது ஆபத்து. நல்ல இடுகை.

    ReplyDelete
  3. முற்றிலும் உண்மை.

    ReplyDelete