Tuesday, July 20, 2010

தப்புக் கணக்கு

ஏன்னா, யாரோ பெல் அடிக்கறாளே, வாசக்கதவை திறக்கப்படாதோ?
நான் பேப்பர் படிச்சுண்டிருக்கேனோல்லியோ. நீயே போய் தொறயேன்.
நான் கைக்காரியமா இருக்கேன்னா. நீங்களே செத்த தொறங்கோளேன்.
ஒரு அரை பக்கமானும் சேந்தா மாதிரி படிக்க விட மாட்டியே, முணுமுணுத்துக் கொண்டே போய் கதவைத் திறந்தார் வெங்கடேசன்.

அட வாம்மா, பத்மா. தனியாவா வந்தே? உன் ஆத்துக்காரர் வரலியா?
இல்லப்பா, அவர் வேலையா வெளிய போயிருக்கார். நான் ஒரு முக்கியமான விசயமா வந்தேன்.

வாடி, பத்து, இன்னைக்கு காலையிலிருந்து உன்னைத்தான் நினைச்சுண்டிருந்தேன். பருப்பு உசிலி பண்ணினேன், உனக்குப் பிடிக்குமோல்லியோ, அதான்!

என்னம்மா, என்னமோ முக்கியமான விசயமா வந்தேன்னியே, என்று அவளையோசனையுடன் பார்த்தார், வெங்கடேசன். ஆமாம்ப்பா, இன்னைக்கு நம்ம வைசாலியை பொண்ணு பாக்க மாப்பிள்ளை ஆத்துக்காரா, பெங்களுருலருந்து வரா. அதான் உங்க இரண்டு பேரையும் கூட்டிண்டு போலாமேன்னு வந்தேன்., என்றாள்.

அம்மா ஏற இறங்க தன்னைப் பார்த்து ஏதோ முனுமுனுப்பதைப் பார்த்து,
என்னம்மா, உன் பேத்தியை பார்க்க மாப்பிள்ளை ஆத்துக்காரா வரான்னு சொல்றேன், உன் முகத்துலே சந்தோசத்தயே காணோமே, ஏம்மா என்றாள், சலிப்பாக.

ஆமாண்டி, மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்தா, உன் பொண்ணு உடனே குளுகுளுன்னு ஒத்துண்டுதான் மறு வேலை பார்க்கப் போறா? ஏதோ நாலு எழுத்து படிச்சு, வெள்ளைத் தோலோடவும், சிம்ரனாட்டம் ஒடிசலான உடம்போட, கண்ணுக்கு லட்சணமா இருக்கறதால பெரிய இடத்தில இருந்தெல்லாம் மாப்பிள்ளை வந்து கேட்டா, இவ என்னடான்னா, ஏதாவது காரணம் சொல்லி எல்லாத்தையும் தட்டி கழிச்சுண்டிருக்கா. ஊர்ல இல்லாத அதிசயமான்னா இருக்கு இவோ பண்றது.அங்கங்க, மாப்பிள்ளை ஆத்துக்காராதான் பிகு பண்ணிக்குவா, இங்க என்னடான்னா உல்டாவால்ல இருக்கு. என்னடா, அப்பா பைபாஸ் ஹார்ட் சர்ஜரி பண்ணிண்டிருக்காரே, அவரை சும்மா அலைய விடப்படாது, நல்ல இடமா வரும்போது ஒத்துக்கணும்கற எண்ணம் கூட இந்தப் பொண்ணுக்கு இல்லையே. அவ மனசுலே என்ன தான் வெச்சுண்டிருக்கா? இன்னும் எப்பேர்ப்பட்ட இடம் வந்தா இவ ஒத்துக்குவாளாம்? இந்த அழகும், இளமையும், ரொம்ப நாளைக்கெல்லாம் நீடிச்சு இருக்காது. பன்னிக்குட்டிக் கூடத்தான் பருவத்திலே அழகாத்தான் இருக்கும். இதெல்லாம் உன் பொண்ணுக்கிட்ட எடுத்துச் சொல்ல மாட்டியா நீ?அம்மா நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். ஏனோ அவ பெரிய இடத்து படிச்ச மாப்பிள்ளையெல்லாம் கூட தட்டிக் கழிக்கறா.இந்த முறையாவது ஒத்துக்குவான்னுதான் ஆண்டவனை பிரார்த்தனை பண்ணிண்டிருக்கேன். சரி நான் கிளம்பறேன்மா.சொஜ்ஜி, பஜ்ஜி எல்லாம் இனிமே போய்த்தான் ரெடி பண்ணனும். நீங்க நேரத்தோட வ்ந்து சேருங்கோ, என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

வரலட்சுமிக்கு, வைசாலிக்கு இந்த வரனாவது அமைய வேண்டுமே என்ற கவலை உலுக்கி எடுத்தது. இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள் என்று நினைக்க, நினைக்க குழப்பமாக இருந்தது. இவ வயசு பெண்களெல்லாம் ஆசை, ஆசையாக கல்யாணம் பண்ணி குடியும், குடித்தனுமாக இருக்கும் போது இவளுக்கு மட்டும் என்ன வந்தது? வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ? இந்த காலத்து நவநாகரீக பொண்ணுங்க மாதிரியில்லாம, குனிந்த தலை நிமிராம காலேஜ் சென்று வருபவள்தான், காதல், கத்தரிக்காய்னெல்லாம் மாட்டிக்காம இருக்க வேண்டுமே, பகவானே என்று வேண்டிக்கொண்டாள். சே, சே அப்படியெல்லாம் நடக்காது. பட்டப் படிப்பு படித்து முடித்தவுடனே, பொறுப்பாக ஒரு வேலையில் சேர்ந்து கொண்டு, மேற்படிப்பைக் கூட அஞ்சல் வழியாத்தானே படித்து முடித்தாள். இவ்வளவு பொறுப்பான பெண், அதுமாதிரியெல்லாம் செய்ய மாட்டாள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

குறிப்பிட்ட நேரத்தில் சரியாக மாலை 5 மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து இறங்கினர். எல்லோரும் இறங்கியபின் கடைசியாக மாப்பிள்ளை மெதுவாக இறங்கி நடந்து வரும் போதுதான் தெரிந்தது, மாப்பிள்ளைக்கு கால் சற்றே ஊனம் என்று. லேசாக சாய்ந்து, சாய்ந்து நடந்து வந்தார். மற்றபடி ஆள் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக லட்சணமாக இருந்தார்.அப்பொழுதே தெரிந்து விட்டது, இந்த மாப்பிள்ளையும் ரிஜெக்டட் என்று. சரி சரி நடப்பது, நடக்கட்டும் என்று, நானும் ஏனோ தானோ என்று தான் உட்கார்ந்திருந்தேன். ஆனால் மாப்பிள்ளையோ கலகலவென்ற தன்னுடைய வெளிப்படையான பேச்சினால் வெகு சீக்கிரத்திலேயே எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

தன்னுடைய அப்பா பாதி படிப்பின் போதே ஒரு விபத்தில் இறந்ததையும், தன் அக்காவின் உதவி இல்லாவிட்டால் இன்று தான் இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருக்கவே வாய்ப்பில்லை என்பதைக்கூட வெளிப்படையாக அவன் பேசியது, எல்லோருக்கும் அவன் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது, என்றே கூற வேண்டும். தன்னுடைய வெள்ளந்தியான பேச்சின்மூலம் எல்லோரையும் எளிதாக கவர்ந்த மாப்பிள்ளை, வைசாலிக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியிருப்பானோ என்பதை அவளுடைய முகத்திலிருந்து ஏதும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. எந்த சலனமுமில்லாமல், வழக்கமான லேசான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரியான அழுத்தக்காரி. பாரேன், எந்த உணர்ச்சியுமே இல்லாம அப்படியே அமைதியா இருக்கறத?

மாப்பிள்ளையின் உற்சாகத்தைப் பார்த்தவுடனே, தெளிவாகத் தெரிந்தது, அவருக்கு வைசாலியை மிகவும் பிடித்திருக்கிறது என்பது. இருந்தாலும் ஊருக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்ற மாமூலான பதிலைச் சொல்லாமல், எனக்கு பெண்ணைப் பிடித்திருக்கிறது, அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்று தெளிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள், என்றார்.

எல்லோரும் வைசாலியின் முகத்தைப் பார்க்க, அவளோ சிறிதும் தயக்கமின்றி நான் அவருடன் சற்று தனியாகப் பேச வேண்டும், என்றாள்.

பத்து நிமிடமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

வைசாலியும், மாப்பிள்ளையும், சிரித்துக்கொண்டே வந்தார்கள். வைசாலி முழு திருப்தியுடன் தனக்குப் பூரண சம்மதம் என்றாள். திருமணத்திற்கு நாள் குறிக்கும் மற்ற ஏற்பாடுகளும் நடக்க ஆரம்பித்துவிட்டது.

வரலட்சுமிக்கு மட்டும் மிகவும் குழப்பமாகவே இருந்தது. எத்தனையோ அருமையான வரன்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இந்த மாப்பிள்ளையை மட்டும் ஏன் ஒத்துக் கொண்டாள் என்று.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வைசாலி வீட்டில் இருப்பாள். அவளை நேரடியாக கேட்டே விட வேண்டும் என்று முடிவு செய்து அங்கு சென்றாள்.

பட்டுப் புடவை வாங்குவதற்கு, கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். வைசாலி, அவள் அப்பாவிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள்.அனாவசியமாக அதிக விலையில் புடவை எடுக்க வேண்டாம், என்றாவது ஒரு நாள் கல்யாணத்தில் கொஞ்ச நேரம் கட்டுவதற்கு இத்தனை பணத்தை அதில் இன்வெஸ்ட் பண்ண வேண்டாமே, சிம்பிளாக இருந்தால் போதும், அனாவசியமாக செலவு செய்ய வேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இதுதான் சமயம் என்று ,தன்னுடைய சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக,

'ஏன் இந்த மாப்பிள்ளையை மட்டும் ஒப்புக் கொண்டாய்,' என்று கேட்டாள்.
வைசாலியும், சிரித்து மழுப்பி விட்டு, உடை மாற்றுவதற்காகத் தன் அறைக்குச் சென்றாள்.

வரலட்சுமியும் விடாப்பிடியாக அவள் பின்னாலேயேச் சென்றாள்.
பாட்டி," என்ன வேண்டும் உனக்கு, ஏன் இப்படிப் படுத்தறே? நான் கிளம்பறேன். அப்பா லேட்டாச்சுன்னா சத்தம் போடுவார்.வெளிச்சத்துலே எடுத்தாத்தான் புடவை கலர் நன்னா தெரியும்னு சொல்லுவார்", என்றாள்.வரலட்சுமியும்விடாப்பிடியாக, "ஏன் வைசாலி இப்படி பண்ணினே, உன் அழகுக்கும், அறிவுக்கும் தகுந்த மாதிரி எத்தனை பெரிய இடத்து மாப்பிள்ளையெல்லாம் வந்ததே, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்தப் பையனை மட்டும் ஏன் செலக்ட் பண்ணினே, எனக்கு காரணம் தெரியாட்டி, தலையே வெடிச்சிடும் ", என்றாள்.

பாட்டியின் அக்கறையுடனான பாசமான, கேள்வி அவளுடைய மௌனத்தைக் கலைத்து, மனம் திறக்க வைத்தது.

" பாட்டி, அப்பாவிற்கு ஹார்ட் சர்ஜரி பண்ணியிருக்கோல்லியோ? அவரால முன்ன மாதிரி, ரொம்ப அலைஞ்சி ஓடியாடி பிசினஸ் பண்ண முடியாது. அடிக்கடி அவருக்கு செக்கப் செய்து உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். தம்பி, இப்பத்தான் முதல் வருடம் எஞ்ஞினீயரிங் படிக்கிறான். அவனுக்கு பேமெண்ட் சீட்டிற்குப் பணம் கட்ட வேண்டும். அதுவும் அவன் வெளியூரில் படிப்பதால் செலவும் அதிகம்.என்னைப் பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்தால், நான் சந்தோசமாகத்தான் இருப்பேன். ஆனால், அதற்காக அப்பா மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியதாகும். அதுமட்டுமில்லாமல், வசதியான இடமாக இருந்தால் என்னை வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அப்பாவிற்கோ, தம்பிக்கோ பணம் தேவையென்றால் என்னால் உதவ முடியாது. என்னை படிக்க வைக்க அப்பா எவ்வளவு சிரமப்பட்டார்னு எனக்கும் தெரியும் பாட்டி. அந்தப் படிப்பு அவருக்கும் பயன்படனும்னு நான் நினைக்கிறதுலே என்ன தப்பு இருக்கு. நான் அவர்கிட்ட தனியா பேசினப்ப இதையெல்லாம் தான் பேசி, தெளிவாக எடுத்துச் சொன்னேன். அவரும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதிச்சுட்டார். அதனால்தான் நான் ஒத்துண்டேன்", என்றாள்.

இதைக் கேட்டவுடன், வரலட்சுமி அவளைக் கட்டி அணைத்து, உச்சி முகர்ந்து," என் கண்ணே, நான் உன்னைப் பத்தி என்னமோ நினைச்சுட்டேன். இந்த வயசுலே உனக்கு இருக்கற அனுபவமும், தியாக மனசும், புரியாம, இவ்வளவு நாளா உன்னை திட்டிக்கிட்டு இருந்தேன்னு நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு, என்னை மன்னிச்சிடும்மா" என்றாள் கண்ணீர் மல்க.

ஆணுக்கு நிகராக சம உரிமை கேட்கும் பெண் குழந்தைகள் இன்று ஆணுக்கு நிகராக பொறுப்பேற்றுக் கொள்ளவும் தயங்குவதில்லை என்பதைப் பார்க்கும் போது மனதிற்கு தெம்பாகத்தான் இருக்கிறது.

2 comments:

  1. by the way who s this person "sen"? for everything he s telling wonderful , wonderful.

    Brahmin Tamil la mistake illama super a eluthi irrukinga

    ReplyDelete