Thursday, October 14, 2010

இந்தியத் திரு நாட்டின் மறு மலர்ச்சியில் பெண்கள் - பாகம் - 6.............


ஆஷாலதா சென் - [1894 -1986 ].

காந்தியவாதி, சமூக சேவகி, இலக்கியவாதி, என்ற பன்முக நாயகி ஆஷாலதா சென், பிப்ரவரி மாதம், 2ம் நாள், 1894ம் ஆண்டு, நவகாளி [ இன்றைய வங்காள தேசம் ] எனும் இடத்தில், நற்பண்பும், கல்வித் திறனும், அறிவுச் செழுமையும் நிறைந்த ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பகாலா மோகன் தாஸ் குப்தா, மாவட்ட நீதிபதிகளின் நீதிமன்ற வழக்கறிஞராகவும், தாய் மோனோடா தாஸ் குப்தாவின் குடும்பத்தின் பெரும்பாலானவர்கள், அரசாங்க உயர் பதவியில் இருக்கக் கூடியவர்கள்.

அவருடைய பாட்டி, நபசசி தேவி, தங்கள் குடும்பத்தில் படிப்பறிவுப் பெரும் பெண்கள் விரைவில், விதவையாகிவிடுகிறார்கள் என்ற மூட நம்பிக்கைக் கொண்ட தன் மாமியாருக்குத் தெரியாமல், ஆஷாலதாவிற்கு, எழுதப் படிக்க மட்டுமல்லாது, நல்ல தரமான உயர் கல்வியையும், தன் கணவர் வழி உறவினர்கள் மூலம் பெறும்படி செய்தார்.

இவரும்
இலக்கிய வட்டத்தில் பேசப்பட்ட ஒரு இலக்கியவாதி. கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தாலும், பழமையில் ஊறிப்போன காலமாதலால், தன் மகள் மோனோடாவை 10 வது, வயதிலேயே படிப்பை நிறுத்தி, திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டார். ஆனாலும் தன்னுடையத் தேடலை வாழ்நாள் முழுவதும் நிறுத்தவில்லை அவர். இத்தகையப் பரம்பரையில் வந்தவர்தான் ஆஷாலதா.

ஆஷாலதா, இயற்றிய வங்காளப் பிரிவினைக்கு எதிரான தேசபக்திக் கவிதை, அந்தாபூர் என்ற மாதாந்தரியில் பிரசுரமான போது, அவருக்கு வயது பத்து. இவருடைய பாட்டியும், தாயும், பல செய்திகள் மற்றும் கதைகள் மூலம் இவருக்கு விழிப்புணர்வை ஊட்டியிருந்தனர்.

ஒரு கட்டுப்பாடான ஒழுக்க நெறியுடன் கூடிய, உண்மையான காந்தியவாதியாக, வெண்ணிற கதராடை உடுத்தி, எழுதுவதும், புத்தகங்கள் வாசிப்பதும், அரசியல் விவாதங்கள் புரிவது, என்று வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டிருந்தார்.இயற்கை ஆர்வலராகவும், தன்னைச் சுற்றி இருக்கும், அனைத்து விடயங்களுக்கும், அன்பும், அக்கரையும் செலுத்தியதோடு, தன்னுடைய கொள்கைகளில், தெளிவாகவும், மனதில் பட்டதைத் தயங்காமல் வெளியிடும் குணமும் கொண்ட ஒரு நேர்மையாளர்.

தன்னுடைய 12 வது, வயதிலேயே பள்ளி செல்வதை நிறுத்தி விட்டு, திருமண பந்தத்தில் சிக்க வேண்டிய நிலையில், சத்யரஞ்சன் சென் என்ற அரசாங்க ஊழியருக்கு வாழ்க்கைப்பட்டார். ஆஷாலதாவின் திருமண வாழ்க்கை மிக இனிமையானதாக இருந்தாலும், மிகக் குறைந்த ஆயுளே கொண்டதாக இருந்தது. தன்னுடைய 22 வது வயதிலேயே, கணவனை பறி கொடுத்து நான்கு வயது மகனைக் கையில் வைத்திருந்தார். மாமியாரும் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நெருக்கடியானச் சூழலில் தாயாரும், மாமனார், ராஜ்குமார் சென்னும், இவருக்குப் பக்க பலமாக இருந்து செயல்பட்டனர்.

ஆறு வருடங்களுக்குள்ளாகவே, தன்னுடைய துயரங்களிலிருந்து மீண்டு வந்து, வங்காளம், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் மூன்றையும் கற்று தேர்ச்சியடைந்ததோடு, வெளியுலகச் செயல்பாடுகளிலும் மிகுந்த ஆர்வம் கொள்ளலானார்.

அந்த நேரத்தில், மகாத்மா காந்தி சத்யாகிரக இயக்கம் ஆரம்பித்திருந்தார். ஆஷாலதாவின், மாமன்மார்கள், நிபாரன் தாஸ் குப்தா மற்றும் தீரேன் தாஸ் குப்தா இருவரும் இந்த இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆஷாலதா, கயா காங்கிரசிற்கு, நிபாரன் தாஸ் குப்தாவுடன் சென்று, காந்தியடிகளைச் சந்தித்தார். காந்தியடிகளைத் தன் குருவாக தீக்கைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுவார். காந்தியடிகளின் மறைவிற்குப் பிறகு அவருடைய நினைவு நாளில் விரதம் மேற்கொள்ளும் வழக்கமும் கொண்டிருந்தார்.

கணவரை இழந்த நிலையில் தன் குடும்பப் பொறுப்புடன், குழந்தை வளர்ப்பு மற்றும், முதுமையின் பிடியிலிருந்த மாமனாரின் பணிவிடைகள் என்று சுழன்று கொண்டிருந்தார்.இந்தச் சூழலில்தான் இவர் ஆதரவற்ற மற்றும் கைம்பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை, தன் இருப்பிடத்திலேயே ஏற்படுத்தினார். அவர்களுக்கு பலதரப்பட்ட கைத்தொழில்கள் மட்டுமல்லாது, சத்யாகிரகத்தின் மகத்துவம் குறித்த விழிப்புணவையும் ஏற்படுத்தி அதற்கான பயிற்சியும் அளித்து வந்தார். டாக்காவில் ' காந்தாரிய மகிலா சமிதி'யும் ஆரம்பித்தார்.

இது, இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின், மனநிலை, சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த போராட்டமானக் காலம் எனலாம். டாக்காவின் பெண்களுக்கு கல்வியறிவூட்டுவதிலும், அரசியல் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வூட்டுவதிலும், கடுமையான முயற்சிகள் மேற்கொண்டதன் காரணமாக, பழமைவாதிகளாக இருந்த ஆண்களினால் கடும் எதிர்ப்பையும் சந்திக்க நேரிட்டது. ஆனால் இவருடைய மாமனார் அத்தகைய எதிர்ப்புக்களின் தடுப்புச் சுவராகவே இருந்து இவரைக் காத்து வந்தார்.

சுதேசி விழாவை நடத்தியதன் மூலமாக, தன்னைச் சுற்றியிருந்த பல பெண்களால், பெரிதும் கவரப்பட்டதோடு அவர்களுக்கு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டார். இலக்கியப் பணிகளின் ஆர்வத்திலும் குறையில்லாமலே இருந்தார். இந்த நேரத்தில் தான் தன்னுடைய மிகச் சிறந்த பல கவிதைகளை இயற்றினார். இந்த கவிதைத் தொகுப்பு, " வித்யூத்" [மின்னல்] என்ற தலைப்பில், புத்தகமாக பிரசுரிக்கப்பட்டது. பிற்காலத்தில், பிரிட்டானிய அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது.


தன்னுடைய ஆசிரமத்தில் பெரும்பாலானப் பெண்களை சத்தியாகிரகப் பயிற்சியளித்து வைத்திருந்தார். வங்காளம் மற்றும் அசாம் போன்ற இடங்களுக்குப் பயணித்து, அங்கு பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்யும் பிரசாரத்தில் ஈடுபட்டார். 1932ல் மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, சுமார் இரண்டு மாதங்களில் 60 கிராமங்களுக்குப் பயணம் செய்து, கிராம மக்களை ஊக்கப்படுத்தினார்.

தீண்டாமை மற்றும் மதச்சார்பை புறக்கணித்து, இந்து மற்றும் இஸ்லாமியச் சகோதரர்களின் எளிமையான குடிசைகளில் தங்கினார். அங்கு, 'சத்தியாகிரக சேவிகா தள்', என்ற பெண்கள் சேவை மையம் உருவானது. 135 கிராமங்களில் இயக்கப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் அனைவரும் சிறைப்படுத்தப் பட்டனர். ஆஷாலதா, முதலில் ஆறு மாதமும் பின்பு 15 மாதமும் சிறையில் அடைக்கப்பட்டார். 1933ல் வெளியில் வந்தவுடன், பலவேறு விதமான சமுதாய நலத் திட்டங்களை ஏற்படுத்தினார்.


இவருடைய ஓய்வில்லாத உண்மையான பெரு முயற்சியினால், காந்தியடிகள் 1942ம் ஆண்டு விடுத்த அடுத்த அழைப்பிற்கு, முழுமையாக பயிற்சி பெற்ற இந்து மற்றும் இஸ்லாமியத் தொண்டர்கள் அடுத்தக் கட்ட இயக்கத்திற்கு தயாராகினர். பலரும் அரசாங்கச் சட்டத்தை எதிர்த்தக் காரணத்தினால் சிறைக்குச் செல்ல வேண்டிவந்தது. ஆஷாலதாவும் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். 1943ல் சிறையிலிருந்து வந்த போது வங்காளத்தின் மிக மோசமான நிலை கண்டு நொந்து போனார். அதனைச் சீர் செய்யும் தீவிர முயற்சியிலும் ஈடுபட்டார்.


இறுதியாக சுதந்திரமும் வந்தது. ஆனால் கூடவே வங்காளப் பிரிவினை என்ற வேதனையும் வந்தது. ஆஷாலதாவின் இதயம் சுக்கு நூறானது. காரணம் அவர் சிறு வயது முதல் கண்ட கனவு மற்றும் அதற்கான தியாகம் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரானது. கிழக்கு வங்காளத்தில் தங்க முடிவெடுத்தார். அந்த நேரத்தில் அவர் டாக்காவிலிருந்து, கிழக்கு பாகிஸ்தான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார்.

1965 லிருந்து, டாக்காவில் தங்கியிருந்தார். அவருடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவிக் காலம் முடிந்தவுடன், சமூகச் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இந்தியாவிலிருந்து, புலம் பெயர்ந்து டாக்காவிற்குச் சென்ற இஸ்லாமிய பெண்டிர் மற்றும் டாக்காவிலேயேத் தங்கிவிட்ட இந்துப் பெண்களின் இடையே நட்புப் பாலம் கட்டும் பணியை ஆரம்பித்து வைத்தார். காந்தாரியா மகிலா சமிதி, இங்குதான் உருவானது. மிகக் குறைந்த காலத்திலேயே இந்த சமிதி நல்ல வளர்ச்சி கண்டது. இவருடைய தன்னலமற்ற சேவையும், மனித நேயமும், இவரைத் தோழியாகவும், தலைவியாகவும் ஏற்றுக் கொள்ளச் செய்தது.

1965ல் டாக்காவிலிருந்து, தன் மகன், மருமகளுடன் வாழும் பொருட்டு, டெல்லிக்குச் சென்றார். டாக்காவிற்கு திரும்ப வேண்டி, புறப்படும் வேளையில் போர் மூண்டதால், இந்திய பாகிஸ்தான் எல்லை அடைக்கப் பட்டது. தன் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லையே என்ற வேதனை அவருக்கு மன அழுத்தமாக மாறியது. ஆனாலும் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, அதிலிருந்து, முன்பைவிட அதிகமான மன உறுதியுடன் மீண்டு வந்தார். தன்னுடைய 72 வது வயதில் கொஞ்சம், கொஞ்சமாக , அரசியலை விட்டு, வெளியே வந்து, முழு நேர இலக்கியச் சேவையில் ஈடுபட்டார்.

வங்காள மொழியில் கிருத்திபாசர் எழுதிய இராமாயணம் மிகவும் பிரபலம். ஆஷாலதா, சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்தது, அனைவரையும் கவர்ந்தது. இது, இவருடைய 80 வது வயதில் பிரசுரமானது. பல்வேறு மொழியியல் அறிஞர்களையும் கவர்ந்தது.

1. வங்காள மொழியை அரசு மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

2. நிதி வருவாயை, பாகிஸ்தானின் இரண்டுப் பகுதிக்கும் சமமாகப் பிரித்தல் வேண்டும்.
இதே பிரச்சனையை ஆஷாலதா 1946 லேயே சட்டசபையில் முன் வைத்தார். கிழக்கு பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக வங்காள மொழி இருக்க வேண்டுமென குரல் கொடுத்ததோடு, கிழக்கு பாகிஸ்தான் மூலமாகக் கிடைக்கக் கூடிய வருவாய் மற்றும் அன்னிய செலாவனி, ஆகியவைகள் கிழக்கு பாகிஸ்தானுக்காகவே செலவிடப்பட வேண்டும். இந்த காரணத்தினால் அப்போதைய நிதியமைச்சரின் வருத்தத்திற்கும் ஆளானார்.

வங்காள தேசம் தனி மாநிலமாக உருவெடுத்த போது அவருடைய மகிழ்ச்சி எல்லை கடந்ததாக இருந்தது. ஆஷாலதா 1978ம் ஆண்டு இந்தியா திரும்பினார். தன்னுடைய 92 வது வயதில், 1986ம் ஆண்டில், தன் ஆயுட்காலம் முடியும் வரை அன்றாடப் பணிகளில் எந்த மாற்றமும் இல்லாமல், அமைதியாகவே இருந்தார். தன் வாழ்நாளில் எத்தனையோ இன்னல்களைச் சந்தித்த போதும், நம்பிக்கை இழக்காமல், நாட்டின் மறுமலர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையேத் தியாகம் செய்தார்.

ஆஷாலதா, பெண்கள் தங்களுடைய உரிமைகள், திறன்கள் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என விரும்பினார். பெண்கள் ஈடுபடாத எந்த இயக்கமும் முழுமையான வெற்றியடைய முடியாது என்பதை உணர்ந்திருந்தார். அதனாலேயே அவர், 'ஜாக்ரதா செபிகடல்' [1930- டாக்கா], ராஷ்ட்ரியோ மகிலா சங்கம்' [1931 - விக்ரமபுரா],' நாரிகர்மி சிக்ஷா கேந்த்ரா [1931- டாக்கா], மற்றும் காங்கிரசு மகிலா சங்கம்[1939] போன்றவைகளும் மற்றும் அதன் பல கிளைகளையும் தோற்றுவித்தார்.

இவர் தன்னுடைய ஒரு கவிதையில், " பெண்களே, நீங்கள் உங்கள் சுயத்தைப் பணயம் வைத்துக் கடவுளைத் தேடுகிறீர்களே, அதனால் மதிப்பையும் இழக்கிறீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள், சுய மரியாதையுடன் இருங்கள், கடவுளை உங்களுக்குள்ளேயேக் காணலாம்", என்று அழகாகக் கூறியுள்ளார்.

8 comments:

 1. நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.
  நல்ல பகிர்வு. நன்றிகள்.

  ReplyDelete
 2. இவர் தன்னுடைய ஒரு கவிதையில், " பெண்களே, நீங்கள் உங்கள் சுயத்தைப் பணயம் வைத்துக் கடவுளைத் தேடுகிறீர்களே, அதனால் மதிப்பையும் இழக்கிறீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள், சுய மரியாதையுடன் இருங்கள், கடவுளை உங்களுக்குள்ளேயேக் காணலாம்", என்று அழகாகக் கூறியுள்ளார்.

  ....superb!

  ReplyDelete
 3. நன்றிங்க அம்பிகா.

  ReplyDelete
 4. நன்றி நித்திம்மா... அறிமுகம் புதியது...

  ReplyDelete
 5. நன்றிம்மா ப்ரியா. மகிழ்ச்சி.

  ReplyDelete
 6. எனக்கு இது புதிய தகவல்....நல்ல பதிவு

  ReplyDelete