பவள சங்கரி
நம் சங்கத் தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் உள்ளடக்கியது. இயற்றமிழ் இன்று மெல்ல, மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் நம் தமிழ் வல்லுநர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. கர்நாடக இசை, மெல்லிசைப் பாடல்கள், பக்தி இலக்கியம் போன்றவைகள் மூலமாக இசைத்தமிழ் காப்பாற்றப்பட்டு, தம் நிறம் இழக்காமல் இருக்கிறது. தம் எண்ணங்களை தமது உடல்மொழியின் வாயிலாக இயல்பாக வெளிப்படுத்தி, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழ் என வழங்கப்படுகிறது. ஆனால் வீரம், காதல், பக்தி, வாழ்க்கை நெறி, வாழும் முறை என அனைத்தையும் உள்ளடக்கிய நம் தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் நாடகக் கலை இன்று வருங்கால சந்ததியினருக்கு முழுமையாகச் சென்றடையுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. தற்பொழுது திரு. கிரேசி மோகன், திரு ஒய்.ஜி. மகேந்திரன், திரு. எஸ்.வி. சேகர் போன்ற குறிப்பிட்ட சிலரே நாடகவியலை கட்டிக்காத்துக்கொண்டு வரும் சூழலில் சமீபத்தில் திரு.கிரேசி மோகன் அவர்களின், ‘சாக்லேட் கிருஷ்ணா’ என்ற நாடகம், நகைச்சுவையும், ஆன்மீகமும் கலந்த கலவையாக, பிரகாசித்துக் கொண்டிருக்கும் மேடை நாடகம் தன்னுடைய 777 வது நிகழ்ச்சியை வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. போகிற போக்கில் தம் யதார்த்தமான வசனம் மூலம், சகோதரர் மாது பாலாஜி மற்றும் தம் நாடகக் குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளில், வெகு சிறப்பாக நடந்து வரும் மேடை நாடகம் இது. திரையுலகிலும், எழுத்து, வசனம் என அனைத்திலும் தம் முத்திரையைப் பதித்துள்ள மூத்த எழுத்தாளர், திருமிகு சித்ராலயா கோபு, உலக நாயகர் திருமிகு கமலஹாசன், திருமிகு நல்லி குப்புசாமி அவர்கள் முன்னணியில், சென்னை மயிலை நாரத கான சபாவில், அரங்கு நிறைந்த காட்சியாக மிகச் சிறப்பாக நடந்தேறியது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மிகப்பெரிய தொகைக்கு நுழைவுச் சீட்டு விற்பனை ஆகியுள்ளதுதான். மக்களிடம் நல்ல நாடகங்களைக் காணும் ஆவல் அதிகமாக இருப்பதையே இது உணர்த்துகிறது.
திரு.நல்லி குப்புசாமி அவர்கள் கமலஹாசன் அவர்களின் சமீபத்திய வெற்றிப்படமான ‘பாபநாசம்’ திரைப்படத்தை பாராட்டிப் பேசியவர், அப்படத்தில் பல காட்சிகளில் தாம் வெளியில் வந்து நின்று கொண்டதைக் கண்ட நண்பர்கள் காரணம் கேட்டபோது, தாம் ஏற்கனவே மலையாளத்தில் வந்த, மோகன்லால் படத்தை பார்த்திருந்ததால், போலீசார் அவரை அடிக்கும் காட்சி வரும் நேரத்தில் அதைக் காணச்சகிக்காது, வெளியில் வந்துவிட்டதாகச் சொன்னார்.
அடுத்து பேசிய சித்ராலயா கோபு கமல் ஆரம்பத்தில் நடித்த ‘உணர்ச்சிகள்’ என்ற படத்திலேயே பிற்காலத்தில் ஒரு பெரிய நடிகராக வரக்கூடிய தகுதி படைத்தவர் என்று சொன்னதாகவும், இன்று அதைவிட பலப்படிகள் கடந்து உலக நாயகராக உயர்ந்து நிற்பதாகக் கூறினார். கூடிய விரைவில் மிகச் சிறந்த இயக்குநராகவும் ஆகப்போகிறவர் என்றும் பாராட்டினார். திரு கிரேசி மோகன் அவர்களின் இந்த மாபெரும் வெற்றியை பாராட்டிப் பேசியவர், அதற்கான காரணம் அவருக்குத் தூணாகத் துணையிருக்கும் சகோதரர் மாது பாலாஜி மற்றும் பல ஆண்டுகளாக தொடர்ந்து அவரோடு இணைந்திருக்கும் நாடகக் குடும்பமும்தான் என்றார். மாது பாலாஜியை பல முறை திரைப்படத்தில் நடிக்க அழைத்தும், தம் குடும்பத்தார் அதை விரும்பவில்லை, நாடகம் மட்டுமே போதும் என்று தெளிவாக இருப்பதைக் குறிப்பிட்டபோது இந்த ஆழ்ந்த ஈடுபாடு இக்குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. கிரேசி கிரியேஷன்ஸ் குழும நண்பர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக செயல்படுவதும், நறுக்கு தெறித்தாற்போன்ற வசனங்களும், நேரத்திற்கு ஏற்ற நகைச்சுவையும், வசனமும் என்று பல்வேறு காரணங்களை தம் அனுபவ மொழிகளில் அழகாகச் சொல்லிச்சென்றார் அந்த 84 வயது இளைஞர். காதலிக்க நேரமில்லை என்ற மிகச் சிறந்த நகைச்சுவை படத்திற்கு வசனம் எழுதியவரின் மதிப்பீடு கருத்தில் கொள்ளத்தக்கது.
திரு கிரேசி மோகன் அவர்கள் தங்கள் நாடகம் 777 வது நிகழ்ச்சியாக சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவரையும் உள்ளம் நெகிழ நன்றி பாராட்டினார். திரு கமலஹாசன் அவர்களின் நட்பு தனக்கு பெரிய பலம் என்பதைச் சுட்டிக்காட்டினார். தன்னுடைய பல நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சி துவங்கும் முன்னரே, கௌதமி மற்றும் அவருடைய மகளுடன் வந்தவர், 1000 வது நிகழ்ச்சியின் வெற்றி விழாவும் விரைவில் நடைபெறும் என்றும் அதிலும் தாம் பங்கு பெறுவது உறுதி என்றும் நம்பிக்கையோடு கூறினார். கிரேசி மோகன் அவர்கள் நகைச்சுவை படைப்புகளே அதிகம் வழங்கினாலும், மற்ற அனைத்து விதமான படைப்புகளும் சர்வ சாதாரணமாகச் செய்யக்கூடிய சகலகலா வல்லவர் என்றாலும், ஏனோ பல முறை சொல்லிய பின்பும், அவர் நகைச்சுவையை விட்டு வெளிவராமல் அதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் என்று பாராட்டினார். வழக்கம் போல நறுக், சுருக்கென்று தம் உரையை முடித்துக்கொண்டார். திரு கிரேசி மோகனின் அடுத்த வெளியீடு விரைவில் காணப்போவதையும் தானும் ஆவலாக எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.
நம் இந்திய நாட்டிற்கென்று தனிப்பட்ட பண்பாடும், கலாச்சாரம் இருப்பது போன்று பெரும்பாலான நாடுகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய நாட்டின் கலாச்சாரமே அமெரிக்க நாட்டு மக்களால் பின்பற்றப்படுகிறது. அப்படிப்பட்ட நம் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் இது போன்ற நாடகங்கள் அழிவென்பதே அறியாதவாறு போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியதும் உறுதியாகிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் இலண்டன் மாநகரில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்படுவது போல, ‘சாக்லேட் கிருஷ்ணா’ போன்ற நல்ல தமிழ் மேடை நாடகங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு நடக்க வேண்டும் என்று வாழ்த்துவோம். அதற்கான முயற்சியை, அதாவது தங்களுக்கான நல்ல கலையுலக வாரிசுகளை உருவாக்க வேண்டியது திரு கிரேசி மோகன் போன்ற அனுபவம் வாய்ந்த நல்ல படைப்பாளர்களின் முக்கிய கடமையாகிறது என்பதும் உறுதி.
படங்களுக்கு நன்றி: திரு. திருநாவுக்கரசு
நன்றி வல்லமை http://www.vallamai.com/?p=59555
அழகான நிகழ்ச்சியை கண்டது போல... நன்றி...
ReplyDelete