Wednesday, July 15, 2015

கர்மவீரர் காமராசர் !



தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய்  சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று அன்னை வருந்தியிருக்கிறார்.  அப்போது காமராஜரைப் பார்த்து அவருடைய  நண்பர் ஒருவர், ‘நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?’  என்று கேட்க, அவரும் உடனே, ‘என் தாயாருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய  சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிக்குப் போவதால்,  சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் மட்டும்தான் அரசாங்கச் செலவு. நம் கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருகிறேன்’ என்று பதில் வந்துள்ளது. எத்தனை பெருந்தன்மை! இவரல்லவோ சிறந்த தலைவர்!


தான் ஒரு தன்மானம் மிக்கத் தமிழர் என்பதை நிரூபித்தவர் காமராசர்!   நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நேரம் அது.  பெருந்தலைவர் காமராசரைச் சந்திக்க விரும்பினார் நிக்சன். புது டெல்லியிலிருந்து காமராசரைச் சந்திக்க தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இந்த விசயத்தை அதிகாரிகள் காமராசரிடம் கூறினார்கள், அப்போது,

‘பார்க்க முடியாதுன்னேன்’ – என்று காமராசர் பதில் சொன்னபோது,  ஏன் இப்படிச் சொல்கிறார்? காமராசரை, பார்க்க விரும்புவரோ அமெரிக்க அதிபர் என்பதால் மேலும் குழப்பமடைந்தவர்கள் அவரிடமே காரணம் கேட்டபோது, அமெரிக்கா சென்ற தமிழர் அண்ணா துரையை சந்திக்க நிக்சன் மறுத்து விட்ட போது, நான் மட்டும் எப்படி நிக்சனை சந்திப்பது? என்று  திருப்பிக் கேட்டாராம் அந்தத் தமிழர்.


கட்சியோடு அரசையும், அரசோடு கட்சியையும் கலந்து குழப்பிக்கொள்ளாதவர் காமராஜர். அத்தோடு தம் பதவியையும் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்த மாட்டார். அதற்கு எடுத்துக்காட்டு ஒரு சின்ன நிகழ்வு!

காமராஜர் அவர்கள் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த போது, வேலை இல்லாத, அவருடைய தங்கை மகன் ஒரு வேலை வாய்ப்பு வேண்டி, தான் ஒரு வேலைக்கு மனுப்போட்டிருப்பதாகவும், சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கேட்டு தனது தாய் மாமனான காமராஜரிடம் வந்தார். அதற்குக் காமராஜர், சிபாரிசு செய்யமாட்டேன் என்று மறுத்ததோடு, நீ அந்த வேலைக்கு தகுதியானவனாக இருந்தால், அவர்கள் தானாகவே உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி நீ, என் பெயரை உன் வேலைக்காகச் சொல்லக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பிவிட்டார். இப்படிப்பட்டவரை இனி பார்க்க இயலுமா?.

1 comment:

  1. படிக்காத மேதை...

    இவரைப் போல் இனி காணவே முடியாது...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...