பவள சங்கரி
அவந்திகா
நம் ஒவ்வொருவரின் செயல்பாட்டிற்குமே நாம் பெற்றிருக்கின்ற ஞானத்தின் இயல்பு, நம்மிடம் மறைந்துள்ள சத்வ, ரஜோ, தாமச குண இயல்புகள், நமது கொள்கைப் பிடிப்பு ஆகியவையும், நமது கர்மப் பலனும் தான் முக்கிய காரணம்.
ஒரு செயலில் ஈடுபடுதல், செய்யாமல் விடுவது, செய்யத்தக்க செயல், செய்யத் தகாத செயல், அச்சம், அச்சமின்மை, பந்தம், விடுதலை போன்றவற்றைச் சரியாக உணர்ந்துகொள்ளும் அறிவு தான் சாத்வீக புத்தி.
“எந்த ஓர் அறிவு செய்யத்தக்கது, செய்யத் தகாதது ஆகியவற்றைச் சரியாக அறிவதில்லையோ அது குழப்பமான ராஜச புத்தி. இவை தவிர தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தைத் தர்மமாகவும் மாற்றிப் புரிந்துகொண்டு செயல்படுவது தாமச புத்தி. இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும், தீயவை நல்லவையாகவும் தோன்றும். எடுத்துச் சொன்னாலும் புரியாது. தொடர்ந்து தவறாகச் செயல்படவே தூண்டும்.
"அவந்திகா.. அவந்திகா,
எத்தனை வாட்டி உன்னை கூப்பிடறது.
காதிலயே விழலியா. அதானே. இவ்வளவு சத்தமா
டிவியை வச்சா எப்படி என்
சத்தம் கேட்கும். கிட்ட வந்து கூப்பிட்டாலே
உனக்கு காது கேட்கல. அப்படியே
மெய்மறந்து இருக்கிறே. நான்
இங்கே கழுதையா கத்திட்டே இருக்க
வேண்டியதுதான்”
“என்னங்க,
இப்ப ஏன் அலுத்துக்கறீங்க. காலைல
கொஞ்ச நேரம் நிம்மதியா ஒரு
நல்ல ஸ்பீச் கேட்க விடமாட்டீங்களே.
இப்ப என்னதான் பிரச்சனை உங்களுக்கு?”
“என்ன,
என்ன பிரச்சனைன்னா கேக்குற. என் கையில அடி
பட்டிருக்கறதையே மறந்துட்டியா. நான்
குளிக்கப் போகணும். என் டிரஸ் எல்லாம்
எடுத்து வைக்கலியா. எனக்கும் நேரமாகுதில்ல”
“என்ன
ராம் நீங்க. இப்ப என்ன
பெரிசா அடி பட்டிருச்சு உங்களுக்கு?
பாத் ரூமில் கால் லேசா சிலிப்
ஆனதுல, கையை கொஞ்சம் பலமா
ஊனிட்டீங்க. அதனால மணிக்கட்டுல லேசா
வீக்கம். அது ஹேர் லைன்
ஃபிராக்சர் மாதிரி கூட தெரியலைன்னு
தானே டாக்டர் சொன்னார். அதுவும்
அது இடது கைதான். வெயிட்
மட்டும் தூக்காம எல்லா வேலையும்
மெதுவா செய்துக்கலாமுன்னுதானே சொன்னார். வலது
கையில உங்க துணியை நீங்களே
எடுத்துக்க முடியாதா. “
“அதில்லைம்மா,
பீரோ திறக்கணுமேன்னுதான் சொன்னேன். சரி விடு. நான்
பார்த்துக்கறேன். இதுக்குப் போயி இப்படி அலுத்துக்கறே”
“அலுத்துக்கலை.
இன்னைக்கு ஒரு முக்கியமான பேட்டி
எடுக்கப் போகணும். ஜெர்மனியிலிருந்து ஒரு வி.ஐ.பி. வந்திருக்கார். அவரைப்
பேட்டி எடுக்கணும். பத்து
மணிக்கு அப்பாயின்மெண்ட். அவரு
ரொம்ப பங்க்சுவாலிட்டி பார்ப்பவராம். லேட்டா போனால் பேட்டியையே
கேன்சல் பண்ணிடுவாராம். நான்
ஆபிஸ் போயி ரிப்போர்ட் செய்துட்டு, அப்புறம்தான்
ஆபீஸ் காரில் அவரோட கெஸ்ட்
ஹவுஸ் போகணும். அதுக்கே 1 மணி நேரம் ஆகும். கொஞ்சம்
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ராம்”
“இவ்ளோ
வேலை இருக்குறவ, காலைல உன் அபிமான
குருவின் பேச்சை மட்டும் கேட்காம
இருக்க முடியாதோ.. 30 நிமிடம் அப்படியே மெய்மறந்து
உட்கார்ந்திருக்கியே. அந்த டைம் வேஸ்ட்
இல்லையா”
“அடக்
கடவுளே... என்ன நீங்க.. அது
ஒரு தியானம்ப்பா.. இன்னைக்கு முழுவதும் எனக்கு உற்சாகம் கொடுக்கும்
டானிக். நல்ல விசயம் நாலு
கேட்க உடமாட்டீங்களே.”
“ஹேய்..
பறந்துட்டே இருக்கியே. அதான் சொன்னேன்.. எனக்கென்ன
போச்சு.. நீ யார் பேச்சை
வேணா கேளு”
“ஓஒ
அப்படியா.. இல்லையே.. ஏதோ காதுல புகை
வர்ற மாதிரி தெரியுதே.. கொஞ்சம்
பொறாமையா இருக்கோ”
“ஏய்..
கழுதை.. போடி பேசாம.. என்கிட்ட
பத்து நிமிசம் பேச நேரமிருக்கா
உனக்கு.. சொல்லு”
"ஓகே, ஓகே
நான் கிளம்பறேன். டேக் கேர். நல்லா
ரெஸ்ட் எடுங்க. என்ஜாய் யுவர்
ஹாலிடே. நிம்மதியா தூக்கம் போடுங்கப்பா...
நாம சாயந்தரம் ஒரு மூவி, இல்லேனா
பீச்சுக்கும் போகலாம். நான் சீக்கிரம் வந்துடறேன்.
சரியா....”
“ ம்ம்...
நம்பறேன் .... ஏய்.. ஹேய்.. பாத்துப்போம்மா.
என்ன அவசரம் அப்புடி.. ஒரு ஐந்து நிமிசம்
தாமதம் ஆனா ஒன்னும் குறைஞ்சிடாது.
நிதானமா ஸ்டெப் எடுத்து வை.
இப்படி பறக்காதே”
“ஓகே”
என்று கத்திக் கொண்டே சிட்டாகப்
பறந்துவிட்டாள்.
ஆட்டோவில்
இன்னும் 50 நிமிடங்களாவது பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
அதற்குள் அன்றைய பேட்டிக்காகத் தொடர்பு
கொள்ளப்போகும் சந்திரமோகனின் வாழ்க்கையை மீண்டும் புரட்டிப்பார்த்தாள். எத்தனைப் போராட்டம் இவர் வாழ்வில், மனிதரின்
தன்னம்பிக்கையையும், ஆற்றலையையும் அறிந்து மலைத்துப்போயிருந்தாள் அவந்திகா. மிகச்
சாதாரணமான ஒரு குடும்பத்தில், மத்திய
தரம் என்றுகூட சொல்ல முடியாத நிலையில்
வாழும் தனியார் அலுவலகம் ஒன்றில்
கணக்கராகப் பணிபுரிந்த தந்தையின் நான்காவது குழந்தையாகப் பிறந்த சந்திரமோகனுக்கு பிறந்த
அன்றிலிருந்தே போராட்டமான வாழ்க்கைதான். ஆனால் மனிதர் இன்று
உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில்
ஒருவராக இருக்கிறார். சில மாதங்களாக, தங்கள்
பத்திரிக்கை தொடர்பாக
அவருடன் தொடர்பில் இருப்பதால் அவரைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.
உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கும்
இந்த நேரத்திலும், இருதய அறுவை சிகிச்சைக்காக
குறிப்பிட்ட நாட்களுக்கு நான்கு நாட்கள் இருக்கும்
நிலையிலும், அமைதியும், நம்பிக்கையும் சற்றும் குறையாமல் இவ்வளவு
இயல்பாக ஒருவர் தன்னைப்பற்றி, தன்
வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றியும் பேச முடியும் என்பதை
நம்புவதற்கு எளிதாக இல்லை. சென்ற
மாதம் கிட்னி பாதிப்பினால் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, டயாலிசிஸ் செய்யும் நிலையிலும், ஒரு மூன்றாம் மனிதராக
நின்று தம் உடல் நிலையையும்,
மருத்துவ முறையையும் தெள்ளத்தெளிவாக தன் புகைப்படத்துடன் எழுதி
மின்னஞ்சல் செய்ததைப் பார்ப்பவர்களுக்கு, அவர் வாழ்க்கையில் இந்த
அளவிற்கு அடி மட்டத்திலிருந்து உயர்ந்துள்ளதன்
இரகசியம் புரியும்.
அன்றைய
பொழுது மிக உற்சாகமாகக் கழிந்ததில்
அவந்திகாவிற்கு யானை பலம் கூடியது
போல இருந்தது. பிரம்மாண்டமான பங்களாவின் வாயிலில் நுழையும்போதே வரவேற்கும் பசுமையான பொகைன்வில்லாக்களும், பசும் புல்வெளியும், அழகிய
வண்ண மலர்கள் தாங்கி நிற்கும்
குரோட்டன்சு செடிகளும் மனதைக் கொள்ளைகொள்ளும். வருடத்தில்
அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு
மாதங்களே வந்து தங்கும் இந்த
பங்களாவில் இவ்வளவு அழகாக தோட்ட
பராமரிப்பு நடப்பதிலிருந்தே அவருடைய பணிகளின் முழுமையும்,
அவருடைய திறமையும், அதில் உள்ள நேர்த்தியும்
புரியும். செட்டிநாட்டு
பாணியில், பரந்த பட்டாசாலையின் மத்தியில்
சதுர வடிவில் பெரிய தொட்டியும்,
அதைச்சுற்றி பளபளவென்று கருத்த தேக்கு மரத்
தூண்களும், (அன்றாடம் எண்ணெய் பூசுவார்களோ) பூதக்கண்ணாடி
வைத்துப் பார்த்தாலும் ஒரு துளி தூசியும்
சிக்காது. இத்தனைக்கும் அரண்மனை போன்ற அந்த
பெரிய வீட்டில் யாராவது பணியாட்களாவது இருக்கிறார்களா
என்பதே சந்தேகப்படும்படியான மயான அமைதி.. ஆளுயரத்திற்கு மிகப்பெரும் புகைப்படம் ஒன்று மட்டுமே அந்த
அறையில் இருந்தது, பிரதம மந்திரியிடம் தன்னுடைய
சிறந்த சமூகச் சேவைக்காக விருது
வாங்கியபோது எடுத்த படம் மட்டுமே
இருந்தது, அதன் மதிப்பை பன்மடங்குக்
கூட்டியது. கண்ணாடி சுவர்களுடன் கூடிய
வரவேற்பு அறையில் மிகச் சிறந்த
உலகக் கலைஞர்களின் வண்ண ஓவியங்களின் அணிவகுப்பு..
அனைத்தும் சரியான இடைவெளியில் மாட்டப்பட்டிருந்தது.
பழமையும், நவீனமும் இணைந்த வித்தியாசமான ஒரு
கலையுணர்வை அந்த அலங்காரங்களில் கண்டுகளிக்க
முடிந்தது. வாரிசுகளே இல்லாத இந்த மாளாத
சொத்தை இவருக்குப் பின்னால் கட்டிக்காக்கப் போகிறவர் யார் என்பதை அறிய
ஆவல் அதிகமாக இருந்தாலும், நாகரீகம்
கருதி அதை மனதிற்குள்ளேயே பூட்டி
வைத்துக்கொண்டாள். சந்திர மோகனை கம்பீரமான
தோற்றத்துடன் கண்டவுடன் இந்த எண்ணங்கள் அனைத்தும்
இருந்த இடம் தெரியாமல் போனது.
அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது. மிக வெளிப்படையான பேச்சு
எளிதாக எவரையும் கவரத்தான் செய்யும். மாற்றுத் துணிக்குக்கூட வேற்று மனிதரின் உதவியை
நாடி இருந்த காலகட்டத்தைக்கூட தனக்கும்
அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல ஒரு
மூன்றாம் மனிதராக வெளிப்படையாக விளக்கிய
அந்த பாணி அவளை ஆச்சரியப்பட
வைத்ததால் திறந்த வாயைக்கூட மூட
மறந்து, கேட்டுக்கொண்டிருந்தாள்.
இன்றைய
நேர்காணல் பத்திரிக்கைக்காக எடுத்தது போல இல்லாமல் தனக்காகவே அமைந்த தெய்வ சங்கல்பம்
என்றே கருதினாள் அவந்திகா. அலுவலகம் சென்று அனைத்தையும் ஒப்படைத்து,
முக்கியமான குறிப்புகளை எழுதிவைத்துவிட்டு கிளம்பினாள். த்ரீ வீலர் சர்வீசுக்கு
போய் 2 நாள் ஆகிவிட்டது. போகிற
வழியில் பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று
நினைத்துக்கொண்டாள். அலுவலகம் அருகிலேயே இருந்த ஆட்டோ ஸ்டேண்டில்
வழக்கமாகச் செல்லும் ஆட்டோகாரர் அவளைப் பார்த்தவுடன், கையை
ஆட்டிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வந்தார்.
மணி ஐந்து ஆகியிருந்தது. இன்று
சொன்னது போலவே சீக்கிரம் வீட்டிற்கு
செல்வதில் கணவன் உச்சி குளிர்ந்து
விடுவானே என்ற எண்ணமே அவளுக்கும்
மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்படியும் 40 நிமிடங்களில் வீடு போய் சேர்ந்துவிடுவோம்
என்று நினைத்தவள் போன் செய்யாமல் சர்ப்ரைஸ்
விசிட் கொடுக்கலாம் என்று நினைத்து, நமட்டுச்
சிரிப்புடன் யோசனையில் வந்தாள். திடீரென்று நினைத்துக்கொண்டவளாக,
“அண்ணே,
உங்க பொண்ணு, பத்தாவது பரீட்சை
எழுதினாள் இல்லையா? ரிசல்ட் வந்திருக்குமே. என்ன
மார்க் வாங்கியிருக்கா”
“ஆமாம்மா,
எங்கம்மா அந்தப் புள்ள நல்ல
மார்க் வாங்கும்னு ஆசையா இருந்தேன். எப்படியோ
நல்லா படிக்க வச்சு ஒரு
நல்ல வேலைய வாங்கிக்கிட்டா
அவ சொந்த கால்ல நிக்கட்டுமேன்னு
பார்த்தேன். என்னடான்னா, 300 மார்க்தான் வாங்கியிருக்கா கழுதை. பொறுப்பே இல்ல.
எப்பப்பார்த்தாலும் தம்பிக்காரன்கிட்ட மல்லுக்கு நிக்கிறது.. இல்லேனா ஆட்டம் போடுறது.
ஒழுங்கா படிச்சாதானே..”
“விடுங்கண்ணே.. சின்ன
புள்ளை பாவம். பிளஸ் டூ
வரட்டும் பார்த்துக்கலாம். அப்ப பொறுப்பு வந்துடும்.
நல்லா படிச்சுடுவா. பாத்துக்கலாம்.
அண்ணே,
அந்த ஒர்க்ஷாப்புல கொஞ்சம்
நிறுத்துங்க. என்னோட த்ரீ வீலர்
கொடுத்து 2 நாள் ஆச்சு. ரெடியாச்சான்னு
பார்க்கலாம். வண்டி இல்லாம சிரமமா
இருக்கு ”
உள்ளே
சென்று பார்த்துவிட்டு, இன்னும் இரண்டு நாட்கள்
ஆகும் என்று சொன்ன மெக்கானிக்கிடம்,
அடுத்த நாளாவது கொடுக்கச் சொல்லி
கேட்டுக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள்
அங்கு பழைய சாமான்கள் போட்டு
வைத்திருந்த ஒரு சிறிய அறையின்
அருகில் ஒரு பையனும், ஒரு
பெண்ணும் நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்த்தாள்.
ஏதோ வித்தியாசமாகப் பட்டது. மெல்ல அருகில்
சென்றவள், அவர்களுடைய உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.
‘ஏய்,
என்ன நீ இப்பல்லாம் நம்மள
கண்டுக்கவே மாட்டீங்கறே.. மனசுல பெரிய டயானான்னு
நினப்போ.. அம்மிணிக்கு இங்கிலாந்து இளவரசர் வருவாங்களாக்கும். ..’
‘நீ
மெக்கானிக்கா இருந்துகிட்டு மெக்கானிகல் எஞ்சினீயர்னு பொய் சொன்னது சரியா.
எங்கப்பாகிட்ட உன்னை எப்படி அறிமுகப்படுத்துறது.
நான் இன்னும் படிச்சே முடிக்கல..
இஞ்சினீயரிங் கோர்ஸ் முடிய இன்னும்
1 வருசம் இருக்கு. எம்.இ. படிக்கலாம்னு
இருக்கேன். இப்ப என் மனசில
படிப்பை தவிர வேற நெனப்பு
ஏதுமில்ல. என்னை நம்பு.. வீட்டுல
தெரிஞ்சா கொன்னுப்புடுவாங்க’
‘ஓ..
முதல்ல அது தெரியலையாக்கும்..
நானு மெக்கானிக்குனு தெரிஞ்சப்புறம் மேடம் அப்படியே தெளிவாயிட்டீங்களோ..’
‘ப்ளீஸ்.
என்னை தொந்திரவு செய்யாதீங்க. என் படிப்பு முதல்ல
முடியட்டும். அப்புறம் பார்க்கலாம்.’
‘ஏய்
எனக்கு எல்லாம் தெரியும்டி.. சத்தமில்லாம
கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கயாச்சும் வெளிநாடு போயிடலாம்னு பாக்குற.. நாங்க
தேவதாசு மாதிரி தாடி வச்சிக்கிட்டு
திரியணுமாக்கும்..’
சொல்லிக்கொண்டே
எதையோ பின் பாக்கெட்டில் எடுக்க
எத்தனித்தான். எல்லாம் ஒரு நொடியில்
நடந்துவிட்டது. அவந்திகா சந்தேகப்பட்டது போலவே அந்தப் பையன்
எடுத்தது ஆசிட் பாட்டில்தான். கோபத்தில்
தான் செய்வது எவ்வளவு பயங்கரமான
செயல் என்று ஏதும்
புரியாமல், எடுத்து
அவளைப் பார்த்து வீச ஆரம்பித்தான். அவந்திகா சற்றும் யோசிக்காமல், சட்டென்று வேகமாகச் சென்று, பக்கத்தில் கிடந்த
ஒரு இரும்பு கம்பியை எடுத்து
அவன் மீது வீச அந்த
வேகத்தில் அவனுடைய குறி தப்பி,
அந்த ஆசிட் புட்டி பக்கத்தில்
இருந்த பழைய காரின் மீது
விழுந்து உடைந்து சில துளிகள்
அந்தப் பையன் மேலேயே தெறிக்க,
அவனுடைய அலறல் உள்ளே வேலை
பார்த்தவர்கள், தெருவில் போனவர்கள் என அனைவர் காதிலும்
விழ, நிமிடத்தில் கூட்டம் சேர்ந்துவிட்டது. அதற்குள்
ஒருவர், ஆம்புலன்சு , காவல் நிலையம் என
அழைத்துவிட, ஒரே கலவரம் ஆகிவிட்டது.
எல்லாம் முடிந்து அந்தப் பெண் பெயரைக்கூட
அப்போதுதான் கேட்டாள், அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாக நடுக்கத்துடனே சாதனா என்று கூறினாள்.
தன்
குழந்தை பெரிய சாதனையாளராக வேண்டும்
என்ற கனவில் பெற்றோர் வைத்த
பெயர். இப்படியொரு சம்பவம் நடந்தது தெரிந்தால்
அவர்கள் மனம் என்ன பாடுபடும்
என்று யோசித்தவாறு அவளை அணைத்தபடி அழைத்துச்
சென்றாள் அவந்திகா. அதிர்ச்சியிலிருந்து சற்றும் மீளாதவளை தான்
வந்த ஆட்டோவிலேயே அவள்
வீட்டில் விட்டுவிட முடிவெடுத்து
கூட்டிச் சென்றாள். ராஜிக்கு ஏனோ திடீரென்று அன்றைய
தினசரியின் தலைப்புச் செய்தியாக வந்த, சிவில் சர்வீஸ்
தேர்வின் பட்டியலில் முதலிடம் பெற்ற டில்லியைச் சேர்ந்த
ஈரா சிங்கால், என்ற பெண்ணின் நினைவு
வந்தது. தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட
ஒரு மாற்றுத் திறனாளி. முதல்
தரத்திற்கு வர வேண்டும் என்ற
நோக்கத்துடன், தன் உடற்குறையை கூட
ஓரங்கட்டிவிட்டு, மீண்டும், மீண்டும் எழுதி நான்காவது முறையாக
தான் நிர்ணயித்த இலக்கை அடைந்துவிட்ட அவரை இன்று
நம் இந்தியாவே அண்ணாந்துப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் அந்த நாலடி உயரமே
இருக்கும் பெண். ஆண்டவன் அருளால்
எந்த குறையும் இல்லாமல் அழகு, அறிவு, நல்ல
குடும்ப சூழல் என அனைத்தும்
அருமையாக அமையப் பெற்ற இந்தப்
பெண் இப்படி மனதில் ஊனத்தை
தானே ஏற்படுத்திக்கொண்டாளே என்று விசனமாக இருந்ததை,
மனம் பொறுக்காமல் அவளிடம் கேட்டும் விட்டாள்.
ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் நொந்து
போயிருந்தவள், அவந்திகாவின் தோளில் சாய்ந்து ஆட்டோ
என்று கூட பாராமல் கதறிவிட்டாள்.
சாதனாவின்
பெற்றோரிடம் மேலோட்டமாக விசயத்தை சொல்லிவிட்டு, அவர்களை சமாதானமும் செய்துவிட்டு
வீட்டிற்கு வரும்போது மனி 9 ஆகியிருந்தது. கணவன்
தனக்காகக் காத்திருந்து எவ்வளவு கோபப்பட்டிருப்பான் என்பது,
அவனிடமிருந்து தனக்கு ஒரு அழைப்புகூட
வராததிலிருந்தே புரிந்து போனது. ஒரு குளியல்
போட்டுவிட்டு மெல்ல
அருகில் வந்தவள், ராம் என்று அத்தனை
அன்பையும் ஒன்று திரட்டி அழைத்து
நடந்ததைச் சொல்ல நினைத்தவள், அவன்
அசந்து தூங்குவது போல பாவனை செய்ததில்
அடங்கி விட்டாள். என்ன சாப்பிட்டானோ என்ற
கவலையில் அடுப்படிக்குச் சென்று பார்த்தாள். தோசை
மாவும், ஊற்றிய அறிகுறியும், பொடி
டப்பாவும் அருகில் இருந்தது. நல்ல
வேளையாக சாப்பிட்டிருக்கிறாரே என்ற நிம்மதியுடன், தனக்கு
ஏதும் சாப்பிட பிடிக்காமல், சாதனா
வீட்டில் குடித்த காபியே போதும்
என்ற முடிவுடன் படுக்கையில் சுருண்டு விட்டாள். ஏனோ மனதில் ஒரு
பாரம் அழுத்தியது. கணவனை அடிக்கடி இப்படி
எரிச்சலூட்டுவது சரியா என்ற ஆதங்கமும்
வந்தது. தன் நிலை அறிந்தும்,
தன் வீட்டை பகைத்துக்கொண்டு காதல்
மணம் புரிந்தவன், அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க
முடியவில்லையே என்ற ஏக்கம் கண்ணீராக
வழிந்தோட, அசதியில் அவளறியாமல் உறங்கிவிட்டாள்.
ராம்,
காலையில் வழக்கம் போல் எழுந்து
வாஷ் பேசினில் பல் விளக்கச் சென்றவன்,
கண்ணாடியில், ஐ லைனர் மூலமாக
‘சாரி’ என்று பெரிதாக எழுதியிருந்ததை
கண்டுகொள்ளாமல் வந்தவன், 7 மணி செய்தி கேட்க
தொலைக்காட்சியை திருகினான். அடுத்த ஐந்தாவது நிமிடம்,
‘போலியோ அட்டாக்கினால், செயலிழந்த கால்களுடன் இருக்கும் அவந்திகா என்ற பெண், ஒரு
கல்லூரி மாணவியை ஆசிட் வீச்சிலிருந்து
காப்பாற்றி சாதனை. வீசிய கயவனையும்
காவல்துறையிடம் ஒப்படைத்தார் என்ற செய்தியைப் பார்த்தவுடன்,
அன்பு மனைவியை வேதனை பட
வைத்துவிட்டோமே என்பதோடு, அவளை, அந்தக் கால்களை, அவள்
இயலாமையை அன்றுதான் முதன் முதலில் பார்ப்பது
போல, பார்த்தது, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. கணவனின் அணைப்பின் இறுக்கமும்,
இதமான முத்தமும், அவன் தன்னை மன்னித்துவிட்டதை
உணர்த்தியது..
உணர்ந்தது நன்று...
ReplyDelete