Wednesday, November 24, 2010

கல்லையும் கரைக்கும்..........காதல்.




காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே காத தூரம் ஓடி ஒளியும் காலம் மலையேறி விட்டது. இன்று பெண் குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதை, தாஙகளே தேர்ந்தெடுக்கக் கூடியத் தெளிவையும், நல்லது, தீயது குறித்த தெளிந்த விழிப்புணர்வும் கொண்டுள்ளார்கள். எந்த விடயங்களையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியத் திறனும் பெற்றிருக்கிறார்கள்.

சில காலம்முன்பு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் சிறந்ததா அல்லது காதல் திருமணம் சிறந்ததா என்று ஒரு விவாதம், “அவள் விகடன்” பத்திரிக்கைக்காக ஈரோடு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தினேன். அதில் பத்து மாணவிகள் கலந்து கொண்டு காரசாரமாக விவாதித்தனர். அதனை சுருக்கமாக இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

ஜான்ஸி : காதலர் தின கொண்டாட்டம் மிகப் பிரபலமானதிலிருந்து புரியவில்லையா, காதலின் உன்னதத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்று.

ஜெயசுதா : நாட்டில் தலை போகிற பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன. காதலர் தின கொண்டாட்டமா முக்கியம்? இது போல தேவையில்லாத கொண்டாட்டங்கள் குறைந்தால்தான் நாடு உருப்படும்.

சத்யா : கல்லைக் கூடக் கரைய வைக்கும் சக்தி உள்ளது காதல். கல்லாய் இருந்த இறைவனைக் கூட உருக வைத்தது ஆண்டாளின் காதல் அல்லவா...?

ஜெயசுதா : தெய்வீகக் காதல் வேறு....மனிதனின் காதல் வேறு. திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை உறவுகளால் மட்டுமே தீர்க்க முடியும்.

ரேணுகா தேவி : வரதட்சணை கொடுமையால் அதிகமா ஸ்டவ் வெடிக்கறது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தாங்க........காதல் திருமணம்னா எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லையே.

கார்த்திகா : பல காதலர்கள் வீட்ல இருந்து பணம் நகையெல்லாம் எடுத்துக்கிட்டுத்தானே ஓடிப்போறாங்க.....சில நேரத்தில் அந்த காரணத்தினாலேயே ஏமாற்றப்படவும் செய்கிறார்கள்.

மேகலதா : சாதி வேறுபாடுகள் ஒழிய உதவுவது காதல்தானே. அரசாங்கமே காதல் திருமணத்திற்கு ஆதரவு கொடுக்கிறதே. பல சலுகைகளும் கொடுக்கிறது. காதல்ல மட்டும் தான் கலப்புத் திருமணம் சாத்தியமாகும்.

நிரஞ்சனா : அரசு பண்றது எல்லாமே, தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகிற வேலைதான். சாதி என்னன்னு கேட்காத பள்ளிக்கூடமும் இல்லை, சாதி இல்லாத சர்டிபிகேட்டும் இல்லை.

சித்ரா : காதல் எப்படிங்க வருது? பெரும்பாலும் வெளித்தோற்றமும், அந்தஸ்தும் பார்த்துத்தானே வருது....?
பெற்றோர் பலதையும் விசாரித்துப் பார்த்து முடிவு பண்ணும் திருமணத்தில் தான் பாதுகாப்பு அதிகம்.

ப்ரியா : அதில மட்டும் என்ன, குழந்தை இல்லேன்னாலோ, அல்லது வேறு ஏதாவது சின்ன பிரச்சனை இருந்தாலோ அதே பெரியவர்களே பார்த்து இரண்டாம் திருமணம் கூட செய்து வைக்கிறார்களே.

ஜான்சி : பெற்றோர் நிச்சயிக்கிற திருமணத்தில் பெண் பார்க்கும் படலம் என்று ஒண்ணு இருக்குமே, அது கொடுமைங்க.... ஆடு மாடு பேரம் பேசுவது போல பெண்ணை கேவலப்படுத்தும் இந்த திருமண பேரம் அவசியமா?

கார்த்திகா : காதல் திருமணத்தில் மட்டும், ப்ளஸ் பாயிண்டெல்லாம் மட்டும் காட்டி அட்ராக்ட் பண்ணுவாங்க. திருமணத்திற்குப் பிறகு மைனஸ் பாயிண்டெல்லாம் தெரியும் போது அப்ப பத்திக்கும்......

ஜெயசுதா : பல காதல் திருமணங்கள் தற்கொலையில் தானே முடிகிறது?
ரேணுகாதேவி : அதற்குக் காரணம் பெரும்பாலும்,பெற்றோராத்தான் இருப்பாங்க. ஈகோ, சாதி வேறுபாடு போன்ற காரணங்களைச் சொல்லியே பிரித்து விடுகிறார்கள். மகிழ்ச்சி, துக்கம் மாதிரி காதலும் ஒரு யதார்த்தமான உணர்வுதானே ?

ப்ரியா : உண்மைதான். காதலியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் இன்னும் உலக அதிசயமாக நிற்கிறது. நிச்சயித்த திருமணம் பண்ணின கண்ணகி சிலை இன்றும் கண்ணீருடன் நீதி கேட்டுக் கொண்டு நிக்குது. அது மட்டுமில்ல. கலப்பு மணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் மிக அறிவாளிகளாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றனவே.


சித்ரா : குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பெரியோர் ஆதரவு அவசியம். அது மட்டுமல்ல, என்னதான் கணவனின் அரவணைப்பும், ஆதரவும் இருந்தாலும், பேறு காலங்களிலெல்லாம் தாயன்பு இல்லாவிட்டால் ஏக்கம் தான் மிஞ்சும்.

ஜான்சி : அதற்காக மனதிற்கு பிடிக்காதவரை மணந்து காலம் முழுவதும் கண்ணீருடன் வாழ்க்கையை நடத்த முடியுமா? மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் உள்ளவங்க தைரியமாக காதலிச்சு கல்யாணம் செய்து, வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம்.

இப்படித்தாங்க நீண்டு கொண்டே போனது விவாதம். இதற்கு தீர்ப்பு நீங்கதான் சொல்லனும்.........

Monday, November 22, 2010

நட்பு சுகமா.......சுமையா....?

வாழ்க்கையில் நாம் அன்றாடம் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஒரு சிலரை பார்த்தவுடன் வெகு நாட்கள் அவர்களுடன் பழகியது போல ஒரு நெருக்கம் உண்டாகும். நம்மையறியாமல் ஒரு நேசமும், பாசமும் உருவாகிவிடும். சில நேரங்களில் இந்த பாசம் நேரில் பார்க்காமல் கூட ஒரு கற்பனை உருவத்துடனே வளர்ந்து வருவதற்கு, நம் பதிவுலக நட்புக்களே ஆதாரம். இந்த பாசமும், நேசமும், முன் ஜென்ம தொடர்போ என்று கூட பல நேரங்களில் நினைக்கத் தோன்றும். நம்மையறியாமல் நம் மனது அவர்களிடம் அதிக உரிமையைக் கூட எடுத்துக் கொள்ளும்.

என் தோழி அஞ்சுவை {அஞ்சனா] என்ற பேரை நான் அஞ்சு என்றுதான் கூப்பிடுவேன் ] நான் சந்தித்தது ஒரு சுவாரசியமான சூழலில்..............

நாங்கள் புதிதாக வீடு வாங்கி குடி வந்திருந்த காலம். அக்கம் பக்கத்தில், 200 அடிக்கு எந்த வீடும் இல்லை. என் இரண்டு குழந்தைகளும் பள்ளி செல்லும் வயது. கணவர் பணி நிமித்தமாக வெளியில் சென்று திரும்ப நேரமானால் கூட அச்சமாகத்தான் இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருந்துவிட்டு முதன் முதலில் தனியே வெளியே வரும் அத்தனை பெண்களுக்கும் ஏற்படக்கூடிய சங்கடம்தான் இது. ஏதோ கண்ணைக் கட்டி ஒரு அத்துவானக் காட்டில் விட்டது போல சோகம்..... வலிய போய் பக்கத்தில் இருப்பவர்களிடம் பழகவும் தயக்கம். கல்லூரிக் காலங்களில் இருக்கும் சகஜ நிலை ஏனோ திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தவுடன், அப்படியே மாறிவிடுகிறது.

உற்றார், உறவினர் என்ற சூழலிலேயே சுழன்று விட ஆரம்பித்துவிடுகிறது. பழைய நட்புக்களைப் பற்றி நினைக்கவும் நேரமின்றிப் போய்விடுகிறது. புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று ஒரு புறம், கணவரும் பணி நிமித்தமாக அதிக,நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயம். வழமையாக நான் தான் மகிழுந்தில் குழந்தைகளை பள்ளியில் சென்று விட்டு விட்டு வருவேன் அன்றும் அப்படி விட்டுவிட்டு, வங்கியில் ஒரு வேலை இருந்ததால் அதையும் முடித்துவிட்டு, வீடு திரும்ப எண்ணி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். கிளம்பிய 5 நிமிடத்தில் ..........

ஈரோட்டில் மேட்டூர் சாலை பிரதான சாலை. மிகப் பரபரப்பான சாலை, பஸ் நிலையமஅருகில் உள்ளதால், எந்நேரமும் சாரி, சாரியாக வண்டிகள் போய்க்கொண்டே இருக்கும். இடது புறம் இருந்த வங்கியிலிருந்து, சாலையின் மேற்குப் புறம் செல்வதற்காக, தெருவை கடக்க வேண்டி, என்னுடைய நான்கு சக்கர வாகனத்தை வேகமாக முடுக்கிவிட, அந்த வேளையில் சரியாக, நேர் எதிரில், ஒரு ஸ்கூட்டர், கண்,மண் தெரியாமல் படுவேகமாக வர, நேராக வந்து வண்டியின், பம்ப்பரில், மோதி, குட்டிக் கரணம் அடித்து சுருண்டு விழுந்ததை முதன் முதலில் கண்ணுக்கு நேராக, அதுவும், என் வண்டியிலேயே....... கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது, அடுத்த நொடி, போக்குவரத்து காவல் அதிகாரி, இதையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர், நேராக வந்து, தவறு அந்த பெருங்குடி மகனார் மீதுதான், என்றும், தவறான பாதையில் அவர் வந்ததையும் சுட்டிக் காட்டி, என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொன்னார். தெய்வாதீனமாக, விழுந்த அந்த மனிதரும் போதை தெளிய, மெதுவாக எழ முயற்சித்தார். ஆனாலும்,எனக்கு, கை, கால்கள் உதறல் எடுத்து, ஒரு அடி கூட நகர மறுக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில்தான், ஒரு பெண்மணி,ஆதரவாக என் தோளில் கை போட்டு, வாருங்கள் போகலாம், என்றார். அந்த நேரத்தில் அவரை யார் என்று கேட்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. தன் கணவருடன் வந்திருந்தவர், அவரை எங்கள் பின்னாலேயே வரச் சொல்லிவிட்டு, என்னை வண்டியை எடுக்கச் சொல்லி, அருகில் அமர்ந்து கொண்டார். எனக்கு அந்த நேரத்தில் தெய்வமே வானத்திலிருந்து இறங்கி வந்தது போல ஒரு உணர்வு. செல்லும் வழியில்தான் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கள் வீட்டின் அருகில் தான் அவர் வீடு என்றும், என்னை அவர் பார்த்திருப்பதாகவும், கூறினார். அவர் தன் பெயரை, அஞ்சனா என்றும், தன் கணவர் வங்கியில் பணிபுரிவதாகவும், ஒரே மகன் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும், தான் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாகவும் கூறினார்.

அன்று முதல் அஞ்சனா எனக்கு அஞ்சுவானார். எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அஞ்சுவின் கணவர் மிக கலகலப்பாக பழகக் கூடிய மனிதர். வலிய சென்று அடுத்தவர்களுக்கு உதவுவதில் அஞ்சுவிற்கு எள்ளளவும் குறைந்தவரில்லை அவர். அவரும் என்னை உடன் பிறவா சகோதரியாகவே நடத்தினார். இருவரும் “மேட் ஃபார் ஈச் அதர்” என்பார்களே, அப்படித்தான் இருப்பார்கள்.மிக அன்னியோன்யமான தம்பதியர் இருவரும். மிகத் தெளிந்த நீரோடையாக இருந்தது இவர்கள் வாழ்க்கை.

ஆனால் விதிக்கு அது பொறுக்கவில்லை போலும். மிக ஆரோக்கியமான உடல் நிலையுடன், அன்றாடம் வாக்கிங், யோகாசனம், தியானம் என்று அழகாக திட்டமிட்ட வாழ்க்கை அவருடையது. அன்றும் வாக்கிங் சென்று விட்டு, வீடு திரும்பியவர், வழியில் பார்த்தவர்களுக்கெல்லாம் காலை வணக்கம் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்றவர், சற்று நேரத்திலேயே அவர்கள் வீட்டில் ஒரே பரபரப்பு. காரில் அவரை தூக்கி வைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. தீடீரென்று அதிகமாக வியர்க்க ஆரம்பித்ததாகவும், உடல் மிகவும் அசதியில் மயக்கமாக இருப்பதாகவும் கூறியதாக பேசிக் கொண்டனர். எந்த வலியோ வேதனையோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றவர், இரண்டு மணி நேரத்திற்குள் அதே புன்னகை மாறா முகத்துடன் வெறும் உடலாக வந்து சேர்ந்தார். “திடீர் மாரடைப்பு” [ Massive attack ] என்றார்கள்.

கூடியிருந்த அனைவரும் கதறியழ, அஞ்சு மட்டும், அப்படியே அசையாமல், அதிர்ச்சி நீங்காதவராக அமர்ந்திருந்தார். வெளியூரில் படித்துக் கொண்டிருந்த மகன் வந்து கதறிய போது கூட எந்த சலனமும் இல்லை அவரிடம். எல்லாம் முடிந்து வீட்டை சுத்தம் செய்து முக்கியமான உறவினர் மட்டும் இருந்து கொண்டிருந்தனர். இன்னும் நம் குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு செய்யும் சடங்குகள் என்னும் கொடுமையிலிருந்து பெரிதாக விடிவு வந்தது போல் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் பொட்டு வைக்க அனுமதிக்கிறார்கள். ஆனால் தாலி வாங்குவது, என்று ஒரு சடங்கு இருக்கிறதே. அது போன்ற கொடுமை ஏதுமில்லை எனலாம்.

விடியற்காலை ஊர் உறங்கும் வேளையில், ஏற்கனவே கைம்பெண்களாக உள்ள சில பெண்கள் வருவார்கள். நெருங்கிய உறவினர், பெண்கள் மட்டும் இருப்பார்கள். அந்தப் பெண்ணை, நிறைய மஞ்சள் பூசி குளிக்க வைப்பார்கள். தலை நிறைய பூ வைத்து, பொட்டு பெரிதாக வைப்பார்கள். நல்ல புடவையும் உடுத்துவார்கள். பின்பு இந்த அலங்காரத்தைக் கண்ணாடியில் காட்டுவார்கள். கட்டிப்பிடித்து, ஒப்பாரி பாட்டு சொல்லி, [அந்த பாட்டைக் கேட்டால் கல் நெஞ்சும் கரையும்] பின்பு, தலையில் உள்ள பூவை பிய்த்துப் போட்டு, பொட்டை அழித்து, தாலியை கழட்டி ஒரு கிண்ணத்தில் பாலை வைத்து அதில் போட்டு விடுவார்கள். கையில் கண்ணாடி வளையல் இருந்தால் அதை உடைப்பார்கள். மற்ற சுமங்கலிப் பெண்கள் இந்த நேரத்தில் அவரைப் பார்க்காவிட்டால் மீண்டும் மூன்று மாதத்திற்கு திரும்பவும் அவரைப் பார்க்கக் கூடாதாம்.........

இந்த சடங்கு நடப்பதற்காக எல்லோரும் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் தான் அஞ்சுவின் மகன், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, தன் அம்மாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்யவே கூடாது என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள், அவன் கேட்பதாக இல்லை. எந்த சடங்கும் செய்ய அனுமதிக்க மாட்டேன். விருப்பப்பட்டவர்கள் மட்டும் இங்கே இருக்கலாம், என்று தெளிவாகக் கூறிவிட்டான். பெரியவர்கள் அவனை பலவாறாக சமாதானம் செய்யவும், தாலியை மட்டும் கழட்டிக் கொள்ள சம்மதித்தான். ஆனால் அதற்காக அஞ்சுவிடம் அந்த பெண்கள் நெருங்கிய போதுதான், அவர் சுய நினைவு பெற்றவராக, ஓ வென கத்த ஆரம்பித்தது தெருவில் இருந்த அனைவரையும் கதி கலங்கச் செய்தது. எனக்கும் ஏதும் புரியவில்லை, அந்த நிமிடம் வரை சொட்டு கண்ணீர் விடாதவர், தாலியை தொட்டவுடன் அவர் கத்தியது, இன்று நினைத்தாலும் கதி கலங்குகிறது.

ஒருவரையும் அருகில் நெருங்கவே விடாமல், என் மடியில் படுத்துக் கொண்டு கதறியழுதது தாங்க முடியாத வேதனை. அன்று ஆரம்பித்த அழுகை முப்பது நாட்கள் இருக்கும் ஓயாத அவர் அழுகை சற்றே ஓய்வதற்கு. திடீரென, இரவு பத்து மணிக்குக்கூட அவர் அம்மா வந்து என்னை அழைப்பார்கள். அஞ்சுவின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையென. நானும் எந்த நேரம் கூப்பிட்டாலும், வீட்டில் போட்டது போட்டபடி உடனே ஒடி விடுவேன். அவரிடம், பல விடயங்களைப் புரிய வைத்து அவர் அழுகையை கட்டுப்படுத்த முயற்சிப்பேன். கொஞ்சம், கொஞ்சமாக தேற ஆரம்பித்தார். மகனுக்காக தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார்.

இதற்குப் பிறகுதான், என்னுடன் பழகுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கணவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் அந்த நேரத்தில். என்னைக் கண்டவுடன், ஏனோ அவருக்கு அழுகை பொங்கி வர ஆரம்பித்தது. நானும் அதை உணர்ந்து, சற்றே அவர் சந்திப்பைக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர் என்னை பார்ப்பதையே தவிர்க்க ஆரம்பித்ததுதான் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை....... நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்தும் பழையபடி அவரால் என்னிடம் பழக முடியவில்லை. அதுதான் ஏன் என்று எனக்கு இன்றும் புரியாத புதிராகவே, மனதை நெருடிக் கொண்டிருக்கிறது. இன்று அஞ்சுவின் மகன் படித்து முடித்து, துபாயில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டான். இவரும் விருப்பு ஓய்வு பெற்று, மகனுடன் துபாய் சென்றுவிட்டார். நாட்டையே விட்டுச் செல்லும் போதுகூட என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.......... அதுதான் ஏன் என்ற காரணம் புரியாமல் என் மனம் குழம்பித் தவிக்கிறது............ மனித மனம் என்றுமே ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது அல்லவா?

Thursday, November 18, 2010

மணமும்.........மனிதமும்.




திருமணம் என்றாலே பல லட்சங்கள் செலவு செய்து அதில் பல ஆயிரங்கள் விரயம் ஆவது, இப்படி வழமையாக நடந்து கொண்டிருந்தாலும், இன்று மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு உண்டாகி இருப்பதும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

இன்று ஈரோடை மாநகரில், குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. வெகு விமரிசையாக நடந்த அந்த திருமண மண்டபத்தில் ஒரு ஆச்சரியமான விடயமும் நடந்தது. பொதுவாக திருமணம் முடிந்தவுடன் தாம்பூலப்பையில், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு இப்படி ஏதாவது போட்டுக் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த திருமணத்தில் வித்தியாசமாக மரக்கன்றுகள், தாம்பூலப்பையில் போட்டு அனைவருக்கும் கொடுத்தார்கள். சராசரியாக 1000 தாம்பூலப்பைகள். ஒரு பையில் 2 அல்லது 3 மரக்கன்றுகள்.



ஈரோடு, குமாரபளையம் SSM பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்
திரு முத்துசாமி அவர்கள் தன் மகன் திருமணத்தில்தான் கொடுத்துள்ளார். இது பற்றி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலரான, அவரிடம் கேட்டபோது, “ மக்களிடம் மரம் வளர்க்கும் ஆர்வத்தை அதிகரிப்பதுடன், இன்று சுமாராக 2500 மரக்கன்றுகள் [ மலை வேம்பு, குமிள் தேக்கு, நாவல் மரம் ] மற்றும் மகிழம்பூ, மல்லி, செண்பகம் போன்ற பூச்செடிக் கன்றுகள் ஆகியவைகள் கொடுத்துள்ளோம். இத்தனைக் கன்றுகளையும் இன்று ஊர் முழுவதும் அவரவர் இல்லங்களில் வைக்கும் போது, ஊர் பசுமையாவதுடன், மரம், செடிகள் வளர, வளர, கரியமல வாய்வினால் ஏற்படக்கூடிய மாசு கட்டுப்படுவதுடன், மரங்களைக் காணும் போதும் அதன் குளிர்ச்சியை அனுபவிக்கும் போதும், தங்கள் நினைவும் அவர்களுக்கு பசுமையாக இருப்பதுடன், மனதார வாழ்த்தவும் செய்வார்களே. இவ்வரிய திட்டம் செயல்படுத்துவதற்கு முழு காரணம் கவிந்தப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் PG. Asst. ஆக இருக்கும் தம் மனைவி யசோதாதான் “, என்கிறார் பெருமை பொங்க. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தம் மகள் திருமணத்திலும் இது போல் 3200 மரக்கன்றுகள் அவர்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 17, 2010

30க்குப் பிறகும் இளமை வேண்டுமா.......?



” எப்படி மேடம் நீங்க எப்பவுமே இவ்வளவு உற்சாகமாக இருக்கீங்க ? உங்களுக்கு டென்சனே வராதா ? பிரச்சனைகளே கிடையாதா ? “

வங்கியில் வேலை பார்க்கும் என் கசினைப் பார்த்து பல வருட காலமாக இப்படி கேட்காதவர்களே இல்லை எனலாம். அவ்வளவு உற்சாகமானவர் அவர். அவருடன் பழகும் நபரும் வெகு எளிதில் அதே மூடுக்கு வந்துவிடுவார்கள். இது அவருக்கு மட்டும் எப்படி சாத்தியம் என்று ஆய்ந்த போதுதான் எனக்கு பல உண்மைகள் புரிந்தது.......

இளமையை விரும்பாதவர்கள் இந்த உலகில் எவரும் இலர். பிரச்சனை இல்லாத மனிதரே இவ்வுலகில் இருக்க முடியாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான தீர்வு அந்த பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே உண்டு. அதாவது நம்மிடமேதான் அதற்கான தீர்வு உண்டு. ஆனால் அதை உணர்வதற்கு நோயற்ற தேகமும், அமைதியான மனதும் அவசியமாகிறது. இதைச் சாதிப்பதற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம்தான் ‘வாக்கிங்’. சுகமான நடை. எந்த விசேடமான முயற்சியும் இதற்காக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

எல்லா வயதினருக்கும் வாக்கிங் செல்வது நல்ல பழக்கமாக இருந்தாலும், 30, 40, 50 - களில் இருப்பவர்களுக்கு மிகவும்விசேடமான பலன்களை அளிக்கவல்லது. எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாது 30 வயதிற்குப் பிறகு வரக்கூடிய பெரும்பாலான நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. எப்படி என்கிறீர்களா ? மேலே படியுங்கள்.

பெரும்பாலானவர்கள் முப்பது வயதில் வாழ்க்கையின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகின்றனர். குழந்தைகளும், பொறுப்புகளும் மட்டுமல்லாமல் எடையும் கூடிப்போய் விடுகிறது. பெண்களென்றால், இப்பிரச்சனை இரட்டிப்பாகிறது. அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வின்படி பொதுவாகவே பெண்கள் முப்பது வயதில் சுறுசுறுப்பு குறைந்து காணப்படுவதாக கூறுகின்றனர். எடை கூடுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகிறது. இன்று பெரும்பாலானவர்கள் கணிணித்துறை போன்றவற்றில் பணிபுரிபவர்கள் அதிகப்படியான நேரங்களை உட்கார்ந்தே கழிப்பதனால் உணவின் செரிமானத்தின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. உடலில் பல கோளாறுகள் உறுவாக இதுவே முதற்காரணமாகி விடுகிறது.

உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் இந்த நிலையை மாற்றி, கட்டுக்குலையாத மேனியை அளிப்பதுடன் அத்தோடு குறைந்த கலோரி உணவையும் உண்ணும் போது பலன் இரட்டிப்பாகிறது. அதாவது தினமும் 40 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வாரத்திற்கு நான்கு நாட்களும், மற்ற மூன்று நாள்கள் மற்ற உடற்பயிற்சி செய்தாலே போதும் என்கிறார் மில்லர் என்ற ஆய்வாளர். இதுவே ஆரோக்கியமான வாழ்விற்கு மூலதனமாகும்.

வாக்கிங் போவதால் கிடைக்கக்கூடிய மற்றொரு பலன் - முழு நேர சக்தி. காலை அல்லது மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், சக்தியுடனும் இருக்க முடிகிறது. 40 வயதுகளில் வாழ்க்கையில், பல முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிடுவதால், அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதால், அதன்பின் விளைவுகளை சமாளித்தாக வேண்டியுள்ளது. இதற்கும் வாக்கிங் போவதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கலாம்.

ஸ்ட்ரெஸ் விடுதலை :- ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது இரத்தக் கொதிப்பும் இதயத் துடிப்பும் அதிகமாகிறது. அழுத்தம் அதிகமாகும் போது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதால், சாதாரண சளியிலிருந்து, கான்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் எளிதாக தாக்கிவிட வாய்ப்பு உள்ளது. வாக்கிங் செல்லும் போது நம் மூளைப்பகுதி பீட்டா எண்டார்ப்பின்ஸ் [ Beta Endorphins] அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் நாள் முழுவதும் கலகலப்பாக இருப்பதற்கு வழி கிடைத்து, மனச்சோர்வு, கவலை முதலியவற்றிற்கு டாடா காட்டலாம்.

நோய் தடுப்பு :- வாக்கிங் அல்லது சாதாரண உடற்பயிற்சி பழக்கம் உள்ள்வர்களால் கான்சர் போன்ற வியாதிகளினால் இறப்பு நேர்வதைக்கூட தள்ளிப்போட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல் 50 சதவிகிதம் இதய நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். வாக்கிங் போன்று மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் பக்கவாதத்தைக் கூட [ஸ்ட்ரோக் ] தடுக்க முடியுமாம்.

தோல் சுருக்கம் :- வயது ஏறி, சதை குறைய ஆரம்பிக்கும் போது தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. முறையான உடற்பயிற்சி இதனைக் கனிசமாகக் குறைக்கிறது. தேவையான சதையும் கூடி, தோல் சுருங்குவதையும் கட்டுப்படுத்துகிறது.

50 வயது, மெனோபாஸ் காலம், ஹார்மோன்கள் மிகக் குறைவாக சுரக்கக்கூடிய காலமாதலால், பலவிதமான மாற்றங்களை உடல் எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஒரு சில எளிதான உடற்பயிற்சிகள் இந்த வயதிற்குரிய பல பிரச்சனைகளை எளிதாக தடுத்து நிறுத்தி விடுகிறது. முதுமையை வெல்ல வேண்டுமானல் இன்றிலிருந்து வாக்கிங் செல்ல ஆரம்பியுங்கள்.

இதயத்தைப் பாதுகாக்கக் கூடிய ஈஸ்ட்ரோஜன் இழப்பினால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், HDL என்கிற நன்மை கொழுப்பை அதிகப்படுத்தி, LDL எனப்படும் தீய கொழுப்பை குறைத்து இரத்தக் கொதிப்பையும் தடுக்க வாக்கிங் உதவுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய தூக்கமின்மையை சரிகட்டி, ஆழ்ந்த அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

மூட்டு வலி :- உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனையால், லட்சக்கணக்கானவர்கள், வயது வரம்பின்றி, பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவையான வாக்கிங், அத்துடன் எளிமையான உடற்பயிற்சி இவை கொண்டே பெரும்பாலும் சரி செய்து கொள்ளலாம். அதிகமான வலி நிவாரணிகள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற, ஹார்மோன் குறைபாட்டினால், எலும்பு வலுவிழந்து, முறிவு ஏற்படக்கூடிய அபாயத்திலிருந்து வாக்கிங் காப்பாற்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவையனைத்திற்கும் மேலாக “வாக்கிங்”, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்லது. சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றம் இவையெல்லாம் வாக்கிங் வழங்கும் போனஸ்!

Sunday, November 14, 2010

தொடரும் நினைவுகள்!




நான் இறக்கப் போகிறேன்
என் கூடு கலைந்து போனது
என் குஞ்சுகள் நசுங்கி போயின
என் இணை இன்னுயிர் ஈந்தது.

அழகான குடையாக விரிந்த பச்சை மரம்
செம்மலர் நிறைந்த பரந்து விரிந்த கிளைகள்
அதில் அன்னிய புட்டங்களின் அஞ்ஞாத வாசம்
இன்பமாய் கொஞ்சிக் குலவிய இனிய நேரம்

வழமையாய் உண்டு, உறங்கி, களைப்பாறி
புதிதாய்ப் பிறந்து எழுந்து வெளியேறி
இணையை குஞ்சுகளுக்கு காவலாக்கி
இறை தேடி இறகு விரித்து மலையேறி

அந்தி மயங்கும் பொன்மாலை வேளை
இறையோடு இருப்பிடம் நாடி
குஞ்சுகளையும், இணையையும் தேடி
ஓடி, ஓடி களைத்து இறக்கப் போகிறேன்!

குடியிருந்த குச்சு வீடும் காணவில்லை
கூடு இருந்த சுவடும் இல்லை
கொஞ்சிக் குலாவ குஞ்சுகளும் இல்லை
அள்ளி அணைக்க இணையும் இல்லை.

அழைப்பு மணியோசை இடியெனத்தாக்க
நெஞ்சுக்கூடு விம்மி தெறிக்க
வியர்வை வெள்ளம் ஆறாய்ப்பெருக
இறக்கப் போகிறேனா நான் ?

ஆயிரத்து ஒன்னாம் முறையாக வந்த சொப்பனம்!
உலுக்கி எடுத்து அழைக்கும் தர்மபத்தினி
மரம்வெட்டியின் நாராசமான அழைப்பு
பகல் சொப்பனம் பலிக்காவிட்டாலும்
இன்னுமொரு பாபக் கணக்கா..........ஐயோ வேண்டாமே!

மரங்கள் வளர்ப்போம்!!
வனத்தைக் காப்போம்!!

Wednesday, November 10, 2010

INDIAN SHAME

* மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறை ஒழிப்பில் மெத்தனம் : அரசுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம். [நவம்பர் 09/2010 , செய்தி ]

மனிதக் கழிவை மனிதனே அகற்றும் உலர் கழிப்பிட முறையை ஒழிப்பதிலும் அந்த பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி தில்லி உள்ளிட்ட சில மாநில அரசுகளுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இது ஒரு அரசியல் சாசன விடயம். இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்த நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கும் என்றும் பெஞ்ச் தெரிவித்தது.



இந்தியாவின் அவலம்

அவமானம், கீழ்தரமான, மனிதாபிமானமற்ற, சங்கடப்படுத்துகிற, அருவருப்பான, மனிதத்தின் அவமதிப்பு - இது தான் “கைகளினால் கழிவை அகற்றும் முறை “. - மனிதக் கழிவை மனிதனே அகற்றும் அவலம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், மனிதனின் கழிவை, மனிதனே கைகளால் அள்ளி, தலையில் அல்லது இடுப்பிலோ,தோளிலோ கூடையில் வைத்து சுமந்து, ஒரு வேளை நல்ல நேரம் வாய்க்கப் பெற்றவராக இருக்கும் பட்சத்தில், தள்ளு வண்டி கிடைக்கும்.

பல்லாண்டு காலமாக இந்தக் கொடுமையான முறையை முற்றிலுமாக ஒழிக்க, புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. கூட்டமைப்புகளும் கமிஷன்களும் நிறுவப்பட்டுள்ளன. சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான பணமும் செலவிடப்பட்டுள்ளன. ஆனால் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இந்த மனிதத்தை அவமதிக்கக்கூடிய செயல் நம்மிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது.

2002-2003 இல், ச்மூக நீதித்துறை அமைச்சகம், 6.76 லட்சம் கழிவை அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாகவும், 92 லட்சம் உலர் கழிவறைகள், 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவி இருப்பதாகவும், ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் கழிவுப் பணியாளர்கள் சங்கம் [SKA] தனிப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து, 2003 இல் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். பல மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்,குறிப்பிட்ட அந்தத் தொழிலைச் செய்பவர்கள் வேறு தொழிலுக்கு மாறிவிட்டதாகவும் தீவிரமாக மறுத்தனர். மாநிலங்களின் உச்சநீதி மன்றங்கள் பதிலளிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆயின. பலரும் உலர் கழிப்பறையே இல்லை என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர். அதிலிருந்து விவாதங்கள் தொடர்ந்தன. SKAவின் தேசிய அமைப்பாளரான பெஸ்வாடா வில்சன், இந்தப் பிரச்சனை, அறிவுறுத்துவதற்காகவோ, மாற்று உபாயம் நிர்ணயிப்பதோ குறித்தது அல்ல. இது ஒரு சமுதாயப் பிரச்சனை. அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் இல்லாத நிலையில்,கிடைத்த தகவல்களின் கொண்டு, மாதிரிக் கணக்கெடுப்பை செய்த போது 13 லட்சம் பணியாளர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என்று கூறினார். 1993 இல், வில்சன், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணி மற்றும் உலர் கழிவறை கட்டுவதை தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மேலும் சில மாநிலங்களில் இதனை கடைப்பிடிப்பதற்கு மேலும் 10 ஆண்டுகள் ஆயின. சில மாநிலங்கள் இச்சட்டத்தை, தங்களிடம் எந்த கழிவுகள் அகற்றும் துப்புரவு தொழிலாளிகளும் இல்லை என்று கூறி நிராகரித்தனர். சில மாநிலங்களோ SKA அமைப்பு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து ஏற்றுக் கொண்டன.

ஒரு பிரச்சனை இருப்பதை ஒப்புக் கொள்லாவிடில் எங்கனம் அதற்கான தீர்வைக் காண இயலும் ?

தன்னுடைய 9 வது வயதிலிருந்து, ஒரு துப்புரவுத் தொழிலாளியாக[இன்று 20] இருக்கும் மீனா, தான் முதன் முதலில் ஒரு கூடையில் கழிவுகளை சுமந்து சென்ற போது, வழுக்கி கீழே விழ, கழிவுகள் தன் மீதே கொட்டிவிட, கூடையும் மிக அருவருப்பான நிலையில் இருந்ததால் ஒருவரும் தன்னைத் தூக்கிவிட முன்வரவில்லை என்பதை நினைவு கூறுகிறார். மற்றொரு துப்புரவு தொழிலாளி வந்து தூக்கிவிடும் வரை அதே இடத்தில் அப்படியே சுருண்டுக் கிடந்ததை எண்ணி இன்றளவும் மாய்ந்து போகும் மீனா, அந்த நாளில், இந்த உலகத்திலேயே மிக துரதிருஷ்டமான குழந்தை தான் மட்டுமே என்று நொந்துப் போனதாகவும் சொல்கிறார். அவருடைய கணக்குப்படி இது போன்ற தொழில்புரிபவர்கள் 100 முதல் 150 குடும்பங்கள் வரை உள்ளதென்கிறார்.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கமும் இருந்தது. அதையும் இத்தொழிலாளர்களே சென்று சுத்தம் செய்தனர். மீனா எப்படியோ சிரமப்பட்டு படித்து பள்ளியிறுதியாண்டு வரை முடித்திருக்கிறார். ஆனாலும் இக்கல்வி எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவர் மேலும் கூறியதாவது,

“பரம்பரை பரம்பரையாக இதுதான் எங்கள் குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு வேலை எவரும் கொடுக்கத் தயாராகவும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், என் தாய் என் தந்தையை திருமணம் செய்து கொண்டதே அவர், அதிகமாக அள்ளக்கூடிய ஜனசந்தடி அதிகம் உள்ள இடத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதால்தான்.”

மீனாவின் கணவன் முகேஷ் நந்த நகரியில் பொதுக்கழிப்பறையில் பணிபுரிகிறார். முகேஷ் அரசாங்கத்துறை துப்புரவுப் பணியில் சேர விரும்பினாலும், அதற்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததால், அதையும் கைவிட்டு, அன்றாடம் ரூ100 வாங்கும் கூலித் தொழிலாளியாக பணியமர்ந்தார். இதிலும் கொடுமை என்னவென்றால், அந்த சொற்ப கூலியிலும் ஒரு பகுதியை காவல்துறையினருக்குக் கொடுக்க வேண்டுமென்பதுதான்.

மீனாவின் தாய் சாரதா, அந்தப்பகுதி குடியிருப்பில் வீட்டிற்கு ரூ10 வாங்கிக் கொண்டு, பத்து உலர் கழிவறைகளை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறார். தேவையான தண்ணீர் கூட இல்லாத நிலையில் தானும் தன் கணவனும் சேர்ந்து உடைந்த பிளாஸ்ட்டிக் துண்டுகளைக் கொண்டு, சுரண்டி அள்ளி கூடையில் போட்டுக் கொண்டு செல்வதாகக் கூறுகிறார். இவருடைய கவலையே தன் கூடை பிய்ந்துப் போனதால் புதிய கூடை வாங்க ரூ 70 ஆகுமே என்பதுதான்.

மகாத்மா காந்தியின் குஜராத்தில் கூட தங்கள் கழிவறையை தாங்களே சுத்தம் செய்ய கற்றுக் கொள்ளவில்லை. 55,000 பணியாளர்கள் வரை குஜராத்தில் உள்ளனர். மாநில அரசும், அவர்களுக்குரிய பணப்பட்டுவாடாவை செய்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இந்தத் தொழிலாளர்கள் இதுதான் தங்கள் தலைவிதி என்று நம்ப ஆரம்பித்ததால் இதைப்பற்றி பேசவும் விரும்பவில்லை.

மற்றொரு முக்கியமான தடை ரயில்வேத்துறை. இரயில் தண்டவாளங்கள் கைகளினாலேயே சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயம், திறந்த வெளி கழிவறைத்திட்டம்.

இதனைத் தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்து 13 ஆண்டுகளில் ஒரு வழக்கு கூட வரவில்லை. இந்தச்சட்டம் 1 வருட சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டுமோ கொண்டது. இந்தச்சட்டம் ஒரு திட்டம் போல்தான் செயல்பட்டது.

அரசாங்கம், கடன் வழங்குதல், மானியம் அளித்தல், என்று பல திட்டங்கள் மூலம் முன்னேற்றத்தை ஊக்குவித்தாலும் பெரிய பலன் ஏதுமில்லை.

SKA அளித்த அறிக்கையில் பெரும்பாலான பணியாளர்கள் இரத்த சோகை, வாந்தி, பேதி போன்ற நோய்களுக்குப் பலியாவதாகக் கூறுகிறது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பலர் கார்பன் மோனாக்ஸைட் விசவாயுவினால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது.

அரசியல்வாதிகளும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் உள்ளது. தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்று ஓட்டுப் பெறுவதற்கு துருப்புச் சீட்டாக இதை பயன்படுத்த இயலாது என்பதுதான்.

நன்றி - FRONTLINE - Sept - 09/22/2006.


Tuesday, November 9, 2010

தாயிற்சிறந்த கோயில் இல்லை......

நன்றி - தினமலர்.



* பெற்ற தாயை மறந்த பிள்ளைகள்: பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற நோயாளிகள் அதிகளவில் தஞ்சம் புகுந்துள்ளனர். நீலாங்கரையைச் சேர்ந்த இந்திரா எஸ்தர் [60] இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிகப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பிறகும் டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச் செல்ல உறவினர்கள் வராத நிலையில் இன்று, தற்போது மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மழையிலும், குளிரிலும், தவித்துக் கொண்டிருக்கிறார். பத்மாவதி, சீனிவாசன், கோடிஸ்வரன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தும் தனக்கு இப்படிப்பட்ட நிலை என்று நொந்துப் போய் கூறுகிறார், எஸ்தர். இது போன்ற பிள்ளைகளை முதியோர் பராமரிப்புச் சட்டத்தில் தண்டிப்பதுதான் இந்திரா எஸ்தர் போன்றோரை காப்பாற்ற சிறந்த வழி

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...