பவள சங்கரி
ஜனவரி 20, 2014 திங்கட்கிழமை மாலை தொடங்கி, கடந்த மூன்று நாட்களாக கோவை மெடிகல் சென்டர், மருத்துவ மையத்தில் ’தாயகம் கடந்த தமிழ் ’ என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 19ம் நாள், கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான,மருத்துவர். நல்ல பழனிசாமி அவர்களின் முயற்சியால், ”தமிழின் வளம் தமிழர் நலம்” என்னும் இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் பண்பாட்டு மையம். ‘எங்கெங்கு காணினும் தமிழனடா’ என்று சொல்லும் அளவிற்கு, உலகம் முழுவதும் பரவி வாழும் நம் தமிழர்களின் ஆழ்ந்த மொழிப்பற்று, எத்தகையச் சூழலிலும், எதுவிதமான நெருக்கடியிலும் உயிர்ப்போடு வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழிக்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற உயிர்த் துடிப்பில் உருவானதுதான் இம்மையம். நம் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வளமை குறித்து அளவற்ற பெருமிதம் கொள்ளும் அளவிற்கு, நாம் எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கு ஒரு செல்வமாக இதனை அளித்துவிட்டுப் போகும் பொறுப்பு எனும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற கருத்தின் ஆணி வேருக்கு உரம் இடும் வகையில், தமிழ் மக்களிடம், தமிழ் ஓர் உலகளாவிய மொழி உலகின் பல பகுதிகளிலிருந்தும் அது கொடைகள் பெறுகிறது என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும் . அப்படிச் செய்வதால் இயல்பாக தமிழர் மனதில் எழும் பெருமித உணர்வு, தமிழ் மொழியைத் தொடர்ந்து மேன்மைப்படுத்தி காப்பாற்றி வரக்கூடும் என்ற சீரிய ஆக்கப்பூர்வமான, உளவியல் அணுகுமுறையிலான சிந்தனையுடன் 12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்க்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தி சிறப்பித்தார்கள். முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.